பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஐரோப்பிய தொழில் துறை வட்டமேஜை மாநாட்டில் பிரதமர் விடுத்த பத்திரிகை செய்தியின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 17 MAY 2026 11:43PM by PIB Chennai

மேதகு பிரதமர் கிறிஸ்டெர்சன் அவர்களே,

மேதகு உர்சுலா அவர்களே,

இரு நாடுகளின் பிரதிநிதிகளே,

ஊடகத் துறை நண்பர்களே,

வணக்கம்!

முதலாவதாக, பிரதமர் திரு. கிறிஸ்டெர்சன் அவர்கள் அளித்த அன்பான வரவேற்பிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சற்று நேரத்திற்கு முன்புதான், ஸ்வீடன் நாட்டின் மிக உயரிய விருதான 'ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார்' (துருவ நட்சத்திரத்தின் அரச விருது) எனக்கு வழங்கப்பட்டது. இந்த அங்கீகாரம் எனக்கு மட்டுமே உரியதல்ல; இது நூற்றி நாற்பது கோடி இந்தியர்களுக்குக் கிடைத்த பெருமையாகும். மேலும், இந்தியா - ஸ்வீடன் உறவுகளை வளர்த்து, அதற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த ஸ்வீடனில் உள்ள நமது நண்பர்கள் அனைவருக்கும் செலுத்தப்படும் ஒரு மரியாதையாகும்.

ஸ்வீடன் மற்றும் ஐரோப்பாவின் தொழில் துறை மையமாகத் திகழும் கோதன்பர்க் நகரத்திற்கான எனது இந்த வருகைக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில், இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டமைக்காக உர்சுலா அவர்களுக்கு எனது பிரத்யேக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இந்தியா மற்றும் ஸ்வீடன் இடையேயான உறவானது ஜனநாயக விழுமியங்கள், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனிதத்தை மையமாகக் கொண்ட மேம்பாடு ஆகிய வலுவான அடித்தளங்களின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. நமது இரு நாடுகளுமே புதுமைகளைப் புகுத்துவதை வளர்ச்சியின் உந்துசக்தியாகவும், நிலைத்தன்மையை ஒரு கூட்டுப் பொறுப்பாகவும், ஜனநாயகத்தை நமது வலிமையாகவும் காண்கின்றன.

இன்றைய கூட்டத்தில், இந்த பொதுவான கொள்கைகள் மற்றும் பரஸ்பர நலன்களின் அடிப்படையில் நமது ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு எப்படிக் கொண்டு செல்வது என்பது குறித்து நாங்கள் விவாதித்தோம். அனைத்துத் துறைகளிலும் நமது கூட்டாண்மை வளர்ந்து வருவதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை 'உத்திசார் கூட்டு செயல்பாடு' என்ற நிலைக்கு உயர்த்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். இந்தக் கூட்டாண்மையின் கீழ் பசுமை மாற்றம், பாதுகாப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவுகள் போன்ற முக்கியப் பகுதிகளில் நாம் இணைந்து முன்னோக்கிச் செல்வோம்.

நண்பர்களே,

செயற்கை நுண்ணறிவு, சுகாதாரத் தொழில்நுட்பம் மற்றும் பசுமைப் போக்குவரத்து போன்ற உயர் தொழில்நுட்பத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பதற்கான மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன. இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 'செயற்கை நுண்ணறிவுத் தாக்க மாநாட்டில்' ஸ்வீடனைச் சேர்ந்த ஒரு பெரிய வணிகக் குழுவினர் பங்கேற்றனர். 'ஸ்வீடன் - இந்தியா தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு வழித்தடத்தை' வலுப்படுத்துவதற்கான உறுதியான திட்டங்களில் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்.

இரு நாடுகளின் புதிய தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சிச் சூழலை வலுப்படுத்தும் நோக்கில், 'இந்தியா - ஸ்வீடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை' நாம் நிறுவ உள்ளோம்.

பருவநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை குறித்த நமது சிந்தனைகளிலும் இந்தியா மற்றும் ஸ்வீடன் இடையே வலுவான ஒற்றுமை உள்ளது. தொழில் துறை மாற்றத்திற்கான தலைமைத்துவக் குழு, அதாவது 'லீடு-ஐடி' (LeadIT) என்பது நமது கூட்டு உலகளாவிய முயற்சியாகும். இதன் கீழ் நாம் குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட தொழில் துறை மாற்றத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். இன்று, அதன் மூன்றாவது கட்டப் பணிகளில் இணைந்து செயல்பட நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

