PIB Backgrounder
அணை புனரமைப்பு: கொள்கை மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல்
இடுகை இடப்பட்ட நாள்:
15 MAY 2026 1:32PM by PIB Chennai
இந்தியாவின் அணைகள் நீர்ப்பாசனம், புனல் மின் உற்பத்தி, வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துதல், குடிநீர் வழங்கல், ஒட்டுமொத்த நீர்ப் பாதுகாப்பு ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பல தசாப்தங்களாக, நாடு முழுவதும் விவசாய வளர்ச்சி, தொழில்துறை மேம்பாடு மற்றும் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கு அணைகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளன.
அதிக எண்ணிக்கையிலான அணைகள் பழசாவதாலும், பருவநிலை மாற்றம் அதிகரிப்பதாலும், அவற்றின் புனரமைப்பு, செயல்பாட்டுப் பாதுகாப்பு, நீண்டகாலத் தாங்குதிறன் ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. கட்டுமானப் புனரமைப்பு, நிறுவனச் சீர்திருத்தங்கள், டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்புகள், இடர் அடிப்படையிலான பாதுகாப்பு மேலாண்மை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு விரிவான அணுகுமுறையின் மூலம் இந்தப் பிரச்சனையை மத்திய அரசு எதிர்கொள்கிறது.
இந்தியா தற்போது 6,628 அணைகளுடன் உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இவற்றில் 6,545 அணைகள் செயல்பாட்டிலும், 83 அணைகள் கட்டுமானத்திலும் உள்ளன. இந்த அணைகளின் மொத்த நீர் சேமிப்புத் திறன் சுமார் 330 பில்லியன் கன மீட்டராகும்.
இந்த அணைகளில் சுமார் 26% (1,681 அணைகள்) 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. இவற்றில் 100 ஆண்டுகளுக்கும் மேலான 291 அணைகளும் அடங்கும். சுமார் 42% அணைகள் 25-50 ஆண்டுகள் பழமையானவை. இந்தியாவின் மிகப் பழைய அணையான, தமிழ்நாட்டில் உள்ள கல்லணை ஏறத்தாழ 2,000 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது — இது அதன் நீடித்த பொறியியல் மற்றும் பராமரிப்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
முன்னோடித் திட்டமான அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் (ட்ரிப்) என்பது, கட்டமைப்புப் பழுது நீக்குதல், நீர் வழித்தடங்கள் மற்றும் மதகுகளை நவீனமாக்குதல், மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகளை நிறுவுதல் ஆகியவற்றின் மூலம் தற்போதுள்ள அணைகளின் பாதுகாப்பையும் செயல்பாட்டுத் திறனையும் மேம்படுத்த மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது. இது உலக அளவில் மிகப்பெரிய அணை புனரமைப்புத் திட்டங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
ட்ரிப் திட்டத்தின் முதற்கட்டம், உலக வங்கி ஆதரவுடன் ஏப்ரல் 2012-ல் தொடங்கப்பட்டது. இத்திட்டம் ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு, உத்தராகண்ட் ஆகிய ஏழு மாநிலங்களில் உள்ள 223 அணைகளை உள்ளடக்கியது. 223 அணைகளுக்கான வடிவமைப்பு, வெள்ளம் பற்றிய ஆய்வுகள், அணை உறுதிநிலை ஆய்வுகள், புனரமைப்பு முன்மொழிவுகளை இறுதிசெய்தல், அவற்றை செயல்படுத்துதல் ஆகியவை இந்தக் கட்டத்தில் நிறைவடைந்தன.
