PIB Backgrounder
azadi ka amrit mahotsav

இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியத்தை மீட்டெடுத்தல்

प्रविष्टि तिथि: 14 AUG 2026 2:42PM by PIB Chennai

இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியம் நாட்டின் நாகரிக அடையாளத்தைப் பிரதிபலிக்கிறது. டிஜிட்டல்மயமாக்குதல், சுற்றுலா உள்கட்டமைப்பு மேம்பாடு, கலாச்சாரப் பாதுகாப்பு ஆகியவற்றுடன் நாட்டின் கலாச்சார வளங்களைப் பாதுகாக்கவும் புத்துயிரூட்டவும் அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இத்தகைய தொடர்ச்சியான முயற்சிகள் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதோடு, உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கும் நாட்டின் கலாச்சார அடையாளத்தைப் பாதுகாப்பதற்கும் பெரிதும் உதவுகின்றன.

பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்கும் நோக்கில் ‘பாரம்பரியத்தை தத்தெடுப்போம் 2.0' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் பார்வையாளர்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்த இத்திட்டம் வழிவகை செய்கிறது. பிரசாத் திட்டத்தின் கீழ் ஆன்மீகத் தலங்களில் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தேசிய சுற்றுலா திட்டம், சவால் அடிப்படையிலான சுற்றுலாத் தல மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை சுற்றுலாத் தலங்களின் வளர்ச்சியை நவீன முறையில் முன்னெடுத்துச் செல்கின்றன. தொல்லியல் துறை நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களைப் பாதுகாத்து மேம்பாட்டுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தேசிய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் இயக்கத்தின் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வரலாற்றுச் சின்னங்கள் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட புனிதத் திருமேனிப் பொருட்கள், தொல்பொருட்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. புத்தரின் புனிதச் சின்னங்கள் பல்வேறு நாடுகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டு நல்லுறவு மேம்படுத்தப்பட்டுள்ளது. அருங்காட்சியக மானியத் திட்டம் மூலம் புதிய அருங்காட்சியகங்களை உருவாக்குவதற்கும், செயல்பாட்டில் உள்ளவற்றை நவீனப்படுத்துவதற்குமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குஜராத் மாநிலம் வடநகரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் தொல்லியல் அனுபவ அருங்காட்சியகம் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியாவில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரியக் சின்னங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஞான பாரதம் இயக்கம் மூலம் பழங்கால ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஜதன் மென்பொருள் மூலம் நாட்டின் பல்வேறு அருங்காட்சியகங்களில் உள்ள தொல்பொருட்கள் குறித்த விவரங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு இணையத்தில் மக்கள் பார்வைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாஷினி, பாரத்ஜென் போன்ற தளங்கள் மூலம் பிராந்திய மொழிகளும் பழங்குடியின மொழிகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

வேத கால அறிவு சார்ந்த மரபுகளைப் பாதுகாக்கும் நோக்கில் வேத பாரம்பரிய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய திரைப்பட பாரம்பரிய இயக்கத்தின் மூலம் இந்தியாவின் நூற்றாண்டு காலத் திரைப்பட வரலாற்றைக் பாதுகாக்கும் வகையில் பழம்பெரும் திரைப்படங்கள் மீட்டெடுக்கப்பட்டு டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்படுகின்றன. மும்பையில் உள்ள இந்திய சினிமாவுக்கான தேசிய அருங்காட்சியகம் நாட்டின் சினிமா வரலாற்றை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் செயல்பட்டு வருகிறது. அரசின் இத்தகைய முயற்சிகள் நாட்டின் கலாச்சார வளங்களைப் பாதுகாப்பதோடு, எதிர்கால சந்ததியினருக்கு அவற்றை எளிதில் கொண்டு சேர்க்கவும் வழிவகை செய்கின்றன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299368&reg=48&lang=2

****

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2299683) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati