பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி, நார்வே பிரதமருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 18 MAY 2026 8:21PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (18.05.2026) ஓஸ்லோவில் நார்வே பிரதமர் திரு ஜோனாஸ் கார் ஸ்டோரே-யுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியாவுக்கும் நார்வே-வுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளின் அடையாளமாக, இன்று காலை ஓஸ்லோ விமான நிலையத்திற்கு அவர் சென்றடைந்தபோது, நார்வே பிரதமர் ஸ்டோரே நேரடியாக வந்து அவரை அன்புடன் வரவேற்றார்.

 

இரு தலைவர்களும் வர்த்தகம், முதலீடுகள், இந்தியா- ஐரோப்பிய யூனியன் வர்த்தக பொருளாதார ஒப்பந்தத்தின் ஒப்பந்தத்தின் தொடர் நடவடிக்கைகள், பருவநிலை மாற்றம், எரிசக்தி, நீலப் பொருளாதாரம், கடல்சார் பொருளாதாரம், ஆராய்ச்சி, உயர்கல்வி, ஆர்க்டிக் ஒத்துழைப்பு, விண்வெளி, ஆகியவை தொடர்பாகவும் இவற்றில் ஒத்துழைப்பை  அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர். நிலைத்தன்மை, பசுமை மேம்பாட்டுக்கான தங்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வலியுறுத்தும் வகையில், உறவுகளை உத்திசார் ஒத்துழைப்பு நிலைக்கு உயர்த்துவதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

 

பொருளாதார, வர்த்தகக் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்குப் பெரும் சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இந்தியாவில் நார்வே நிறுவனங்களின் அதிக முதலீடுகளைப் பிரதமர் வரவேற்றார். 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கும் நார்வே-வுக்கும் இடையிலான தற்போதைய வர்த்தக மதிப்பை இரட்டிப்பாக்கும் இலக்கை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். மேலும், வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் 100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டு உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கும், இந்தியாவில் ஒரு மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், பல்வேறு துறைகளில் ஆற்றல்மிக்க கூட்டணிகளை உருவாக்கவும் பணியாற்றுமாறு வணிகப் பிரதிநிதிகளை அவர்கள் ஊக்குவித்தனர்.

 

கடல்சார் சூழல் பாதுகாப்பு, கப்பல் கட்டுதல், பசுமைக் கப்பல் போக்குவரத்து, சுரங்கப்பாதை உள்கட்டமைப்பு, விண்வெளி, செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், இணையப் பாதுகாப்பு, மாலுமிகள் பயிற்சி, மீன்வளம், மீன் வளர்ப்பு உள்ளிட்ட நீலப் பொருளாதாரத் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு தலைவர்கள் தங்கள் குழுக்களுக்கு அறிவுறுத்தினர். அவர்கள் ஐநா கடல் சட்ட மாநாட்டின் கொள்கைகளை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்னெடுப்பில் நார்வே இணைவதையும் வரவேற்றனர். 2026 ஜூன் மாதம் பிரான்சில் நடைபெறவுள்ள 'பாரத் இன்னோவேட்ஸ் 2026' நிகழ்வில் பங்கேற்குமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி நார்வே-வுக்கு அழைப்பு விடுத்தார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு புத்தொழில் புத்தாக்க மையம், பசுமைப் புத்தாக்க ஹேக்கத்தான் ஆகியவற்றை அமைக்கவும் அவர் பரிந்துரைத்தார்.

 

சுற்றுச்சூழல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலியுறுத்திய தலைவர்கள், சிறப்புத் தொழில்நுட்பங்களில் அதிக ஒத்துழைப்புடன் செயல்படவும், இந்தியாவில் உள்ள தூய்மை எரிசக்தித் திட்டங்களில் நார்வே அதிக முதலீடுகளைச் செய்யவும் அழைப்பு விடுத்தனர்.

 

ஆர்க்டிக் பகுதியில் துருவ ஆராய்ச்சியை வலுப்படுத்தவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நடைமுறைகளை உறுதிப்படுத்தவும் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பெருங்கடல்கள், பருவநிலை, சுகாதாரம், முக்கிய கனிமங்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களில் கூட்டுப் பணிகளை அவர்கள் வலியுறுத்தினர். உயர்கல்வியில், கூட்டுப் பட்டப்படிப்புத் திட்டங்கள், தகுதிகளுக்கான பரஸ்பர அங்கீகாரம், மாணவர்கள் - ஆசிரியர்களின் போக்குவரத்து ஆகியவற்றை அதிகரிக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

 

பலதரப்பு மன்றங்களில் ஒத்துழைப்பது குறித்தும் அவர்கள் விவாதித்ததோடு, பரஸ்பர நலன் சார்ந்த முக்கிய பிராந்திய, உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். சீர்திருத்தப்பட்ட ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு நார்வேயின் ஆதரவை நார்வே பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

 

இரு தலைவர்களும், எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளிட்டவற்றைத் திட்டவட்டமாகக் கண்டித்ததோடு, இந்த அச்சுறுத்தலைச் சமாளிக்க ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தினர்.

 

பாதுகாப்பு ஒத்துழைப்பு, பாதுகாப்புத் தொழில்துறை கூட்டுறவில் உள்ள சாத்தியக்கூறுகளைக் குறிப்பிட்ட அவர்கள், டிஜிட்டல் தளத்தில் ஒத்துழைப்பை ஆராய ஒப்புக்கொண்டதோடு, டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக டிஜிட்டல்மயமாக்கல் குறித்த ஒரு கூட்டுப் பணிக்குழுவை அமைக்குமாறு அமைச்சகங்களுக்கு உத்தரவிட்டனர்.

 

நார்வே பிரதமர் ஸ்டோரேவின அன்பான விருந்தோம்பலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். அவர் நார்வே பிரதமர் ஸ்டோரேவை இந்தியாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார். இரு தலைவர்களும் உயர் நிலைப் பரிமாற்றங்களின் அதே வேகத்தைத் தொடர ஒப்புக்கொண்டனர்.

(Release ID : 2262509)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2262539) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Kannada