அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தை இமயமலைப் பொருளாதாரம் ஊக்குவிக்கும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
28 MAY 2026 5:35PM by PIB Chennai
2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கி நாடு முன்னேறி வரும் நிலையில், இந்தியாவின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சியில் இமயமலைப் பொருளாதாரம் முக்கியப் பங்காற்றவுள்ளதாக மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ஹிமாச்சலப் பிரதேசத்தின் பாலம்பூரில் உள்ள அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் இமயமலை உயிரி வளத் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற தேசிய தொழில்நுட்ப தின நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
பல பத்தாண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த இமயமலைப் பகுதியின் வளங்கள், அறிவியல், தொழில்நுட்பத் தலையீடுகள் மூலம் புதிய பொருளாதார மதிப்பை உருவாக்கும் இயந்திரங்களாக மாறி வருகின்றன. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நறுமண இயக்கம், மலர் வளர்ப்பு இயக்கம் போன்றவற்றின் மூலம் இமயமலைத் துறைகளில் அறிவியல் ரீதியான நடவடிக்கைகள் முன்பு இல்லாத வேகத்தைப் பெற்றுள்ளன. இதன் மூலம் விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், தொழில்முனைவோருக்கு அதிக வாழ்வாதார வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அயோத்தியில் நடைபெற்ற பிராண பிரதிஷ்டை நிகழ்வின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் காணிக்கையாக வழங்கப்பட்ட துலிப் மலர்கள் இதே நிறுவனத்தில் இருந்து பெறப்பட்டவை என்பதை அமைச்சர் நினைவுகூர்ந்தார்.
இமயமலை உயிரி வளங்களை மருத்துவம், ஊட்டச்சத்து, அழகுசாதனப் பொருட்கள், வேளாண் உயிரித் தொழில்நுட்பம் போன்ற துறைகளுக்கான வணிக ரீதியான தயாரிப்புகளாக மாற்றுவதில் இந்த நிறுவனம் முக்கியப் பங்காற்றுகிறது என்று அவர் தெரிவித்தார். பெருங்காயம், குங்குமப்பூ, இலவங்கப்பட்டை போன்றவற்றை உள்நாட்டிலேயே பயிரிடுவதன் மூலம் தற்சார்பு இந்தியா திட்டத்திற்கும் இந்நிறுவனம் பங்களித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், ஆளில்லா விமானம் அடிப்படையிலான தொழில்நுட்பங்களை வேளாண்மைக்காகவும், பல்லுயிர் ஆராய்ச்சிக்காகவும் பயன்படுத்தி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். கிராமப்புற மேம்பாட்டையும், பொருளாதார அதிகாரமளித்தலையும் அறிவியலுடன் ஒருங்கிணைத்து, நாட்டை முன்னேற்றும் பணிகளில் விஞ்ஞானிகள், விவசாயிகள், தொழில்துறையினர் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266281®=3&lang=1
***
(Release ID: 2266281)
SS/EA/KR
(रिलीज़ आईडी: 2267541)
आगंतुक पटल : 24