பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
வன்முறையால் பாதிக்கப்பட்ட, மன உளைச்சலில் உள்ள பெண்களுக்கு உடனடி ஆதரவையும் உதவியையும் வழங்கும் ஓரிடத் தீர்வு மையம்
प्रविष्टि तिथि:
24 JUL 2026 1:58PM by PIB Chennai
மகளிர் சக்தி திட்டத்தின் ஓர் அங்கமாக ஓரிடத் தீர்வு மையம் விளங்குகிறது. இது நாடு முழுவதும் தனியார் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்பட்ட, மன உளைச்சலில் உள்ள பெண்களுக்கு ஒருங்கிணைந்த, உடனடி ஆதரவையும் உதவியையும் ஒரே இடத்தில் வழங்குகிறது. இதுவரை, நாடு முழுவதும் 1,033 ஓரிடத் தீர்வு மையங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில், 985 மையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும், இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, அதாவது 2015, ஏப்ரல் 1 முதல் 2026, ஜூன் 30 வரை, நாட்டில் 15.20 லட்சத்திற்கும் அதிகமான பெண்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஓரிடத் தீர்வு மையத்திலும், 1 மைய நிர்வாகி, 2 வழக்குப் பணியாளர்கள், 1 உளவியல் சமூக ஆலோசகர், 1 துணை சட்டப் பணியாளர்/வழக்கறிஞர், 1 துணை மருத்துவப் பணியாளர் உட்பட 13 பேரை நியமிப்பதற்கும் பணியமர்த்துவதற்கும் மத்திய அரசு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு 100% நிதியுதவி வழங்குகிறது. உள்ளூர் தேவைகள், செயல்பாட்டு சாத்தியக்கூறுகள் அடிப்படையில் பணியாளர் அமைப்பில் நெகிழ்வுத்தன்மைக்கான ஏற்பாடும் இதில் அடங்கும். ஓரிடத் தீர்வு மையம் திட்டத்தின் ஒட்டுமொத்த அமலாக்கமும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களின் பொறுப்பில் உள்ளது.
ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், ஆதரவு சேவைகளுக்கான தடையற்ற அணுகலை உறுதி செய்யவும், இதுவரை 657 ஓரிடத் தீர்வு மையங்கள் மகளிர் உதவி எண்ணுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பெண்களை உரிய நேரத்திலும் ஒருங்கிணைந்த முறையிலும் பொருத்தமான சேவைகளுக்குப் பரிந்துரைக்க முடியும். மேலும், உடனடி அவசரகால உதவி மற்றும் திறமையான முகமைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை எளிதாக்குவதற்காக, மகளிர் உதவி எண், அவசரகால ஆதரவு அமைப்பு , குழந்தைகள் உதவி எண் (1098) மற்றும் பிற தொடர்புடைய சேவை வழங்கும் வழிமுறைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
மேலும், மகளிர் சக்தி திட்டத்தின் கீழ் உள்ள பணிபுரியும் பெண்கள் தங்கும் விடுதி, பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ள நகர்ப்புற, புறநகர்ப் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான தங்குமிடங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பணிபுரியும் பெண்கள் மற்றும் வேலைக்காகப் பயிற்சி பெறும் பெண்கள், வாடகைக் கட்டடங்களில் பெண்கள் தங்கும் விடுதியை நடத்துவதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. பெண்கள் தங்கும் விடுதிகளில் வசிப்பவர்களின் குழந்தைகளுக்கு பகல்நேரப் பராமரிப்பு மையம் வழங்குவது இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும். தற்போது, நாடு முழுவதும் 575 பெண்கள் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்திரி தாக்கூர், மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288794®=48&lang=1
***
TV/SMB/SP
(रिलीज़ आईडी: 2289002)
आगंतुक पटल : 14