ட்ரிப் திட்டத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப் பணிகள் அக்டோபர் 2021-ல் செயல்பாட்டுக்கு வந்தன. இரண்டாம் கட்டத்திற்கு உலக வங்கியும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியும் இணைந்து நிதியளிக்கின்றன. இத்திட்டத்தின் மொத்த ஒதுக்கீடு ரூ. 10,211 கோடி (இரண்டாம் கட்டம்: ரூ. 5,107 கோடி; மூன்றாம் கட்டம்:ரூ.5,104 கோடி) ஆகும். இதில் ரூ. 7,000 கோடி வெளிநாட்டுக் கடனாகவும், ரூ. 3,211 கோடி பங்கேற்கும் மாநிலங்கள் மற்றும் மத்திய முகமைகளாலும் ஏற்கப்படுகிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் இணைந்து 10 ஆண்டுகள் நீடிக்கும். ஒவ்வொரு கட்டமும் ஆறு ஆண்டுகள் என இரண்டு ஆண்டுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து தொடரும். ரூ. 5,053 கோடி மதிப்பில் 191 அணைகளுக்கான புனரமைப்பு முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2025, 31 மார்ச் வரை ட்ரிப் II திட்டத்தின் கீழ் மொத்த செலவு ரூ. 2,225 கோடியாக உள்ளது. இதில் 43 அணைகளில் முக்கிய கட்டுமானப் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
அணைப் பாதுகாப்புச் சட்டம், 2021, டிசம்பர் 30 அன்று அமலுக்கு வந்தது. இது நாடு முழுவதும் உள்ள குறிப்பிட்ட அணைகளின் கண்காணிப்பு, ஆய்வு, செயல்பாடு மற்றும் பராமரிப்புக்கு ஒரு விரிவான கட்டமைப்பை வழங்குகிறது. மேற்குறிப்பிட்ட அனைத்து 6,628 அணைகளும் அணை உறுதி மற்றும் புனரமைப்பு கண்காணிப்புச் செயலி (தர்மா) தளத்தில் பதிவு செய்யப்பட்டன. மேம்படுத்தப்பட்ட அணைப் பாதுகாப்பு கண்காணிப்பு மற்றும் தரவு மேலாண்மைக்காக தர்மா இணைய அடிப்படையிலான தளமும் அலைபேசிச் செயலியும் தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் சுமார் 13,000 அணைகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டு, அதன் பதிவுகள் டிஜிட்டல் முறையில் பராமரிக்கப்படுகின்றன.
24.04.2024 அன்று அறிவிக்கப்பட்ட ஒழுங்குமுறை விதிகளின்படி, அணை உரிமையாளர்கள் குறிப்பிடப்பட்ட அனைத்து அணைகளிலும் பருவமழைக்கு முன்னும் பின்னும் ஆய்வுகளை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, மாநில அரசு, தேசியக் குழு, தேசிய ஆணையம், மாநிலக் குழு அல்லது மாநில அணைப் பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றால் அல்லது அவற்றின் சார்பாக அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் எந்தவொரு அறிவுறுத்தலுக்கும் இடையூறு விளைவித்தல், இணங்க மறுத்தல் ஆகியவற்றுக்கு சட்டத்தின் பத்தாவது அத்தியாயம் தண்டனை வழங்க வகைசெய்கிறது. ஓராண்டு வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையில் அடங்கும். மேலும், அறிவுறுத்தல்களுக்கு இணங்க மறுத்ததன் விளைவாக உயிரிழப்புகள் அல்லது உடனடி ஆபத்து ஏற்பட்டால், ஈராண்டு வரை நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
ட்ரிப் போன்ற பெரிய அளவிலான திட்டங்கள், 2021 ஆம் ஆண்டின் அணைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சட்டரீதியான மேற்பார்வை, தர்மா போன்ற டிஜிட்டல் தளப் பயன்பாடு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு, இந்தியாவில் முதிர்ச்சியடைந்து வரும் அணைப் பாதுகாப்புச் சூழலமைப்பைப் பிரதிபலிக்கிறது. இந்த முன்னெடுப்புகள் ஒன்றிணைந்து, அணைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, பழைமையான உள்கட்டமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்தி, புதிதாக உருவாகும் அபாயங்களுக்கு எதிரான மீள்திறனையும் அதிகரிக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261335®=3&lang=1
*******
SS/SMB/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2261549)
வருகையாளர் எண்ணிக்கை : 6