PIB Backgrounder
வலுவான சட்டம், பாதுகாப்பான தேர்வுகள்: வினாத்தாள் கசிவைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
31 JUL 2026 11:57AM by PIB Chennai
அரசுத் தேர்வுகளை எழுதும் லட்சக்கணக்கான இளைஞர்களின் உழைப்பையும் நம்பிக்கையையும் பாதுகாக்கும் வகையில், பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) சட்டத் திருத்த மசோதா 2026 மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவு, திட்டமிட்டு நடைபெறும் குற்றங்கள் ஆகியவற்றைத் தடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) சட்டம் 2024-ஐ மேலும் பலப்படுத்தும் வகையில் இந்த புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய முறைகேடுகளால் அநீதி இழைக்கப்படும் மாணவர்களுக்கு விரைவான நீதியை உறுதி செய்யவும், முறைகேடுகளில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கவும் இச்சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது.
இப்புதிய மசோதாவின் கீழ், தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடும் தனிநபர்களுக்கான சிறைத்தண்டனை 5 முதல் 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளதோடு, அபராதத் தொகை 50 லட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடத்தும் அமைப்புகள் முறைகேட்டில் ஈடுபட்டால் 5 கோடி ரூபாய் வரை அபராதமும், 8 ஆண்டுகள் தேர்வு நடத்தத் தடையும் விதிக்கப்படும். திட்டமிட்டு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், குறைந்தபட்சம் 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். வழக்கு விசாரணையைத் தீவிரப்படுத்த மத்திய அரசால் பிரத்தியேக சிறப்புப் பணிக்குழுவை அமைக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக, காவல் துறையோ, மத்திய புலனாய்வு அமைப்போ அல்லது சிறப்புப் பணிக்குழுவோ விசாரணையைத் தொடங்கிய இரண்டு மாதங்களுக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் யூனியன் பிரதேசத்திலும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையுடன் சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்பது இந்த மசோதாவின் முக்கிய அம்சமாகும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட மூன்று மாதங்களுக்குள் இந்த நீதிமன்றங்கள் விசாரணையை முடித்துத் தீர்ப்பளிக்க வேண்டும். தீர்ப்புகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மூன்று மாத காலத்திற்குள் இந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைக்க வேண்டும்.
இத்தகைய கடுமையான சட்ட விதிகள், விரைவான விசாரணை நடைமுறைகள், காலக்கெடுவுடன் கூடிய நடவடிக்கைகள் தேர்வு முறைகேடுகளைத் தடுத்து, பொதுத் தேர்வு முறையின் நம்பகத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் நிலைநாட்டும். நேர்மையாகத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பாதுகாப்பானச் சூழலை உருவாக்கி, இந்தியாவின் எதிர்காலத் தூண்களான இளைஞர்களின் நலனைப் பாதுகாப்பதில் இச்சட்டத் திருத்தம் மிக முக்கியப் பங்காற்றும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292218®=3&lang=1
***
SS/PD/SE
(रिलीज़ आईडी: 2292661)
आगंतुक पटल : 14