PIB Backgrounder
azadi ka amrit mahotsav

இந்தியாவின் பணப் பரிவர்த்தனை முறையை மாற்றியமைத்த யுபிஐ

இடுகை இடப்பட்ட நாள்: 24 AUG 2026 2:19PM by PIB Chennai

இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக் கட்டமைப்பு கடந்த பத்தாண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் எளிய, பாதுகாப்பான கட்டண வசதியை உறுதி செய்யும் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் இந்த கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்திய தேசிய பரிவர்த்தனை கழகத்தால் (என்பிசிஐ) உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த பரிவர்த்தனை முறையான ‘யுபிஐ’, நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனைப் புரட்சியின் அடித்தளமாக உருவெடுத்துள்ளது. தற்போது இந்தியாவின் நிகழ்நேரக் கட்டணத் தளமான யுபிஐ அமைப்பானது சர்வதேச அளவில் 11 நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. அண்மையில் கிரீஸ், மாலத்தீவு ஆகிய நாடுகள் இந்தத் தளத்தை ஏற்றுக்கொண்டுள்ளன.

பல்வேறு வங்கிக் கணக்குகளை ஒரே கைபேசிச் செயலி மூலம் கையாளும் வசதி, பணப்பரிமாற்றம், வணிகக் கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு வங்கிச் சேவைகளை ஒருங்கிணைப்பதாலும், 24 மணி நேரமும் தடையின்றி இயங்கும் திறன் ஆகியவற்றாலும் யுபிஐ நாட்டின் நிதிப்பரிவர்த்தனை நடைமுறையை முழுமையாக மாற்றியமைத்துள்ளது. இருபடிநிலை அங்கீகாரம், நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் பணப்பரிவர்த்தனைகளின் நம்பகத்தன்மை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 21 உறுப்பினர் வங்கிகளுடன் முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்ட யுபிஐ, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து நேரடி வங்கிப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க, 2016 டிசம்பரில் பிம் செயலி அறிமுகமானது. 2017-ல் டைனமிக் க்யூஆர் குறியீடு முறை, 2018-ல் மேம்படுத்தப்பட்ட யுபிஐ 2.0 ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. இதில் இன்பாக்ஸில் விலைப்பட்டியல், குறிப்பிட்ட கால இடைவெளியிலான தானியங்கிக் கட்டணங்களுக்கான யுபிஐ மேண்டேட்ஸ், மிகைப்பற்று கணக்கு இணைப்பு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டன. 2019-ல் பங்குச்சந்தை முதலீடுகளுக்கும் யுபிஐ-ல் வழிவகை செய்யப்பட்டதுடன், அதே ஆண்டில் மாதத்திற்கு 100 கோடி பரிவர்த்தனைகள் என்ற மைல்கல்லை எட்டியது.

2020 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் தொடர் சந்தாக்கள், பயன்பாட்டுக் கட்டணங்களைச் செலுத்த ஆட்டோபே முறை கொண்டுவரப்பட்டது. சாதாரண கைபேசிப் பயனாளர்களும் பயன்பெறும் வகையில், ஐவிஆர் எண், தவறவிட்ட அழைப்பு முறை அடிப்படையிலான யுபிஐ 123 பே அறிமுகமானது. குறைந்த மதிப்பிலான கட்டணங்களை விரைவாகச் செலுத்த, யுபிஐ லைட், கடன் அட்டைகளை இணைக்கும் வசதி ஆகியவை சேர்க்கப்பட்டன. 2021-22-ம் நிதியாண்டில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பரிவர்த்தனைகளை யுபிஐ கையாண்டது. பூடானில் தனது சேவையைத் தொடங்கி சர்வதேச அளவிலும் விரிவடைந்தது. 2023-24 நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் யுபிஐ சுமார் 70 சதவீதப் பங்களிப்பைக் கொண்டிருந்தது.

2016-17 நிதியாண்டில் 2 கோடியாக இருந்த வருடாந்திரப் பரிவர்த்தனை எண்ணிக்கை, 2025-26 நிதியாண்டில் சுமார் 12,000 மடங்கு அதிகரித்து 24,162 கோடிக்கும் மேலாக உயர்ந்துள்ளது. 2026 ஜூலை மாதத்தில் மட்டும் 741 நேரடி வங்கிகளின் பங்களிப்புடன், ரூ.29.87 லட்சம் கோடி மதிப்பில் 2,365.8 கோடி பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளன.

சர்வதேச அளவில் நிகழ்நேரக் கட்டணப் பரிவர்த்தனை எண்ணிக்கையில் யுபிஐ 49 சதவீதப் பங்கை வகிக்கிறது எனச் சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது. பூடான், நேபாளம், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், இலங்கை, மொரீஷியஸ், கத்தார், கம்போடியா, கிரீஸ், மாலத்தீவு ஆகிய நாடுகளில், எல்லை தாண்டிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளை யுபிஐ சாத்தியமாக்கியுள்ளது. எளிய பயன்பாடு, நவீன வசதிகள் மூலம் இந்தியாவின் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பில் யுபிஐ முக்கியச் சக்தியாக உருவெடுத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302664&reg=3&lang=1

****

SS/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2302909) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , Bengali , Bengali-TR