பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

குஜராத்தில் மைக்ரான் செமிகண்டக்டர் ஆலைத் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 28 FEB 2026 6:39PM by PIB Chennai

குஜராத்தின் முதல்வர் திரு. பூபேந்திர பாய் படேல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகாவான திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, மைக்ரான் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு. சஞ்சய் மெஹ்ரோத்ரா அவர்களே, இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் திரு. செர்ஜியோ கோர் அவர்களே, உள்துறை அமைச்சர் திரு. ஹர்ஷ் சங்வி அவர்களே, பிற முக்கியப் பிரமுகர்களே, பெரியோர்களே மற்றும் தாய்மார்களே.

உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான ஏஐ  உச்சிமாநாட்டிற்குப் பிறகு, இன்று நாம் மற்றுமொரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை இங்கே காண்கிறோம். ஏஐ உச்சிமாநாடு இந்தியாவின் ஏஐ திறனை உலகிற்கு அறிமுகப்படுத்திய நிலையில், இன்றைய தினம் தொழில்நுட்பத் தலைமைத்துவத்தில் இந்தியாவின் உறுதியை வெளிப்படுத்தும் மற்றொரு சான்றாகும்.

நண்பர்களே,

இது ஒன்றும் நீண்ட காலத்திற்கு முந்தைய விஷயம் அல்ல; சுமார் 10-11 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்தியாவில் தரவு  மற்றும் சிப்புகள்  பற்றிய விவாதங்கள் மிகக் குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே இருந்தன. தொழில்நுட்பம் என்று வரும்போது, நமது விவாதங்கள் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்ப சேவைகளை சுற்றியே இருந்தன. ஆனால் இன்று பாருங்கள், மென்பொருளுக்கு  பெயர் பெற்ற இந்தியா, இப்போது வன்பொருள் துறையிலும் தனது அடையாளத்தை வலுப்படுத்தி வருகிறது. இன்று சனந்தில், ஒரு புதிய எதிர்காலத்தின் உதயத்தை நாம் காண்கிறோம். மைக்ரான் நிறுவனத்தின் இந்த ஏ.டி.எம்.பி தொழிற்சாலையில் வணிக ரீதியான உற்பத்தி தொடங்கப்படுவது, உலகளாவிய தொழில்நுட்ப மதிப்புச் சங்கிலியில்  இந்தியாவின் பங்கினை வலுப்படுத்தப் போகிறது.

நண்பர்களே,

இன்று இந்தியா உலகளாவிய செமி கண்டக்டர் மதிப்புச் சங்கிலியின் ஒரு அங்கமாக மிக வேகமாக மாறி வருகிறது. மைக்ரான் நிறுவனத்தின் ஒட்டுமொத்தக் குழுவிற்கும், பூபேந்திர பாய் தலைமையிலான குஜராத் அரசிற்கும் மற்றும் இதில் பணியாற்றிய அனைத்துப் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

மைக்ரான் நிறுவனத்தின் இந்த ஆலை, இந்தியாவின் புதிய மனநிலைக்கான ஒரு மகத்தான உதாரணமாகும். கொள்கை முதல் உற்பத்தி வரை இன்றைய இந்தியா எந்தளவிற்கு ஆக்கபூர்வமான அணுகுமுறையுடன் முன்னேறிச் செல்கிறது என்பதை இங்கே காண முடிகிறது. உங்களுக்கு நினைவிருக்கலாம், 2023 ஜூன் மாதத்தில் இந்த ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்  கையெழுத்தானது. அதன் பிறகு, 2023 செப்டம்பரில் சனந்தில் இந்த ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து 2024 பிப்ரவரியில், இங்குள்ள முன்னோடி ஆலையில்  இயந்திரங்கள் நிறுவத் தொடங்கப்பட்டன. இதோ, இன்று 2026 பிப்ரவரியில், இந்த ஆலையில் வணிக ரீதியான உற்பத்தியும் தொடங்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

