விவசாயத்துறை அமைச்சகம்
நீர், மண் பாதுகாப்பு மற்றும் சமச்சீர் விவசாயத்தில் கவனம் செலுத்தி சுற்றுச் சூழலையும் வாழ்க்கையையும் பாதுகாக்க வேண்டும் - மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங்
प्रविष्टि तिथि:
12 JUL 2026 7:33PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள பூசா வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிப்பாட்டுத் திட்டம் மற்றும் விருக்ஷ மித்ரா சம்வாத் என்ற நிகழ்ச்சியின் போது, மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான், நாடு முழுவதிலுமிருந்து இணைந்திருந்த சுமார் 17,000 'விருக்ஷ மித்ரா எனப்படும் மரக் கன்று நடும் ஆர்வலர்களிடையே உரையாற்றினார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 'விருக்ஷ மித்ராக்கள்' நேரில் பங்கேற்க, ஆயிரக்கணக்கானவர்கள் இணையவழியாக இணைந்தனர். மரங்கள், நீர், மண், ஆற்றல் சேமிப்பு, நெகிழியில்லா வாழ்க்கை ஆகியவற்றை பொதுமக்களின் பங்கேற்புடன் இணைப்பதன் மூலம் பூமியைக் காக்க வேண்டும் என்ற ஒருமித்த செய்தியை அனைவரும் ஒன்றிணைந்து வழங்கினர்.
மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், 'விருக்ஷ மித்ரா'க்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகள், கலந்துரையாடல்களின் அடிப்படையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு உறுதியான மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கான தெளிவான, எளிமையான செயல் திட்டத்தை முன்வைத்தார். ஒவ்வொரு குடும்பமும் பிறந்தநாள், திருமண நாள், குழந்தை பிறப்பு, பெற்றோரின் புனிதமான நினைவுகள் போன்ற தருணங்களில் ஒரு மரக் கன்றை நட்டு, அவற்றை 'மரத் திருவிழாக்களாக' மாற்ற வேண்டும் என்றும், இதன் மூலம் இந்த பாரம்பரியம் மெல்ல மெல்ல ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பழக்கமாக மாறும் என்றும் அவர் கூறினார்.
தேசிய, மாநில, மாவட்ட, வட்டார, கிராம அளவுகளில் 'விருக்ஷ் மித்ரா பரிவார்' குழுக்களை அமைத்து, இந்த முழுப் இயக்கத்தையும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பில் நடத்துவதற்கும், இந்தக் கட்டமைப்பை முறைப்படி பதிவு செய்வதற்கும், பஞ்சாயத்துகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மரம் நடுவதற்கான நிலையான இடங்களை அடையாளம் காண்பதற்கும் திரு சௌகான் அழைப்பு விடுத்தார்.
இது சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல எனவும், மனித வாழ்விற்கேயான ஒரு நெருக்கடி என்றும் அவர் கூறினார். உயர்ந்து வரும் கடல் மட்டம், அதிகரித்து வரும் வெப்பம், மாசடைந்த காற்று, அசுத்தமான நீர், வேகமாக அழிந்து வரும் பல்லுயிர் வளம் ஆகியவை வரும் தலைமுறையினரின் வாழ்க்கைக்கு நேரடி அச்சுறுத்தல்களாக நிற்கின்றன என்று அவர் தெரிவித்தார். உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளையும் அறிவியல் உண்மைகளையும் சுட்டிக்காட்டி, இப்போது உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், 2050, அதற்குப் பிறகான நிலைமை மிகவும் கவலையளிப்பதாக இருக்கும் என்று அவர் கூறினார்.
இந்திய கலாச்சாரத்தில் மரங்கள், நீரின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்ட மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான், குறிப்பாக 'ஹரியாலி அமாவாசை'யை நினைவு கூர்ந்தார். மகன்களை விட மரங்கள், குளங்கள், நீர்நிலைகளுக்கு நமது பாரம்பரியம் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது என்றும், "ஒரு மரம் பத்து மகன்களுக்குச் சமம்" போன்ற கூற்றுகள் நமது சிந்தனைக்குச் சான்றாகும் என்றும் அவர் கூறினார். இந்தக் கலாச்சார அடிப்படையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று வரும் ஹரியாலி அமாவாசை அன்று, 'விருக்ஷ் மித்ரா பரிவார்' அமைப்பின் முதல் பெரிய தேசிய நிகழ்ச்சி நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த நாளில், நாடு முழுவதும் இணைக்கப்பட்டுள்ள அனைத்து 'விருக்ஷ் மித்ராக்களும்' தத்தமது பகுதிகளில் நிச்சயமாக தலா ஒரு மரத்தை நடுவார்கள் என்றும், மெல்ல மெல்ல இந்த நாள் நாடு முழுவதும் 'மரத் திருவிழா' என்று அறியப்படும் என்றும் மத்திய அமைச்சர் திரு சௌகான் கூறினார். நீர், மண் மற்றும் சமச்சீர் விவசாயத்தில் கவனம் செலுத்தி சுற்றுச் சூழலையும் வாழ்க்கையையும் பாதுகாக்க வேண்டும் என்று திரு சிவராஜ் சிங் சௌகான் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283916®=3&lang=1
****
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2283937)
आगंतुक पटल : 10