இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
2036 ஒலிம்பிக் போட்டிகளுக்காக நாடு தழுவிய திறமையாளர்கள் தேடல் - சுதந்திர தின உரையில் பிரதமர் அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
15 AUG 2026 4:22PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி தில்லி செங்கோட்டை கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் விளையாட்டுகள், இளைஞர்களின் முக்கியப் பங்கை எடுத்துரைத்தார்.
விளையாட்டுச் சூழல் அமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பிரதமர் சுட்டிக் காட்டினார். டாப்ஸ் திட்டம் மகத்தான வெற்றியை அடைந்துள்ளது எனவும், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள், பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள், குளிர்கால விளையாட்டுப் போட்டிகள், கடற்கரை விளையாட்டுப் போட்டிகள், விளையாட்டு உள்கட்டமைப்பு, விளையாட்டுப் பயிற்சி, விளையாட்டு மருத்துவம், விளையாட்டு ஊட்டச்சத்து என விளையாட்டின் அனைத்து பிரிவுகளிலும் சிறந்து விளங்குவதை நோக்கி இயந்தியா முன்னேறி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
நாட்டின் இளைஞர்களுக்காக ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ஒரு திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், தனியார் துறையில் வேலை பெறும் ஒவ்வொரு இளைஞருக்கும் அரசு ரூ.15,000 வழங்கும் என்று அவர் தெரிவித்தார். நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அவர் கூறினார். இத்திட்டம் சுமார் 3.5 கோடி இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் கூறினார்.
2036 ஒலிம்பிக் போட்டிகள் இந்தியாவில் நடைபெற வேண்டும் என்று அரசு விரும்புவதாக அவர் கூறினார்.
2036-ம் ஆண்டுக்கு நமக்கு விளையாட்டு வீரர்கள் தேவை என்றால், 5, 10 அல்லது 15 வயதுடைய இளம் சிறுவர் சிறுமியர் மீது நாம் இன்றே கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே உள்ள விளையாட்டுத் திறமையைக் கண்டறிய, நாடு முழுவதும் உள்ள கிராமங்கள், நகரங்கள், பள்ளிகளில் திறன் தேடல் இயக்கம் நடத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.
இந்த இயக்கத்தின் மூலம் அடையாளம் காணப்பட்ட குழந்தைகளின் திறன்கள் மதிப்பிடப்பட்டு, அவர்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திறன் கொண்ட விளையாட்டு வீரர்களாக உருவாக உதவும் வகையில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299884®=3&lang=1
****
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2300137)
வருகையாளர் எண்ணிக்கை : 44