இந்தத் துறையை நன்கு அறிந்தவர்கள் அல்லது புரிந்து கொண்டவர்கள் இந்த வேகத்தின் முக்கியத்துவத்தை உணர்வார்கள். உலகின் வளர்ந்த நாடுகளில் கூட, 'முன்னோடி விலை நிர்ணய ஒப்பந்தம்'  போன்ற வரி ஒப்பந்தங்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும். இது மிகவும் சிக்கலான ஒரு செயல்முறையாகும். ஆனால், இந்தியா இதனை வெறும் சில மாதங்களிலேயே முடித்துக் கொடுத்தது. நோக்கம் தெளிவாக இருக்கும்போதும், நாட்டின் விரைவான வளர்ச்சியில் அர்ப்பணிப்பு இருக்கும்போதும், கொள்கைகளும் தெளிவாகின்றன; முடிவெடுப்பதில் வேகமும் தானாகவே வந்துவிடுகிறது.

நண்பர்களே,

மைக்ரான் நிறுவனத்தின் தலைமைத்துவத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்; எனது நண்பர் சஞ்சய் அவர்களை நான் எவ்வளவு பாராட்டினாலும் அது ஈடாகாது. இன்று சஞ்சய் எனக்கு ஒரு ஆச்சரியத்தை அளித்தார், ஏனென்றால் வழக்கமாக சஞ்சயைச் சந்திக்கும்போது அவர் மிகக் குறைவாகவே பேசுவார்; ஆனால் இன்று அவரது உரையைக் கேட்ட பிறகு, எனக்கு மற்றொரு சஞ்சய் அறிமுகமாகியுள்ளார். அவர் இந்தியாவின் மீது தொடர்ச்சியான நம்பிக்கையை வைத்துள்ளார். நான் குறிப்பாக சஞ்சய் அவர்களைப் பாராட்ட விரும்புகிறேன். கடந்த காலங்களில் நாம் எப்போது சந்தித்தாலும், இந்தியாவின் செமிகண்டக்டர் சூழல் அமைப்பு குறித்து அவர் மிகவும் உற்சாகமாக இருப்பார். இன்று அவரது தலைமைத்துவமும், இந்தியாவின் மீதான அவரது நம்பிக்கையும் ஒரு புதிய உயரத்தை எட்டியுள்ளது. இந்தியாவிற்கான தூதராக நியமிக்கப்பட்ட பிறகு, திரு. கோர் அவர்களும் ஒருவேளை முதன்முறையாக குஜராத் வந்திருக்கலாம். அவர் முறைப்படி தூதரான பிறகு, அவருடனான எனது முதல் சந்திப்பு இதுவாகும், அதுவும் எனது கர்மபூமியிலேயே (பணித்தளம்) நடக்கிறது. எங்களது உபசரிப்பை நீங்கள் முழுமையாக ரசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

மைக்ரான் நிறுவனத்தின் இந்த ஆலை மற்றும் இன்றைய இந்தத் தொடக்க விழா, இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வலுவான ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைக்கு ஒரு சிறந்த சான்றாகும். குறிப்பாக ஏஐ  மற்றும் சிப்  போன்ற தொழில்நுட்பத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த உறவு மிகவும் முக்கியமானது. மனிதகுலத்தின் சிறந்த எதிர்காலத்தோடு தொடர்புடைய இந்த இரண்டு தொழில்நுட்பங்களின் விநியோகச் சங்கிலியை  பாதுகாப்பாக வைத்திருக்க இன்று முழு உலகமும் விரும்புகிறது. உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியாவும் அமெரிக்காவும் இதற்காகத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஏஐ உச்சிமாநாட்டின் போது, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்ட 'பேக்ஸ் சிலிகா'  தொடர்பான ஒப்பந்தம் இந்த திசையில் எடுக்கப்பட்ட மற்றுமொரு முயற்சியாகும். நமது கூட்டு முயற்சிகள், முக்கியமான தாதுக்களின் உலகளாவிய விநியோகச் சங்கிலியை மிகவும் பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் மாற்றும்.

