பாதுகாப்பு அமைச்சகம்
சாதனை அளவில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி, இந்தியா மீதான உலகளாவிய நம்பிக்கைக்குச் சான்றாக உள்ளது - பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
प्रविष्टि तिथि:
04 JUL 2026 2:27PM by PIB Chennai
கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் பயணம், பற்றாக்குறை என்ற நிலையிலிருந்து தற்சார்புக்கும், தற்சார்பிலிருந்து தன்னம்பிக்கைக்கும், தன்னம்பிக்கையிலிருந்து வளர்ச்சி பெற்ற இந்தியாவைக் கட்டமைப்பதற்குமான ஒரு முன்னேற்றப் பயணமாக அமைந்துள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இன்று, (ஜூலை 04, 2026) புதுதில்லியில் ஊடக ஒன்று அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தனது முதல் பதவிக்காலத்தில் பற்றாக்குறைகளைக் களைந்து, வாய்ப்புகளை விரிவுபடுத்தி, பணி கலாச்சாரத்தை மாற்றியமைத்தது என்றார். இரண்டாவது பதவிக்காலத்தில், அது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து, சாதனைகளாக மாற்றி, நாட்டை தற்சார்புப் பாதையில் உறுதியாக நிலைநிறுத்தியது என்று அவர் தெரிவித்தார். மூன்றாவது பதவிக்காலத்தில், "சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம்" என்ற கொள்கையின் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்து வருவதாக அவர. கூறினார். நான்காவது பதவிக்காலத்தில் வளர்ச்சியடைந்த இந்தியாவின் எழுச்சியை உலகம் காணும் என்று அவர் கூறினார்.
கடந்த 12 ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட மாற்றத்தின் முக்கிய அம்சங்களை எடுத்துரைத்த அமைச்சர், 2014-ல் 'மேக்-இன்-இந்தியா' எனப்படும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தொடங்கப்பட்டபோது, சில தரப்பினர் அதை ஒரு தோல்வி என்று முத்திரை குத்தியதை சுட்டிக்காட்டினார். ஆனால் அந்தத் திட்டம் வெற்றிக்கான புதிய அளவுகோல்களை அமைத்ததுடன், இன்றும் அது தொடர்ந்து வருகிறது என்று அவர் கூறினார். இந்தியாவின் உலகளாவிய அந்தஸ்தில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். முன்பு உலகம் நமது குரலுக்குச் சிறிதும் செவிசாய்க்காத நிலையில், இப்போது உலகளாவிய பிரச்சினைகள் குறித்த இந்தியாவின் கண்ணோட்டத்தை உலக நாடுகள் கவனமாகக் கேட்கின்றன என்று அவர் கூறினார்.
2025-26-ம் நிதியாண்டில் ஆண்டு பாதுகாப்புத் தளவாட உற்பத்தி ரூ.1.78 லட்சம் கோடி என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது என்றும், இது 2014-15-ம் நிதியாண்டின் அளவை விட மூன்று மடங்கு அதிகம் என்றும் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 2013-14-ம் நிதியாண்டில் ₹686 கோடியாக இருந்த பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி, இப்போது ₹38,000 கோடியைத் தாண்டி சாதனை அளவை எட்டியுள்ளது என்று அவர் கூறினார். இது கிட்டத்தட்ட 57 மடங்கு அதிகம் எனவும் 'மேக்-இன்-இந்தியா' போன்ற திட்டங்கள் மீதான உலகளாவிய நம்பிக்கையை இது எடுத்துக் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேக்-இன்-இந்தியா திட்டத்தின் கீழ் மொபைல் உற்பத்தி, வாகன ஏற்றுமதி, உள்நாட்டு ரயில் இன்ஜின் உற்பத்தி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் விரிவாக்கத்தைக் குறிப்பிட்ட அவர், உற்பத்தி, தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எடுத்துரைத்தார்.
ஊடகங்களின் உண்மையான சக்தி என்பது தகவல்களைப் பரப்புவதில் மட்டுமல்லாமல், சமூகத்தை சரியான திசையில் வழிநடத்துவதிலும், உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதிலும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும் உள்ளது என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார். தவறான தகவல்கள் சமூகத்தைக் கடுமையாகப் பாதிக்கும் என்று கூறிய அவர், பத்திரிகைத் துறையில் முதலில் செய்தி வெளியிடுவது முக்கியமாக இருந்தாலும், சரியான செய்திகளைப் வெளியிடுவது அதைவிட மிக முக்கியமானது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜநாத் சிங் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281017®=48&lang=1
****
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2281091)
आगंतुक पटल : 13