மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளுக்கு பிந்தைய மறுமதிப்பீட்டு இணையதளத்தின் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்ய ஐஐடி நிபுணர்களை நியமிக்க மத்திய கல்வி அமைச்சர் உத்தரவு

இடுகை இடப்பட்ட நாள்: 24 MAY 2026 4:45PM by PIB Chennai

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தேர்வு முடிவுகளுக்குப் பிந்தைய மறுமதிப்பீட்டு இணையதள சேவையில் மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்கொண்டு வரும் தொழில்நுட்பச் சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில், ஐஐடி சென்னை, கான்பூர் ஆகிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழுவை உடனடியாக நியமிக்க மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் உத்தரவிட்டுள்ளார். சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டு நடைமுறைகள் எந்தவிதத் தடங்கலும் இன்றி துல்லியமாக நடைபெறுவதை உறுதி செய்ய இக்குழு சிபிஎஸ்இ அமைப்பிற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க உள்ளது.

இந்த உயர்மட்ட நிபுணர் குழுக்கள், சிபிஎஸ்இ இணையதளத்தின் செயல்திறன், தரவுப் பாதுகாப்பு அமைப்புகளில் விரிவான தொழில்நுட்ப மேம்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வர். குறிப்பாக, ஒரே நேரத்தில் பல பயனர்கள் இணையதளத்தை பயன்படுத்தும் போது ஏற்படும் இணையதள முடக்கம், சர்வர் செயல்திறன் மற்றும் ஒட்டுமொத்த தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் உறுதித்தன்மை ஆகியவற்றை அவர்கள் விரிவாக ஆய்வு செய்வர். மேலும், மாணவர்கள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது உள்நுழைவு அங்கீகாரம், பயனர் அணுகல், கட்டணம் செலுத்தும் முறைகள் ஆகியவற்றில் ஏதேனும் பிழைகள் இருந்தால், அவற்றை உடனடியாகக் கண்டறிந்து சரிசெய்ய இக்குழுவினர் உதவுவர்.

மாணவர்களின் நலன்களுக்கே எப்பொழுதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், வெளிப்படையான, திறமையான, மாணவர்களுக்கு உகந்த ஒரு தொழில்நுட்ப முறையை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளையும் சிபிஎஸ்இ முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264774&reg=3&lang=1  

***

TV/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2264803) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Malayalam