நண்பர்களே, 20-ம் நூற்றாண்டு வரை உலகம் தொழில் புரட்சியின் சகாப்தத்தைக் கண்டது. அக்காலத்தில் தொழிற்சாலைகள், இயந்திரங்கள் மற்றும் பெருமளவிலான உற்பத்தியில் முன்னணியில் இருந்த நாடுகள் அதிவேகமாக முன்னேற்றம் கண்டன. ஆனால், இந்த நூற்றாண்டு ஏஐ புரட்சியின்  நூற்றாண்டாகும். செமிகண்டக்டர் எனப்படும் குறைக்கடத்திகள் இந்த மாற்றத்தின் மிகப்பெரிய பாலமாக உள்ளன. ஒரு சிறிய சிப் தான் தொழில் புரட்சியையும் ஏஐ புரட்சியையும் இணைக்கும் ஊடகமாகத் திகழ்கிறது. கடந்த நூற்றாண்டின் செயல்பாடுகளைத் தீர்மானிப்பதாக எண்ணெய் இருந்ததென்றால், இந்த நூற்றாண்டின் செயல்பாடுகளைத் தீர்மானிப்பதாக 'மைக்ரோ-சிப்' இருக்கப்போகிறது.

நண்பர்களே,

இந்தச் சிந்தனையோடுதான் செமிகண்டக்டர் துறையில் அதிவேகமாக முன்னேற இந்தியா முடிவெடுத்தது. உலகம் கோவிட் பெருந்தொற்றின் பிடியில் சிக்கித் தவித்தபோது, இந்தியா தனது 'செமிகண்டக்டர் இயக்கம்'  திட்டத்தை அறிவித்தது உங்களுக்கு நினைவிருக்கும். அந்தச் சமயத்தில் இங்கே அமர்ந்திருக்கும் பல சகாக்களும் பல்வேறு குழுக்களும் அடுத்தடுத்துக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர். பெருந்தொற்றுக் காலத்தில் அனைத்தும் சிதைந்து போவதைப் போலத் தோன்றியது. ஆனால், அப்போது நாம் நம்பிக்கையுடன் விதைத்த விதைகள் இன்று முளைத்து பலன் தரத் தொடங்கியுள்ளன.

நண்பர்களே,

இதுவரை 'செமிகான் இந்தியா' திட்டத்தின் கீழ் மொத்தம் 10 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் மைக்ரான் நிறுவனம் தவிர, மேலும் மூன்று திட்டங்கள் மிக விரைவில் உற்பத்தியைத் தொடங்கவுள்ளன. நாம் உருவாக்கி வரும் இந்த செமிகண்டக்டர் சூழல் அமைப்பு  ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்துடன் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை; இது அகில இந்திய அளவிலான  ஒரு திட்டமாகும். அதாவது, வளர்ந்த இந்தியாவின் புதிய தொழில்நுட்ப மையங்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இங்கே சனந்தில் மட்டுமல்லாமல், தோலேராவிலும்  மிகப் பெரிய அளவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில நாட்களுக்கு முன்புதான் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் ஒரு புதிய ஆலைக்கான பணிகள் தொடங்கின. அசாம், ஒடிசா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் செமிகண்டக்டர் அலகுகளுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நண்பர்களே,

