ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'வீவ்ஸ் ஆஃப் இந்தியா' திருவிழா இந்தியாவின் தலைசிறந்த கைத்தறிப் பாரம்பரியத்தைக் காட்சிப்படுத்துகிறது

प्रविष्टि तिथि: 24 JUL 2026 7:24PM by PIB Chennai

மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் உள்ள கைத்தறி துறை புது தில்லி, ஜன்பத்தில் 'இந்தியாவின் நெசவுகள்' (வீவ்ஸ் ஆஃப் இந்தியா) என்ற திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது. ஆகஸ்ட் 7-ம் தேதி கொண்டாடப்படும் 12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நடைபெறும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்தத் திருவிழா 2026 ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 7 வரை பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும்.

இந்த விழா, இந்தியாவின் வளமான, பன்முகத்தன்மை வாய்ந்த கைத்தறி மரபுகளின் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட கொண்டாட்டமாக விளங்குகிறது. இது நாடு முழுவதிலுமிருந்து 116 பாரம்பரிய நெசவு வகை கைத்தறிப் படைப்புகளை ஒன்றிணைக்கிறது. தலைமுறை தலைமுறையாக இந்திய நெசவாளர்களால் பாதுகாக்கப்பட்டு வரும் சிறந்த கைவினைத்திறன், கலைச் சிறப்பு, கலாச்சாரப் பாரம்பரியம் ஆகியவற்றை அனுபவிப்பதற்கான ஒரு வாய்ப்பை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.

இந்தக் கண்காட்சியில் ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, மணிப்பூர், சத்தீஸ்கர், பீகார், தெலங்கானா, குஜராத், ஜம்மு காஷ்மீர், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களின் புகழ்பெற்ற நெசவு மரபுகள் இடம்பெற்றுள்ளன. பார்வையாளர்கள் பனாரசி, ஜம்தானி, காஞ்சிபுரம் பட்டு, சம்பல்புரி இக்கட், பைத்தானி, கனி பஷ்மினா, பவன்பூட்டி, கோட்பாட், இல்கல், காசர்கோடு, ஹிம்ரூ மற்றும் ரிஷா உள்ளிட்ட புகழ்பெற்ற கைத்தறி மரபுகளைக் கண்டு ரசிக்கலாம் ; இவை ஒவ்வொன்றும் அதன் பிராந்தியத்தின் தனித்துவமான கலாச்சார அடையாளம் மற்றும் ஜவுளிப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கின்றன.

சிறப்பான ஜவுளிகளைக் காட்சிப்படுத்துவதைத் தாண்டி, இந்த விழா உண்மையான கைத்தறிப் பொருட்களுக்கான பொதுமக்களின் மதிப்பீட்டை வலுப்படுத்துவதையும், நிலையான, அறநெறி சார்ந்த மற்றும் கைவினைஞர்களால் வழிநடத்தப்படும் உற்பத்தி அமைப்புகள் குறித்து பரந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இது தலைசிறந்த நெசவாளர்கள், வடிவமைப்பாளர்கள், சேகரிப்பாளர்கள், வாங்குவோர், ஆய்வாளர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோருக்கு இடையே கலந்துரையாடுவதற்கான ஒரு மதிப்புமிக்க தளத்தையும் வழங்குகிறது.

கைவினைஞர்களுக்கான தொடர்ச்சியான ஆதரவு, வடிவமைப்புப் புத்தாக்கம், சந்தை மேம்பாடு மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலம் நாட்டின் வளமான கைத்தறிப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும், புத்துயிர் அளிப்பதிலும் இந்திய அரசு உறுதியாக உள்ளது. 'இந்தியாவின் நெசவுகள்' திருவிழாவானது, இந்தியாவின் உயிருள்ள ஜவுளிப் பாரம்பரியங்களைக் கொண்டாடுவதன் மூலமும், நாட்டின் கைத்தறி கைவினைஞர்களை ஆதரிக்குமாறு குடிமக்களை ஊக்குவிப்பதன் மூலமும் இந்த உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289127&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2289351) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati