மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுடன் ரக்ஷா பந்தனைக் கொண்டாடினார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 AUG 2026 5:01PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, ரக்ஷா பந்தனின் முக்கிய விழுமியங்களான அன்பு, அக்கறை, பாதுகாப்பு ஆகியவற்றைச் சுற்றுச்சூழல் அம்சத்திலும் செயல்படுத்துமாறு பள்ளி மாணவர்களை இன்று (28.08.2026) வலியுறுத்தினார். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், மரங்கள் உட்பட அனைவருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடிய அன்பின் பிணைப்பை இந்தப் பண்டிகை அடையாளப்படுத்துகிறது என்றும் அவர் மேலும் கூறினார். அவர், குடியரசுத்தலைவர் மாளிகையில் நாடு முழுவதிலுமிருந்து வந்த பள்ளி மாணவர்களுடன் ரக்ஷா பந்தனைக் கொண்டாடினார்.
சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்த குடியரசுத்தலைவர், உயிர்வாழ்வதற்குத் தேவையான சமநிலையைப் பேணுவதற்காக, செடிகளுக்கும் மரங்களுக்கும் ராக்கி கட்டுமாறு மாணவர்களைக் கேட்டுக்கொண்டார். மாணவர்களே நாட்டின் எதிர்காலம் என்பதை வலியுறுத்திய அவர், மரங்களை நட்டுப் பராமரிக்கும் இந்தத் தீர்மானம் வாழ்நாள் அர்ப்பணிப்பாக மாற வேண்டும் என்றும் கூறினார்.
89 மாணவர்கள், 32 ஆசிரியர்கள் உட்பட 122 பேர் இந்த சிறப்புக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். 17 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம், கேந்திரிய வித்யாலயா சங்கம், நவோதயா வித்யாலயா சமிதி ஆகியவற்றிலிருந்து வந்த பிரதிநிதிகளில், 13 சிறப்புத் திறன் குழந்தைகளும் அடங்குவர்.
தேசிய தலைநகருக்கான தங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக, மாணவர்கள் நேற்று (ஆகஸ்ட் 27, 2026) பிரதமர் அருங்காட்சியகத்திற்குச் சென்றனர். இன்று (28.08.2026) குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மாணவர்கள் அமிர்த தோட்டத்தைப் பார்வையிட்டனர். நாளை (ஆகஸ்ட் 29, 2026) தங்கள் கல்விப் பயணத்தின் ஒரு பகுதியாக, அவர்கள் தேசிய அறிவியல் மையம், தேசிய போர் நினைவகம், இந்தியா கேட் ஆகிய இடங்களுக்குச் செல்லவுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304278®=3&lang=1
(Release ID : 2304278)
****
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2304442)
வருகையாளர் எண்ணிக்கை : 8