PIB Backgrounder
நக்சல்வாதம் இல்லாத இந்தியா
प्रविष्टि तिथि:
19 JUN 2026 1:38PM by PIB Chennai
கிட்டத்தட்ட ஆறு தசாப்தகால வன்முறைகளுக்குப் பிறகு, 2026 மார்ச் 31 அன்று இடதுசாரி தீவிரவாதத்திலிருந்து நாடு முழுமையாக விடுதலை அடைந்துள்ளது. மத்திய அரசின் 12 ஆண்டுகால தொடர் முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாக இது அமைந்துள்ளது. இந்த மாற்றம் நம்பிக்கை, தேசத்தைக் கட்டமைத்தல், மக்கள் நலன் ஆகிய மூன்று முக்கிய தூண்களின் அடிப்படையில் சாத்தியமாகியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வளர்ச்சியையும், நலத்திட்டங்களையும் ஒருங்கிணைத்த உத்தியின் மூலம் வன்முறைகள் ஒழிக்கப்பட்டு, நிர்வாகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 'நக்சல்வாதம் இல்லாத இந்தியா' என்ற இலக்கின் வெற்றி, நீடித்த அமைதியையும் வளர்ச்சியையும் நிலைநாட்டுவதில் அரசின் ஒட்டுமொத்த அணுகுமுறையின் ஆற்றலை நிரூபிக்கிறது.
அமைதி, பாதுகாப்பின் புதிய சகாப்தம்
2014-ம் ஆண்டு மே மாதம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றபோது, நக்சல்வாதம் நாட்டின் மிக முக்கியமான உள்நாட்டுப் பாதுகாப்பு சவாலாக இருந்தது. இதற்கு முந்தைய அரசின் அணுகுமுறைகள் பிரச்சனையின் அடிப்படைக் காரணங்களைக் கண்டறியாமல் நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன் பின்னர், இப்பிரச்சனைக்குத் தீர்வு காண விரிவான, ஒருங்கிணைந்த உத்தி பின்பற்றப்பட்டது.
பாதுகாப்புப் படைகளின் தொடர் செயல்பாடுகளால் 597 காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. நக்சல் வன்முறைகளைப் பதிவு செய்யும் காவல் நிலையங்களின் எண்ணிக்கை 333-லிருந்து 16 ஆகக் குறைந்தது. நவீன தொழில்நுட்பங்களான ஆளில்லா சிறிய ரக விமானங்கள், ட்ரோன்கள், செயற்கைக்கோள் படங்கள், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தரவு பகுப்பாய்வு போன்றவை செயல்பாட்டுத் திறனை அதிகரித்தன. பாதுகாப்புப் படைகளின் 'தேடுதல், இலக்கு வைத்தல், அழித்தல்' என்ற கோட்பாடு சிறந்த பலன்களை அளித்தது. 'ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்', 'ஆபரேஷன் ஆக்டோபஸ்', 'ஆபரேஷன் டபுள் புல்' போன்ற ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் மாவோயிஸ்ட் அமைப்புகள் பலவீனமாக்கப்பட்டன.
நிதி முடக்கம், மறுவாழ்வு நடவடிக்கைகள்
ஆயுதம் ஏந்தியவர்களைத் தாக்குவதுடன் நின்றுவிடாமல், அவர்களுக்கு ஆதரவளிக்கும் ஒட்டுமொத்த அமைப்பையும் மத்திய அரசு முடக்கியது. தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வலுவான மறுவாழ்வுக் கொள்கையும் செயல்படுத்தப்பட்டது. ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தவர்களுக்கு நிதியுதவி, 36 மாதங்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, சுயவேலைவாய்ப்புக்கான உதவிகள் ஆகியவை வழங்கப்பட்டன. 2025-ம் ஆண்டில் மட்டும் 2,337 நக்சலைட்டுகள் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்துச் சமூகத்தின் மைய நீரோட்டத்துடன் இணைந்தனர்.
தேசக் கட்டமைப்பு, மக்கள் நலன்
நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் 2014-ம் ஆண்டு முதல் 12,249 கிலோமீட்டருக்கும் அதிகமான சாலைகள் அமைக்கப்பட்டன. தொலைத்தொடர்புத் துறையின் பல்வேறு திட்டங்களின் கீழ் 9,600-க்கும் மேற்பட்ட மொபைல் சிக்னல் கோபுரங்கள் நிறுவப்பட்டு, 96 சதவீத கிராமங்களுக்கு மொபைல் இணைப்பு சேவை வழங்கப்பட்டுள்ளது. 1,804 வங்கி கிளைகள், 1,321 ஏடிஎம்கள், 6,025 தபால் நிலையங்கள் நிறுவப்பட்டு நிதி உள்ளடக்கம் விரிவுபடுத்தப்பட்டது. பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம், கல்வி மேம்பாட்டிற்காக ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவை உருவாக்கப்பட்டன.
2014-ல் 126 மாவட்டங்கள் நக்சல்வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2026-ல் அது வெறும் 2 மாவட்டங்களாகக் குறைந்துள்ளது. நக்சல் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் 2014-ல் 870 ஆக இருந்தது, 2025-ல் 234 ஆகக் குறைந்தது. இந்த மகத்தான வெற்றி, நலிவடைந்த சமூகங்களின் அமைதி, உள்ளடக்கம், வளர்ச்சிக்கான ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275082®=3&lang=1
***
TV/PD/RJ
(रिलीज़ आईडी: 2275353)
आगंतुक पटल : 11