வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
தேசிய நகர்ப்புற விவகாரங்கள் நிறுவனத்தின் 50-வது ஆண்டு கொண்டாட்டம் - பிரதமரின் முதன்மைச் செயலாளர் திரு பி.கே. மிஸ்ரா பங்கேற்பு
प्रविष्टि तिथि:
13 JUN 2026 6:20PM by PIB Chennai
மத்திய அரசின் வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அமைப்பான தேசிய நகர்ப்புற விவகாரங்கள் நிறுவனம் (என்ஐயுஏ), ஒருங்கிணைந்த, நிலையான நகர்ப்புற வளர்ச்சிக்குப் பங்களித்து வருகிறது. இந்த நிறுவனம் தனது 50-வது ஆண்டு நிறுவன தினத்தை இன்று (13.06.2026) புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் கொண்டாடியது.
'2047-ம் ஆண்டுக்குள் மீட்சித் திறன் கொண்ட நகர்ப்புற இந்தியாவைக் கட்டமைத்தல்' என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட பொன்விழாக் கொண்டாட்டங்களில், இணையவழி, நேரடி நிகழ்வுகள் மூலம் 1,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தேசிய, சர்வதேசப் பிரதிநிதிகள், மத்திய - மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள், நகர்ப்புற மேம்பாட்டுத் துறை வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், நகர்ப்புற வளர்ச்சி தொடர்பாகப் பணியாற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுகையில் இந்தியாவின் நகர்ப்புற வளர்ச்சிக்கு 50 ஆண்டுகள் சேவையாற்றும் என்ஐயுஏ-வைப் பாராட்டினார். நகரங்கள், அதிகரித்து வரும் பருவநிலை மாற்றம் தொடர்பான அழுத்தங்களை எதிர்கொள்வதாக அவர் கூறினார். எனவே, எதிர்கால நகர்ப்புற திட்டமிடலின்போது, இயற்கை சார்ந்த தீர்வுகள், பசுமை உள்கட்டமைப்பு, நிலையான அமைப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளர் திரு சீனிவாஸ் கட்டிகிதலா பேசுகையில், நகரங்கள் மீள்திறன், நிலைத்தன்மை, நீண்டகால தகவமைப்புத் திறன் கொண்டவையாகத் திட்டமிடப்பட வேண்டும் என்று கூறினார்.
ஆராய்ச்சி, கொள்கை ஆதரவு, புத்தாக்கம், திறன் மேம்பாடு ஆகியவற்றில் என்ஐயுஏ-வின் 50 ஆண்டு கால பங்களிப்பை ஆவணப்படுத்தும் வகையில், 'இந்தியாவின் நகர்ப்புற வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்திய 50 ஆண்டுகள்' என்ற நூல் வெளியிடப்பட்டது.
தொழில்நுட்பம் சார்ந்த நகர்ப்புற நிர்வாகத்தையும் புத்தாக்கத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட நகர்ப்புற மறுமலர்ச்சி தொழில்நுட்பப் பயிற்சியை நிறைவுசெய்த 127 மாணவர்களை அங்கீகரித்து, அவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இந்தக் கொண்டாட்டங்களில் இடம்பெற்றது.
இந்தக் கொண்டாட்டங்களில் நிலையான நகர்ப்புற மேம்பாட்டின் முக்கிய அம்சங்கள் குறித்த ஒன்பது தொழில்நுட்பக் கலந்துரையாடல் அமர்வுகள் இடம்பெற்றன. செழிப்பான, அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான நகரங்களை உருவாக்கப் பங்கிளிப்பை வழங்குவதில் என்ஐயுஏ மீதான நம்பிக்கையை இந்நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2272513®=48&lang=1
***
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2272548)
आगंतुक पटल : 8