திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
நாடு தழுவிய கிளவுட் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் திறன் மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம்
प्रविष्टि तिथि:
23 AUG 2026 4:27PM by PIB Chennai
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகமும், கால்டஸ் எஜுகேஷன் நிறுவனமும் இணைந்து அமேசான் வெப் சர்வீசஸ் ஆதரவுடன் நாடு தழுவிய கிளவுட் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
இத்திட்டம், ஏடபிள்யூஎஸ் டிஜிட்டல் பயிற்சிப் பாடத்திட்டத்தின் வாயிலாக 1.5 லட்சம் பேருக்கு அடிப்படைச் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கணினி சார்ந்த அறிவை வழங்கும். தனிநபர்கள் கிளவுட் கம்ப்யூட்டிங் திறன்களை வளர்த்துக்கொள்ள உதவுவதோடு மட்டுமல்லாமல், பங்கேற்பாளர்களை உள்ளூர் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளுடன் இணைக்கும் இலவச, குழு அடிப்படையிலான பணியாளர் திறன் மேம்பாட்டுப் பயிற்சியாகவும் இது விளங்குகிறது. இதில் பயிற்சி பெறும் பட்டதாரிகள் தகுதியான வேலைவாய்ப்பு நேர்காணல்களில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவர்.
குறிப்பாக, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள இளைஞர்கள் எதிர்கொள்ளும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்சார் சவால்களுக்குத் தீர்வுகாண்பதை இந்தத் திட்டம் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஜெயந்த் சௌத்ரி கூறுகையில், இந்த முன்முயற்சி 'விக்சித் பாரத்' தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிக்கிறது என்றார். இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த இளைஞர்கள் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்குத் தேவையான அதிநவீனத் திறன்களைப் பெறுவது மிகவும் இன்றியமையாதது என்று அவர் தெரிவித்தார். மேலும், இத்தகைய திட்டங்கள் அனைவரையும் உள்ளடக்கிய, எதிர்காலத்திற்குத் தயாரான திறமையான பணியாளர் குழுவை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302495®=3&lang=1
***
SS/PLM/PD
(रिलीज़ आईडी: 2302538)
आगंतुक पटल : 17