இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர் உறுதிமொழி இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்: மத்திய இணையமைச்சர் திருமதி ரக்ஷா கட்சே
இடுகை இடப்பட்ட நாள்:
09 AUG 2026 6:25PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட நாடு தழுவிய இயக்கமான வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர் உறுதிமொழி இயக்கத்தை பரந்த மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா கட்சே கூறியுள்ளார். இந்த இயக்கம் தொடர்பாக, ஆன்மீக நிறுவனங்கள், சமூக அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஒரு சிறப்புக் கூட்டம், ஜல்காவ்ன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (09.08.2026) நடைபெற்றது.
இதில், காணொலிக் காட்சி மூலம் உரையாற்றிய திருமதி ரக்ஷா கட்சே, ஜல்காவ்ன் மாவட்டத்தில் நடைபெறும் போதைப் பொருள் ஒழிப்பு இயக்கத்தில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். நமது இளைஞர்களின் ஆற்றல் போதைப் பொருளுக்கு அடிமையாகாமல், தேசத்தைக் கட்டமைப்பதில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார். இந்தத் தீர்மானத்தை ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் கொண்டு சென்று, அதை ஒரு பரந்த மக்கள் இயக்கமாக மாற்றுவதே அரசின் முயற்சி என்று அவர் தெரிவித்தார். ஆரோக்கியமான, வலுவான போதைப்பழக்கமற்ற இளைஞர் தலைமுறையே வளர்ச்சியடைந்த பாரதத்தின் உண்மையான பலம் என்று அவர் தெரிவித்தார். போதைப் பொருள் இல்லாத சமுதாயத்தைக் கட்டியெழுப்ப, அரசுடன் துறவிகள், ஆன்மீக நிறுவனங்கள், சமூக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைவது அவசியம் என்று திருமதி ரக்ஷா கட்சே கூறினார்.
பல்வேறு ஆன்மீக, சமய நிறுவனங்களின் பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296858®=48&lang=1
****
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2296900)
வருகையாளர் எண்ணிக்கை : 44