பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் திரு. நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்:

प्रविष्टि तिथि: 11 MAR 2026 2:39PM by PIB Chennai

கேரள ஆளுநர் திரு. ராஜேந்திர அர்லேகர் அவர்களே, எனது மத்திய அமைச்சரவை சகாக்கள் திரு. சுரேஷ் கோபி அவர்களே, திரு. ஜார்ஜ் குரியன் அவர்களே, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களே, முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ராஜீவ் சந்திரசேகர் அவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!

கொச்சிக்கு வருவது எப்போதும் ஒரு அற்புதமான அனுபவம். இன்று, துடிப்பான இந்த கடற்கரை நகரத்திலிருந்து கேரளாவின் வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. சற்று நேரத்திற்கு முன்பு, கேரளாவின் வளர்ச்சி தொடர்பான சுமார் 11,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன மற்றும் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தத் திட்டங்களுக்காக கேரள மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது அன்பான நண்பர்களே,

தற்சார்பு இந்தியாவை  உருவாக்குவதற்கும், 'இந்தியாவில் தயாரிப்போம்'  திட்டத்திற்கும் பெட்ரோலியத் துறையின் விரிவாக்கம் மிகவும் அவசியமானது. இந்த இலக்கை மனதில் கொண்டுதான் கொச்சி சுத்திகரிப்பு நிலையத்தில் பாலிப்ரோப்பிலீன் பிரிவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த அலகு ஆண்டுதோறும் சுமார் 4 லட்சம் டன் பாலிப்ரோப்பிலீனை உற்பத்தி செய்யும். வரும் காலங்களில், இந்த ஆலை பேக்கேஜிங், ஜவுளி, ஆட்டோமொபைல், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பல தொழில்களுக்குப் பெரும் ஆதரவாக இருக்கும்.

எனது அன்பான நண்பர்களே,

இன்று இந்தியா உற்பத்தியின் முக்கிய மையமாக உருவெடுத்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் செமிகண்டக்டர் துறைகளிலும் நாடு வேகமாக முன்னேறி வருகிறது. இத்தகைய பணிகள் அனைத்திற்கும் அதிக ஆற்றல் தேவைப்படுகிறது - குறிப்பாக பசுமை மற்றும் தூய்மையான எரிசக்தி அதிகம் தேவைப்படுகிறது. சூரிய சக்தி உற்பத்தியில் இந்தியா ஏற்கனவே உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. சூரிய சக்தி உற்பத்தியில் கேரளாவும் மேலும் முன்னேற வேண்டும் என்பதே எங்களது முயற்சி. இந்த நோக்கத்துடன், இன்று மேற்கு கல்லடாவில் 50 மெகாவாட் மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டத்திற்கு  அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான நீர்நிலைகள் உள்ளன, எனவே, மிதக்கும் சூரிய மின்சக்தி துறையில் இங்கு அபாரமான சாத்தியக்கூறுகள் உள்ளன.

எனது அன்பான நண்பர்களே,

நவீன உள்கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதலீடுகளுக்காக இன்று உலகம் இந்தியாவை பெரிதும் பாராட்டுகிறது. இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டிலும்  உள்கட்டமைப்பிற்காக சாதனை அளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பிலான இந்த முதலீட்டினால் கேரளா பெரும் பயனடைந்து வருகிறது. அமிர்த பாரத ரயில் நிலையத் திட்டத்தின் கீழ், ஷோரனூர் சந்திப்பு, குற்றிப்புரம் மற்றும் சங்கனாச்சேரி ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. இதனுடன், ஷோரனூர் - நிலம்பூர் ரயில் பாதையின் முக்கியப் பகுதியில் மின்மயமாக்கல் பணிகளும் நிறைவடைந்துள்ளன. இன்று, பாலக்காடு - பொள்ளாச்சி ரயில் சேவையும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநில மக்களுக்கும் பெரும் வசதியை அளிக்கும்.

எனது அன்பான நண்பர்களே,

இன்று கேரளாவில் பல முக்கியமான சாலைத் திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன. ஆறு வழிச்சாலை அமைப்பதன் மூலம் அழிக்கல் துறைமுகத்திற்கான இணைப்பு மேம்படும். ஆறு வழி கோழிக்கோடு புறவழிச்சாலை போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு பயண நேரத்தையும் மிச்சப்படுத்தும். இந்தத் திட்டங்கள் அனைத்தும் கேரள விவசாயிகளுக்குப் பயனளிப்பதோடு, இங்குள்ள சுற்றுலா மற்றும் இதர தொழில்களுக்கும் ஊக்கமளிக்கும்.

உள்கட்டமைப்பிற்காகச் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் கேரளாவில் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்குப் புதிய வேலைகளை வழங்கும். வளர்ந்த கேரளா என்ற நமது தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இந்தத் திட்டங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!

----

(Release ID:2238112)

AD/VK/KR


(रिलीज़ आईडी: 2281963) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam