அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நிலக்கரியில் பாதுகாக்கப்பட்ட பழங்கால காட்டுத்தீக்கான சான்றுகள் பூமியின் காலநிலை பற்றிய புதிய விவரங்களை வெளிப்படுத்துகின்றன
இடுகை இடப்பட்ட நாள்:
25 MAY 2026 4:38PM by PIB Chennai
சுமார் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய கோண்ட்வானா காடுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீ, மற்றும் அது பூமியின் காலநிலை, தாவரங்கள், நிலக்கரி உருவான சூழலை எவ்வாறு மாற்றியமைத்தது என்பது குறித்த மூலக்கூறு சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்தியப் பெர்மியன் படிவுகளில் மேற்கொள்ளப்பட்ட முந்தைய ஆய்வுகள் பழங்கால காட்டுத்தீக்கான சான்றுகளை வழங்கியிருந்தாலும், வெறும் நுண்ணோக்கி சார்ந்த அவதானிப்புகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டதால் தீயினால் உருவான கரிமத் துகள்களின் துல்லியமான தன்மையைக் கண்டறிவதில் சிக்கல் நீடித்தது.
இந்த இடைவெளியைக் குறைக்கும் வகையில், மத்திய அறிவியல், மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் பீர்பல் சஹ்னி தொல் அறிவியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய பன்முக அணுகுமுறையைக் கையாண்டுள்ளனர். நேஹா அகர்வால், ஷிவாலி ஸ்ரீவஸ்தவா, ரன்சி பால் மேத்யூஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர், கோதாவரி பள்ளத்தாக்கு நிலக்கரி வயல் படிவுகளில் இருந்து நுண்வடிவப் படிவ அடுக்கு பகுப்பாய்வுடன் ராமன் நிறமாலைக்காட்டி, அகச்சிவப்பு நிறமாலைக்காட்டி போன்ற மேம்பட்ட மூலக்கூறு முறைகளை ஒருங்கிணைத்து ஆய்வு செய்தனர்.
இதன் மூலம், அதிக தீவிரம் கொண்ட மற்றும் குறைந்த தீவிரம் கொண்ட காட்டுத்தீயினால் உருவான கரிமத் துகள்களை அவற்றின் வடிவமைப்பு மற்றும் வேதியியல் பண்புகளின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் துல்லியமாக வேறுபடுத்தி அடையாளம் கண்டுள்ளனர்.
புவிப்பரப்பியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு, கோண்ட்வானா படுகைகளின் பழங்கால சுற்றுச்சூழலை மறுசீரமைக்க உதவுவதுடன், தற்போதைய மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப எதிர்கால சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் தீவிர இயற்கை நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்க உதவும் துல்லியமான மாதிரிகளை உருவாக்கப் பெரிதும் பங்களிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264978®=3&lang=1
***
Release ID: 2264978
SS/EA/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2265831)
வருகையாளர் எண்ணிக்கை : 10