இன்று உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்களுக்கு இந்தியா விடுக்கும் செய்தி ஒன்றுதான்: இந்தியா தயாராக இருக்கிறது. இந்தியா நம்பிக்கைக்குரியது மற்றும் இந்தியா சொன்னதைச் செய்து முடிக்கும். செமிகண்டக்டர் சூழல் அமைப்பு என்பது வெறும் ஒரு தொழிற்சாலையை மட்டும் குறிக்காது என்பது உங்களுக்குத் தெரியும். இந்தச் சூழல் அமைப்பு என்பது இயந்திரத் தயாரிப்பாளர்கள், வடிவமைப்புப் பொறியாளர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தளவாடக் கட்டமைப்புகள் மற்றும் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் எனப் பல அடுக்குகளைக் கொண்டது. அனைவரது ஒருங்கிணைப்புடன் தான் ஒரு சிப்  தயாராகிறது. இந்தியாவும் குறைக்கடத்தி சூழல் அமைப்பின் முழுமையான மதிப்புச் சங்கிலியில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில், நாம் ‘இந்தியா செமிகண்டக்டர் இயக்கம் 2.0’  திட்டத்தை அறிவித்துள்ளோம். இதன் நோக்கமும் அதுவே. உற்பத்தி அதிகரிக்கும் போது, அதற்கான மூலப்பொருட்கள், உதிரிபாகங்கள் மற்றும் சேவைகளுக்கான தேவையும் இந்தியாவிற்குள்ளேயே அதிகரிக்கும். இதுவே மிகப்பெரிய வாய்ப்பாகும்.

நண்பர்களே,

இந்தியாவின் மற்றொரு பெரிய பலம் நமது உற்பத்தி லட்சியங்கள்  ஆகும். மின்னணு சாதனங்களை முதன்முறையாகப் பயன்படுத்தும் மிகப்பெரிய அளவிலான மக்கள் தொகையை இந்தியா கொண்டுள்ளது. மின்னணுவியல், ஆட்டோமொபைல் அல்லது பிற தொழில்நுட்பங்கள் என எதுவாக இருந்தாலும், இந்தியாவில் அவற்றின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதாவது, 'இந்தியாவில் தயாரிப்போம்'  தற்போது முழு வீச்சில் முன்னேறி வருகிறது. நமது மின்னணுத் துறையையே பாருங்கள்; கடந்த 11 ஆண்டுகளில், மின்னணு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பலமடங்கு அதிகரித்துள்ளது. இப்போது இந்தியா உதிரிபாகங்கள் முதல் முழுமையான தயாரிப்புகள் வரை அனைத்தையும் நாட்டிற்குள்ளேயே தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது. மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தியின் பரப்பு அதிகரிக்கும் போது, அதற்கேற்ப குறைக்கடத்திகளுக்கான உள்நாட்டுத் தேவையும் அதிகரிக்கும். அதாவது, இந்தியாவில் முதலீடு செய்பவர்களுக்கு உள்நாட்டுச் சந்தை மற்றும் உலகளாவிய வாய்ப்புகள் என இரண்டும் அவர்கள் முன்னால் காத்திருக்கின்றன.

நண்பர்களே,

இந்தச் சனந்த் பகுதி முழுவதிலும் எனக்கு ஒரு தனிப்பட்ட ஈடுபாடு உண்டு. சனந்த் என்பது மண்ணையும் பொன்னாக்கும் பூமி. இதை எனது அனுபவத்திலிருந்து உங்களுக்குச் சொல்கிறேன். சனந்தைச் சேர்ந்த ஒருசிலர் இங்கே அமர்ந்திருந்தால் அவர்களுக்குத் தெரியும் - ஒரு காலத்தில் நான் இங்கே பேருந்தில் வருவேன், இங்கிருக்கும் சந்துகளில் மிதிவண்டியில் சுற்றித் திரிவேன்; அது ஒரு சிறிய நகரமாக இருந்தது. ஒருவகையில் இது நீண்ட காலமாக எனது கர்மபூமியாக (பணித்தளம்) இருந்து வருகிறது. என் கண்களுக்கு முன்பாகவே சனந்த் மாறி வருவதை நான் பார்த்திருக்கிறேன். ஏதோ ஒரு காலத்தில் சிறிய நகரமாக இருந்த இது, இன்று ஒரு மிகப்பெரிய நகரமாக மாறி வருகிறது. இது எங்கிருந்து தொடங்கியது—ஒரு ரூபாய் எஸ்.எம்.எஸ் -ல் இருந்து. நான் திரு. ரத்தன் டாட்டா அவர்களுக்கு ஒரே ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினேன்: "சுவாகதம்" (வருக) என்று எழுதியிருந்தேன். அந்த ஒரு ரூபாய்க்கான முதலீடு - இந்த 'குஜு'  என்ன செய்ய முடியும் என்று பாருங்கள்.

