மருந்துகள் துறை
azadi ka amrit mahotsav

உலகின் மருந்தகம் என்ற நிலையிலிருந்து, உலகின் ஆய்வகம் என்ற நிலையை இந்தியா அடைவதற்குச் செயற்கை நுண்ணறிவு உறுதுணையாக இருக்க வேண்டும் மத்திய அமைச்சர் திருமதி அனுப்ரியா படேல்

प्रविष्टि तिथि: 22 AUG 2026 4:03PM by PIB Chennai

ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம், உலகின் மருந்தகம் என்ற நிலையிலிருந்து உலகின் ஆய்வகமாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் கூறினார்.

​அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம் வளாகத்தில் இன்று, 'சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துதல்' என்ற கருப்பொருளில் நடைபெற்ற சுகாதார உச்சி மாநாட்டின் மூன்றாவது பதிப்பில் உரையாற்றிய அமைச்சர், கொவிட்-19 பெருந்தொற்றின்போது உலக நாடுகளுக்கு இந்தியா வழங்கிய பங்களிப்பை எடுத்துரைத்தார். இந்திய மருந்து உற்பத்தித் துறை, 200-க்கும் அதிகமான நாடுகளுக்குத் தடுப்பூசிகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பொருள்களின் தடையற்ற விநியோகத்தை உறுதிசெய்ததாகவும், அதே நேரத்தில் இந்தியாவின் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 220 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

​செயற்கை நுண்ணறிவின் மாற்றியமைக்கும் திறன் குறித்துப் பேசிய அமைச்சர், மேம்படுத்தப்பட்ட பரிசோதனை, மருத்துவ முடிவெடுத்தல், நோய் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் மருந்துக் கண்டுபிடிப்புப் பணிகளை விரைவுபடுத்தவும், தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சைகளைச் செயல்படுத்தவும், சுகாதாரச் சேவையை வலுப்படுத்தவும் அதன் ஆற்றல் பயன்படும் என்பதை விரிவாக எடுத்துரைத்தார்.

​நோயாளிகளின் தனியுரிமைக்கான வலுவான பாதுகாப்புடன், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு பாதுகாப்பானதாகவும், பொறுப்பானதாகவும், மனிதனை மையமாகக் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்றும், இத்தொழில்நுட்பம் மனித மருத்துவ நிபுணத்துவத்திற்கு மாற்றாக அமையாமல் அதற்குத் துணை நிற்பதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

​அரசு, கல்வித்துறை, சுகாதார நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை ஆகியவற்றுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதன் மூலம், திட்டமிடல் நிலையிலிருந்து நாடு தழுவிய அளவிலான செயலாக்கத்திற்கு முன்னேற வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். மேலும், புதுதில்லி எய்ம்ஸ், சண்டிகர் பிஜிஐஎம்இஆர், ரிஷிகேஷ் எய்ம்ஸ் ஆகிய மருத்துவ நிறுவனங்களில் சுகாதாரத் துறைக்கான செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

​மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302328&reg=3&lang=1

****

SS/SV/RJ


(रिलीज़ आईडी: 2302379) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Gujarati , English , Urdu , हिन्दी , Marathi