பசுமை ஹைட்ரஜன், மறுசுழற்சிப் பொருளாதாரம் மற்றும் நிலையான உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் இந்தியா முக்கியப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஸ்வீடனின் தொழில்நுட்பத்தையும் இந்தியாவின் பிரம்மாண்ட சந்தை வாய்ப்புகளையும் ஒன்றிணைப்பதன் மூலம், ஒட்டுமொத்த உலகத்திற்கும் பயனளிக்கும் பருவநிலை தீர்வுகளை நம்மால் உருவாக்க முடியும். ஆர்க்டிக் பிராந்தியத்தில் இந்தியா மற்றும் ஸ்வீடன் இடையேயான ஒத்துழைப்பும், பருவநிலை மாற்றம் குறித்த உலகளாவிய புரிதலை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

நண்பர்களே,

பாதுகாப்புத் துறையில் நமது ஒத்துழைப்பு சீராக வளர்ந்து வருகிறது. ஸ்வீடன் நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி ஆலைகளை நிறுவுவது, நமது கூட்டாண்மையானது வெறும் வாங்குபவர் - விற்பவர் என்ற உறவைத் தாண்டி, நீண்ட காலத் தொழில் துறை ஒத்துழைப்பாக மாறி வருவதைக் காட்டுகிறது.

நண்பர்களே,

இன்றைய நன்னாளில் உர்சுலா அவர்களின் வருகை இந்த நிகழ்வை மேலும் சிறப்புடையதாக்குகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், கடந்த ஜனவரி மாதம் அவர் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த போது, இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காகப் பல வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை நாங்கள் எடுத்தோம். அந்த முடிவுகள் அனைத்திலும் நல்லதொரு முன்னேற்றம் ஏற்பட்டு வருவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தமானது தொழில்துறையினருக்கும், முதலீட்டாளர்களுக்கும், புதிய கண்டு பிடிப்பாளர்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். உர்சுலா அவர்கள் குறிப்பிட்டது போல, இது "அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய்" போன்றதாகும்.

பாதுகாப்பு மற்றும் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தமும், மனிதவளப் பரிமாற்ற ஒப்பந்தமும் நமது உத்திசார் மற்றும் மக்கள் நலனை மையமாகக் கொண்ட கூட்டாண்மைக்கு ஒரு புதிய வலிமையைத் தந்துள்ளன. இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில் நமது ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பம், தூய்மையான எரிசக்தி, செமி கண்டக்டர், நெகிழ்வுத்தன்மை கொண்ட விநியோகச் சங்கிலிகள் மற்றும் புதுமைப் புனைவுகள் போன்ற துறைகளில் நாம் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

உலகெங்கிலும் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலவ, இந்தியா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையேயான அரசியல், பொருளாதார மற்றும் உத்திசார் ஒற்றுமை மிகவும் அவசியமானதாகும்.

நண்பர்களே,

இன்றைய பதற்றம் நிறைந்த உலகளாவிய சூழலில், இந்தியா மற்றும் ஸ்வீடன் போன்ற ஜனநாயக நாடுகளுக்கு இடையே நிலவும் நெருக்கமான ஒத்துழைப்பு தனித்துவமான முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு பதற்றங்களுக்கும் சவால்களுக்கும் தீர்வு காண்பதற்கான வழிமுறையாக, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தையே நாம் எப்போதும் வலியுறுத்தி வருகிறோம்.

பயங்கரவாதம் என்பது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் உள்ள ஒரு கடுமையான சவால் என்பதை இந்தியாவும் ஸ்வீடனும் ஒப்புக்கொள்கின்றன. கடந்த ஆண்டு பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ஸ்வீடனிடமிருந்து நமக்குக் கிடைத்த ஆதரவிற்காகப் பிரதமர் கிறிஸ்டெர்சன் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதத்திற்கும், அதற்கு ஆதரவளிப்பவர்களுக்கும் எதிரான நமது போராட்டத்தை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம்.

இன்றைய அர்த்தமுள்ள விவாதங்களுக்காக மீண்டும் ஒருமுறை உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது கூட்டு முயற்சிகளின் மூலம், இந்தியா - ஸ்வீடன் மற்றும் இந்தியா - ஐரோப்பியக் கூட்டாண்மை தொடர்ந்து முன்னோக்கிச் செல்லும் என்றும், உலகளாவிய அமைதி, பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு நாம் இருவரும் தொடர்ந்து பங்களிப்போம் என்றும் நான் முழுமையாக நம்புகிறேன்.

மிக்க நன்றி.

பொறுப்புத் துறப்பு: இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். அசல் உரை  இந்தியில் நிகழ்த்தப்பட்டது.

-----

செய்தி அடையாள எண்: 2262094

TV/SMB/KR

 


(रिलीज़ आईडी: 2279809) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Urdu , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam