கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
கலங்கரை விளக்கங்களைச் சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
प्रविष्टि तिथि:
11 AUG 2026 3:46PM by PIB Chennai
இந்தியாவில் பாதுகாப்பான கடல்சார் போக்குவரத்தை உறுதிசெய்யும் கலங்கரை விளக்கங்களை சுற்றுலாத் தலங்களாகவும், கடல்சார் பாரம்பரிய மையங்களாகவும் மேம்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 2021-ஆம் ஆண்டின் கடல்சார் வழிகாட்டு உதவிச் சட்டத்தின்கீழ், கல்வி, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா நோக்கங்களுக்காகக் கலங்கரை விளக்கங்களைப் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கலங்கரை விளக்கத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் கடல்சார் வரலாற்றை விளக்கும் அருங்காட்சியகங்கள் சென்னை, மாமல்லபுரம், முட்டம், ஆலப்புழா, கண்ணூர், துவாரகை மற்றும் கோப்நாத் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க 75 கலங்கரை விளக்கங்களில் சிற்றுண்டிச்சாலைகள், சிறுவர் விளையாட்டுப் பகுதிகள், ஒளி ஒலி நிகழ்ச்சிகள், திறந்தவெளி திரையரங்குகள், குடிநீர் வசதிகள் மற்றும் மின் தூக்கிகள் போன்ற பல்வேறு சுற்றுலா வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் சென்னை, மாமல்லபுரம், முட்டம், கன்னியாகுமரி, தனுஷ்கோடி, பாம்பன், பூம்புகார், பழவேற்காடு, நாகப்பட்டினம் உள்ளிட்ட 15 முக்கியக் கலங்கரை விளக்கங்கள் சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்தப்பட்டுள்ளன.
இத்தகவலை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297603®=3&lang=1
****
TV/SE/SH
(रिलीज़ आईडी: 2297857)
आगंतुक पटल : 15