PIB Backgrounder
பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டு இயக்கம் பழங்குடியினரின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
20 AUG 2026 11:03AM by PIB Chennai
இந்தியாவின் 10.4 கோடி பழங்குடியின மக்களில் பலர் தங்களது ஆண்டு வருமானத்தில் 20 முதல் 40 சதவீதம் வரை வனங்களிலிருந்து கிடைக்கும் பொருட்கள் மூலம் ஈட்டுகின்றனர். தேன், தெண்டு இலை, இலுப்பை பூ, புளி, அரக்கு, மூங்கில், காட்டுத் தாவரங்கள் உள்ளிட்ட சிறு விளைபொருட்கள் அவர்களின் வாழ்வாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவற்றை இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு விற்பதால், பழங்குடியின மக்கள் தங்களது உழைப்புக்கு உரிய வருமானத்தைப் பெற முடியாத நிலை இருந்து வந்தது. இதனை மாற்றும் வகையில், பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2021-22-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், பழங்குடியின மேம்பாட்டு மையங்கள் மூலம் பழங்குடியின மக்களை ஒருங்கிணைத்து, பொருட்களை விற்பவர்கள் என்ற நிலையிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை உருவாக்கும் தொழில் முனைவோராக மாற்றுகிறது. இதுவரை 4,172 பழங்குடியினர் மேம்பாட்டு மையங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2,911 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் 12.48 லட்சம் பழங்குடியின உறுப்பினர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். 2026-ம் ஆண்டு ஜூலை 31 நிலவரப்படி, இம்மையங்கள் மூலம் சுமார் ரூ.168 கோடி மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
பழங்குடியின மக்களிடமிருந்து வனம் சார்ந்த பொருட்களை முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும் நடைமுறையும் செயல்படுத்தப்படுகிறது. பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் வனம் சார்ந்த 87 பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டுள்ளது. 2013-14-ம் ஆண்டு முதல் இத்திட்டத்தின் கீழ் 2,67,954 மெட்ரிக் டன் பொருட்கள் ரூ.693.98 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
பழங்குடியின மக்களை சுயஉதவிக் குழுக்களாக ஒருங்கிணைத்து, 15 சுயஉதவிக் குழுக்களை உள்ளடக்கிய ஒரு பழங்குடியினர் மேம்பாட்டு மையம் உருவாக்கப்படுகிறது. இதில் சுமார் 300 பழங்குடியின மக்கள் இடம்பெறுவர். திறன் மேம்பாட்டுப் பயிற்சி, அறிவியல் சார்ந்த சேகரிப்பு முறைகள், முதன்மை பதனப்படுத்தும் கருவிகள், சேமிப்பு, போக்குவரத்து, நிதி உதவி ஆகியவை வழங்கப்படுகின்றன. உள்ளூர் சந்தைகள், கண்காட்சிகள், இணையவழி விற்பனைத் தளங்கள் மூலம் சந்தை வாய்ப்புகளும் ஏற்படுத்தப்படுகின்றன.
இந்த நடவடிக்கைகள் குறிப்பாக பழங்குடியினப் பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுகின்றன. அருணாச்சலப் பிரதேசத்தின் லெபரடா மாவட்டத்தில் செயல்படும் பழங்குடியினர் மேம்பாட்டு மையத்தில் 300 பெண்கள் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், விவசாயிகள் இணைந்து உள்ளூர் விளைபொருட்களிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரித்து வருகின்றனர். 2022-23-ம் ஆண்டு முதல் இம்மையம் ரூ.11 லட்சம் மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்துள்ளது.
வனம் சார்ந்த வளங்களை அடிப்படையாகக் கொண்ட வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, சமூக உரிமையை நிலைநாட்டுவதோடு, சந்தையில் போட்டித்திறனையும் உருவாக்கும் வகையில் பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டு இயக்கம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பழங்குடியின மக்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி, 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய நாட்டின் பயணத்தில் அவர்களின் பங்களிப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301419®=3&lang=1
***
SS/PD/SH
(रिलीज़ आईडी: 2301663)
आगंतुक पटल : 8