மக்களவை செயலகம்
சுகாதார சேவைகளை வலுப்படுத்த அரசும் தனியார் துறையும் இணைந்து செயல்பட வேண்டும்: மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா
प्रविष्टि तिथि:
12 JUL 2026 7:27PM by PIB Chennai
சமூகத்தின் கடைக்கோடி நபருக்கும் தரமான மருத்துவ சேவை சென்றடைய வேண்டும் என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா வலியுறுத்தியுள்ளார். இந்த இலக்கை அடைய அரசும் தனியார் நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார். மகாராஷ்டிராவின் நாசிக்கில் அசோகா சுகாதார நகரத்தை இன்று திறந்து வைத்துப் பேசிய அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
நாசிக்கை ஆன்மீக உணர்வு, சமூக விழிப்புணர்வு, வீரம் ஆகியவற்றின் பூமி என்று குறிப்பிட்ட திரு ஓம் பிர்லா,
12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான புனிதமான திரிம்பகேஷ்வர் மகாதேவ் கோயில், ஆன்மீக ஆற்றலை அளித்து, மக்களுக்குத் தைரியம் கொடுத்து, பொது நலனை நோக்கி சமூகத்தை வழிநடத்துகிறது என்று குறிப்பிட்டார். இப்பகுதியின் வளமான ஆன்மீகப் பாரம்பரியத்தை நினைவு கூர்ந்த அவர், சந்த் ஞானேஷ்வர் மகாராஜ், சந்த் துகாராம் மகாராஜ் ஆகியோரின் போதனைகள் சமூகத்திற்குத் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், சத்ரபதி சிவாஜி மகாராஜின் தைரியமும் வீரமும் நாட்டின் இளைஞர்களுக்குத் தொடர்ந்து உத்வேகத்தையும் வழிகாட்டுதலையும் அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் சுகாதார சேவைகளை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசிய திரு ஓம் பிர்லா, மத்திய அரசு அனைவரின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்த உழைத்து வருவதாகக் குறிப்பிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகவும், இப்போது யோகா உலகெங்கிலும் உள்ள மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். ஆரோக்கியமான, நோயற்ற வாழ்க்கையை உறுதி செய்ய, யோகாவையும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையையும் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் சுகாதார அமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக திரு பிர்லா கூறினார் . மருத்துவ உட்கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது எனவும், மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும், மேலும் ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் திரு ஓம் பிர்லா தெரிவித்தார்.
மகாராஷ்டிர அரசின் உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு சகன் புஜ்பால், ராஜஸ்தான் அரசின் எரிசக்தித் துறை அமைச்சர் திரு ஹிராலால் நகர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283915®=3&lang=1
****
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2283933)
आगंतुक पटल : 12