சுற்றுலா அமைச்சகம்
உலகளவில் சுற்றுலாவிற்கு உகந்த நாடாக இந்தியாவை மேம்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இடுகை இடப்பட்ட நாள்:
27 JUL 2026 6:01PM by PIB Chennai
இந்தியா மீதான நம்பிக்கை என்ற முத்திரையின் கீழ், இந்தியாவை உலகளவில் விருப்பமான சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான உத்திசார் கட்டமைப்பை உருவாக்க, புது தில்லியில் இன்று, மத்திய சுற்றுலா அமைச்சகம், ஏர் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் செயலாளர் திரு. புவனேஷ் குமார், கூடுதல் செயலாளர், தலைமை இயக்குநர் (சுற்றுலா) திரு. சுமன் பில்லா, இணைச் செயலாளர் திரு. ஹரிகிஷோர் எஸ், ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி திரு. நிபுன் அகர்வால், அதன் நிர்வாகம், இடர் மேலாண்மை, இணக்க நடைமுறைகள், பெருநிறுவன விவகாரங்களுக்கான குழுத் தலைவர் திரு. பி. பாலாஜி, மத்திய சுற்றுலா அமைச்சகம், ஏர் இந்தியா நிறுவனத்தின் பிற மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் முயற்சிகள், ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் விரிவான உள்நாட்டு, சர்வதேச விமான சேவைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, நாட்டின் சுற்றுலாத் துறைக்கு உத்வேகம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை அதிகரிப்பது, உள்நாட்டில் சுற்றுலாவை வலுப்படுத்துவது, உலகளவிலான போக்குவரத்து, பயண மையமாக நிலைநிறுத்துவது ஆகிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்த ஒப்பந்தத்தின் நோக்கங்களாகும். இந்த ஒத்துழைப்பு வணிகம் சாராத, சட்டப்பூர்வமாக பிணைக்கப்படா, பிரத்யேக உரிமை சாராத ஒப்பந்தம் ஆகும். இதில் இரு தரப்பினருக்கும் எந்தவித நிதிப் பொறுப்பும் இணைக்கப்படவில்லை.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் தேதியிலிருந்து, தொடக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும். இரு தரப்பினரின் பரஸ்பர சம்மதத்தின் பேரில் இது மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.
உலகளவில் சுற்றுலாத் துறைக்கு உகந்த இடமாக இந்தியாவை வலுப்படுத்துவதற்கும், சுற்றுலாத் தலங்களின் செயல்பாடுகளை அதிகரிக்கவும், ஒருங்கிணைந்த விளம்பர முயற்சிகள் மூலம் சர்வதேசப் பயணிகள் இந்தியா குறித்து அறிந்து கொள்வதற்கும் அதிக அளவிலான வாய்ப்புகளை வழங்கவும், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290038®=3&lang=1
(Release ID: 2290038)
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2290134)
வருகையாளர் எண்ணிக்கை : 46