பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அஃப்ஸ்லூயிட்ஜிக் அணையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பார்வையிட்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 MAY 2026 3:38PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, நெதர்லாந்து பிரதமர் திரு ராப் ஜெட்டனுடன் இணைந்து, புகழ்பெற்ற நெதர்லாந்து நீர் மேலாண்மைக் கட்டமைப்பான அஃப்ஸ்லூயிட்ஜிக் அணையைப் பார்வையிட்டார்.

புதுமையான நீர் மேலாண்மைத் தீர்வுகள், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன், நிலையான உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இரு நாடுகளின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை அது எடுத்துக் காட்டியது. 32 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த அணை, வெள்ளக் கட்டுப்பாட்டில் ஒரு உலகளாவிய அளவுகோலாகத் திகழ்கிறது. இது நெதர்லாந்தின் பெரும் பகுதிகளை வட கடலில் இருந்து பாதுகாப்பதோடு, நீர் சேமிப்பிற்கும் வழிவகுக்கிறது.

இந்த அணைப் பயணம், அஃப்ஸ்லூயிட்ஜிக்கிற்கும் குஜராத் மாநிலத்தில் உள்ள இந்தியாவின் லட்சியமிக்க கல்பாசர் திட்டத்திற்கும் இடையிலான ஒற்றுமைகளை எடுத்துக் காட்டியது. கல்பாசர் திட்டமானது, காம்பத் வளைகுடாவின் குறுக்கே ஒரு நீர் நீர்த்தேக்கத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது கடல் அலை மூலம் மின் உற்பத்தி, நீர்ப்பாசனம், போக்குவரத்து உள்கட்டமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. இது தொடர்பாக, கல்பாசர் திட்டத்தில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக, இந்தியாவின் ஜல் சக்தி அமைச்சகத்திற்கும் நெதர்லாந்தின் நீர் மேலாண்மை அமைச்சகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதை இரு தரப்பினரும் வரவேற்றனர்.

நீர் பொறியியலில் நெதர்லாந்தின் நிபுணத்துவமும், இந்தியாவின் செயலாக்கமும் பரஸ்பர நன்மை பயக்கும் என்று இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். இந்த அணைப் பயணம், புத்தாக்கம், நிலைத்தன்மைக்கான பகிரப்பட்ட உறுதிப்பாடு ஆகியவற்றை எடுத்துக்காட்டி, நீர் தொடர்பான இந்தியா-நெதர்லாந்து ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

***

(Release ID: 2261979)

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2262016) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Gujarati , Kannada