மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
குழந்தைகளின் இணையப் பாதுகாப்பை உறுதிசெய்ய சட்ட விதிகளையும் சர்வதேச நடைமுறைகளையும் ஆய்வு செய்யும் மத்திய அரசு
இடுகை இடப்பட்ட நாள்:
05 AUG 2026 4:41PM by PIB Chennai
கல்வி மற்றும் தொடர்புகளுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் உதவினாலும், இணையவழித் துன்புறுத்தல் மற்றும் ஆபத்தான உள்ளடக்கங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் அபாயங்களை அரசு உணர்ந்துள்ளது. இதற்காகச் சர்வதேச அளவிலான இணையப் பாதுகாப்பு நடைமுறைகளைக் கவனித்து, உள்நாட்டுக் கொள்கைகளை அரசு மறுபரிசீலனை செய்து வருகிறது.
தகவல் தொழில்நுட்ப விதிகள் மற்றும் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் ஆகியவை குழந்தைகளின் இணையப் பாதுகாப்பை உறுதிசெய்கின்றன. இதன்படி, குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் சட்டவிரோத உள்ளடக்கங்களைச் சமூக வலைதளங்கள் உத்தரவு கிடைத்த 3 மணி நேரத்திற்குள் அகற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளின் தரவுகளைப் பயன்படுத்தப் பெற்றோரின் ஒப்புதல் அவசியமாக்கப்பட்டுள்ளதோடு, குழந்தைகளைக் குறிவைத்து விளம்பரங்கள் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்திய நீதிச் சட்டம் மற்றும் போக்சோ சட்டங்களின் கீழ், இணையக் குற்றங்களைச் சமூக வலைதளங்கள் உடனடியாக அதிகாரிகளிடம் புகாரளிக்க வேண்டும். இதனுடன், 'தகவல் பாதுகாப்பு கல்வி மற்றும் விழிப்புணர்வு' திட்டம் மற்றும் கல்வி அமைச்சகத்தின் 'பிரக்யாதா' வழிகாட்டுதல்கள் மூலம் பள்ளி மாணவர்களிடையே சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294905®=3&lang=1
செய்தி அடையாள எண் 2294905
***
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2295606)
வருகையாளர் எண்ணிக்கை : 54