நண்பர்களே,

ஒரு கார் தொழிற்சாலையில் இருந்து சனந்த் பகுதி இன்று நாட்டின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் மையமாக மாறியிருப்பதை நான் எனது சொந்தக் கண்களால் பார்த்திருக்கிறேன். ஒரு பெரிய ஆட்டோமொபைல் நிறுவனம் இங்கு வந்தபோது, அதனுடன் இணைந்து ஒட்டுமொத்த சூழல் அமைப்பும்  எவ்வாறு வளர்ந்தது என்பது எனக்கு நினைவிருக்கிறது. ஒரு நிறுவனத்தின் வருகையுடன், பல துணை அலகுகள் இங்கு வந்தன. ஒரு விநியோகஸ்தர் கட்டமைப்பு உருவானது, உள்ளூர் தொழில் வலுவடைந்தது, வேலைவாய்ப்பும் முதலீடும் அதிகரித்தன. இந்த ஊரில் பணியாற்ற நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், உலகிலிருந்தும் வந்துள்ள சக நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒரு சிறிய நகரம் திடீரென்று உலக வரைபடத்தில் தனது இடத்தைப் பிடித்துள்ளது என்பது உண்மைதான். உங்களுக்குத் தேவையான வளர்ச்சி மற்றும் வசதிகள் குறித்து, இன்றும் சில விஷயங்கள் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று உங்கள் மனதில் தோன்றலாம்.

நண்பர்களே, நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்,

நீங்கள் விரும்பும் வாழ்க்கை முறை, சமூக வாழ்க்கை மற்றும் நீங்கள் வாழ விரும்பும் விதம் என அனைத்தையும் இந்த குஜராத் வழங்கும். உங்களுக்கு எந்தக் குறையும் ஏற்பட நாங்கள் விடமாட்டோம். இப்போது அதே வழியில், மைக்ரான் நிறுவனத்தின் இந்த முன்னோடி ஆலை ஒரு புதிய சூழல் அமைப்பை விரிவாக்கப் போகிறது. வரும் காலத்தில், செமிகண்டக்டர்  துறையிலும் சனந்த் தனது வெற்றியின் புதிய அத்தியாயத்தை எழுதும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

நண்பர்களே,

மைக்ரான் நிறுவனத்தின் டி-ரேம் (D-RAM) மற்றும் நான்ட் (NAND) தீர்வுகள் உலகம் முழுவதும் உள்ள தரவு மையங்கள், ஏஐ பயன்பாடுகள், மொபைல் சாதனங்கள் மற்றும் மேம்பட்ட கணினி அமைப்புகளுக்கு ஆற்றலை வழங்குகின்றன. இனி இவை அனைத்தும் இங்கே, இந்த சனந்த் மண்ணிலேயே தயாரிக்கப்படும். இங்கே, மேம்பட்ட வேஃபர்கள் (Wafers) உயர்தர மெமரி மற்றும் ஸ்டோரேஜ் தயாரிப்புகளாக மாற்றப்படும். தற்போது இந்த ஆலையில் நூற்றுக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். வரும் காலத்தில் இது மேலும் விரிவாக்கப்படும்.

