உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில், பஸ்தாரில் 26-வது மத்திய மண்டலக் குழு கூட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAY 2026 6:26PM by PIB Chennai
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில், சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் 26-வது மத்திய மண்டலக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்தியா நக்சல் பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபட்டு வரலாற்று சாதனை படைத்த பிறகு, இந்த கூட்டம் பஸ்தாரில் நடப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் தெரிவித்தார். பாதுகாப்புப் படையினரின் வீரமும், மத்திய-மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடும் இதற்கு முக்கியக் காரணம் என்று பாராட்டிய அவர், இப்பகுதிகள் மற்ற மாநிலங்களுக்கு இணையாக வளர்ச்சி பெறும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் கூட்டாட்சி கட்டமைப்பு வலுவடைந்துள்ளது. கடந்த 2014 முதல் 2026 வரையிலான காலத்தில் 32 மண்டலக் குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு, விவாதிக்கப்பட்ட 1,729 விவகாரங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை தீர்க்கப்பட்டுள்ளன. இதனால் தற்போதைய சூழலில் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே எவ்வித முரண்பாடுகளும் இல்லை. இயற்கை வளமும் கலாச்சார முக்கியத்துவமும் கொண்ட இப்பகுதியில் ஜல் ஜீவன் மிஷன்-2 மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குதல், ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஒழித்தல், பள்ளி இடைநிற்றலைக் குறைத்தல், மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கு 50 சதவீதம் கவனம் செலுத்துதல் போன்றவற்றிற்கு அமைச்சர் முக்கியத்துவம் அளித்தார்.
மேலும், சட்டம்-ஒழுங்கு குறித்துப் பேசிய அவர் போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விரைவான டிஎன்ஏ பரிசோதனை மூலம் 100 சதவீதம் தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்றார். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும், சைபர் குற்றங்களைத் தடுக்க '1930' உதவி எண்களை மேம்படுத்தவும், கலப்படக் கடைகள் குறித்த விவரங்களைப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தவும் மாநில முதலமைச்சர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262916®=3&lang=1
***
SS/VK/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2263246)
வருகையாளர் எண்ணிக்கை : 9