பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள வழிமுறைகளில், அநீதிக்கு எதிராக அறிவுபூர்வமான கேள்விகளை எழுப்புவதன் வாயிலாக ஜனநாயக நடைமுறையில் மாற்றத்தை உருவாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்: பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 29 AUG 2026 3:31PM by PIB Chennai

டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 'கற்பி, அணிதிரள், போராடு' என்ற தாரக மந்திரம் என்பது அறிவை வளர்த்துக்கொள்வதுடன், வன்முறையற்ற அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றி அநீதிக்கு எதிராகக் கேள்வி கேட்பது மற்றும் ஜனநாயக நடைமுறைகள் மூலம் மாற்றத்தைக் கொண்டுவர ஒன்றிணைவது என்பதையே குறிக்கிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய அவர், சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள நடைமுறைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். டாக்டர் அம்பேத்கர் அரசியலமைப்புச் சபையில் ஆற்றிய இறுதி உரையில், சமூக மற்றும் பொருளாதார நோக்கங்கள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றியே அடையப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஜனநாயக மற்றும் அரசியலமைப்புச் சட்டம் சார்ந்த வழிமுறைகள் உள்ள நிலையில், வன்முறை, அராஜகம் அல்லது அரசியலமைப்புக்கு முரணான வழிமுறைகளைக் கையாள்வதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்று பாபாசாகேப் அம்பேத்கர் கூறியுள்ளதை அமைச்சர் எடுத்துரைத்தார்.

நீதி, சமத்துவம், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய குறிக்கோள்களுடன் உத்வேகம் பெற்று, நாட்டைக் கட்டமைப்பதில் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க ஏதுவாக இளைஞர்களைத் தயார்படுத்துவதில் பல்கலைக்கழகங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். முழுமையான கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், உண்மையான கல்வி என்பது சிந்திக்கும் மற்றும் புரிந்துகொள்ளும் திறனை வளர்ப்பதுடன், நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறன்களையும் வளர்க்கிறது என்றார். தனிநபர்கள் தங்களது அறிவைச் சமூக நன்மைக்காகப் பயன்படுத்தக் கற்பிப்பதும், நாட்டின் மாண்பு மற்றும் ஜனநாயக விழுமியங்களை இளைஞர்களிடையே நிலைநிறுத்துவதும் அவசியம் என்று திரு ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304498&reg=3&lang=1

***

SS/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2304547) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati