கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
பிரம்மபுத்திரா நதியை பொருளாதார வாழ்வாதாரமாக மாற்ற மத்திய அரசு பெரும் முதலீடு செய்கிறது: மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் தகவல்
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAY 2026 9:25PM by PIB Chennai
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் தலைமையில், அசாம் மாநிலம் குவஹாத்தியில் பிரம்மபுத்திரா வாரியத்தின் உயர்நிலை ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
பிரம்மபுத்திரா நதியை வெறும் ஆறாகப் பார்க்காமல், வடகிழக்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் முக்கிய தேசிய சொத்தாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தேசிய நீர்வழிப்பாதை-2 மற்றும் இந்தோ-பங்களாதேஷ் வழித்தடம் மூலம் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு பகுதிகள் கொல்கத்தா மற்றும் ஹல்டியா துறைமுகங்களுடன் இணைக்கப்பட்டு போக்குவரத்து மேம்படுத்தப்படுகிறது.
இப்பகுதியில் உள்கட்டமைப்பை வலுப்படுத்த அசாமில் ஏற்கனவே சுமார் 751 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. மேலும், 1,100 கோடி ரூபாய் மதிப்பிலான கப்பல் பழுதுபார்ப்பு மற்றும் சுற்றுலாத் துறைமுகப் பணிகள் தற்போது நடந்து வருவதுடன், எதிர்காலத்தில் 4,800 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டங்களைச் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. நதியின் பெரும் சவால்களான வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் நதி மேலாண்மை போன்ற பணிகளுக்காக ஜிஐஎஸ் மற்றும் லிடார் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
மத்திய அரசின் இந்த தொடர் முயற்சிகளால், கடந்த 2014-ஆம் ஆண்டில் 18 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த உள்நாட்டு நீர்வழிச் சரக்கு போக்குவரத்து, 2025-26 ஆம் ஆண்டில் 218 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. இத்திட்டம் சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத மற்றும் குறைந்த செலவிலான போக்குவரத்தை உருவாக்குவதுடன், இந்தியாவின் 'கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கைக்கு' பெரும் பலம் சேர்க்கும் என அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் பல மாநில அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263036®=3&lang=1
***
SS/VK/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2263249)
வருகையாளர் எண்ணிக்கை : 19