நண்பர்களே,

நீங்கள் இங்கே உருவாக்கி வரும் கிளீன்ரூம் (Cleanroom) பரப்பு, உலகின் மிகப்பெரிய ஏ.டி.எம்.பி (A.T.M.P.) கிளீன்ரூம்களில் ஒன்றாக இருக்கப்போகிறது. இந்த ஆலை வளர்ச்சிக்கும் இயற்கைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். மிகக் குறைந்த அளவில் தண்ணீர் பயன்படுத்தப்படும் வகையில் நீங்கள் செய்துள்ள ஏற்பாடுகள் மிகவும் பாராட்டத்தக்கவை.

நண்பர்களே,

குஜராத் அரசின் கொள்கைகளையும் நான் இங்கே பாராட்ட விரும்புகிறேன். செமிகண்டக்டர் துறைக்காக குஜராத் அரசு உருவாக்கிய கொள்கைகளின் பலன் இப்போது களத்தில் கண்கூடாகத் தெரிகிறது. திரு. பூபேந்திர பாய் தலைமையிலான அரசின் ஆக்கபூர்வமான அணுகுமுறையால், தொழில்நுட்பத் துறையில் குஜராத் மிக வேகமாக முன்னேறி வருகிறது. அனுமதிகள் வழங்குவதாகட்டும், நில ஒதுக்கீடு அல்லது பயன்பாட்டுச் சேவைகளுக்கான நடைமுறைகளை எளிதாக்குவதாகட்டும், இவை அனைத்தும் குஜராத் மீது முதலீட்டாளர்களுக்கு உள்ள நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளன.

இன்று தோலேராவும், சனந்தும் (Sanand) மேற்கு இந்தியாவின் செமிகண்டக்டர் மையங்களாக  உருவெடுத்து வருகின்றன. அதுமட்டுமின்றி, செமிகண்டக்டர் துறைக்குத் தேவையான இடுபொருட்களை  வழங்கும் தொழிற்சாலைகளும் குஜராத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழில்துறை, திறன் மேம்பாட்டு மையங்கள் மற்றும் பயிற்சி முயற்சிகள் என அனைத்திலும் குஜராத் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி வருகிறது.

நண்பர்களே,

இது இந்தியாவின் இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளுக்கான கதவைத் திறந்துவிட்டுள்ளது. இன்று நாம் முதல் அடியை எடுத்து வைத்துள்ளோம். இந்தியாவின் 10 செமிகண்டக்டர் தொழில் திட்டங்கள் உற்பத்தியைத் தொடங்கும்போது, அதன் பன்மடங்கு விளைவு  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், புத்தொழில்கள்  மற்றும் மின்னணுத் துறையின் முழுமையான மதிப்புச் சங்கிலியைச் சென்றடையும். இந்தியா திறமையானது, இந்தியா போட்டித்தன்மை மிக்கது, இந்தியா உறுதியானது என்ற செய்தி இன்று உலகிற்குச் சென்றடைந்துள்ளது. இந்தியாவின் கூட்டாளிகளுக்கும், உலகளாவிய முதலீட்டாளர்களுக்கும் நான் ஒரு உறுதி அளிக்கிறேன், இந்திய அரசு அல்லது மாநில அரசுகள் என எதுவாக இருந்தாலும், நாங்கள் அனைவரும் எப்போதும் உங்களுடன் இருப்போம்.

நண்பர்களே,

வருங்கால சந்ததியினர் இந்தத் தசாப்தத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, இந்த பத்தாண்டுகளில் இந்தியா எவ்வளவு பெரிய பாய்ச்சலை மேற்கொண்டது என்பதைப் பெருமையுடன் கூறுவார்கள். இந்தியாவின் தொழில்நுட்ப எதிர்காலத்தில் இது ஒரு திருப்புமுனையாக அமையும். மைக்ரான் நிறுவனத்தின் ஒட்டுமொத்தக் குழுவிற்கும், குஜராத் அரசுக்கும் மற்றும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!

-----

(Release ID:2233987)

AD/VK/KR


(रिलीज़ आईडी: 2279785) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Odia , Telugu , Kannada , Malayalam