சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நொய்டாவில், காற்று மாசுவைக் குறைப்பதற்கும், விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துவதற்கும் காற்றுத் தர மேலாண்மை ஆணையம் உத்தரவு

இடுகை இடப்பட்ட நாள்: 09 MAY 2026 4:11PM by PIB Chennai

தேசிய தலைநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் காற்றுத் தர மேலாண்மை ஆணையம், 08.05.2026 அன்று, நொய்டாவில், ஒரு சிறப்பு ஆய்வுப் பணியை மேற்கொண்டது. நகரில் கண்ணுக்குப் புலப்படும்  சாலைத் தூசுகளின் அளவை மதிப்பிடுவதிலும், தூய்மை மற்றும் துப்புரவுப் பணிகள் குறித்தும் இந்த ஆய்வில் கவனம் செலுத்தப்பட்டது.

ஆணையத்தால் அமைக்கப்பட்ட 19 'பறக்கும் படை' குழுக்கள், நொய்டா பகுதி முழுவதும் ஆய்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. நொய்டா ஆணையத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட, 46 சாலைப் பகுதிகளும் இதில் அடங்கும். இந்த ஆய்வுகளின் போது, செக்டார் 20, 21, 59, 62, 80, 82, 83, 84, 87, 88, 138, 140, 141 மற்றும் 145 உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், அதிகப்படியான சாலைத் தூசு, கட்டுமானம், கட்டட இடிப்புப் பணிகளிலிருந்து உருவாகும் கழிவுகள் 28 இடங்களில் இருந்தது  கண்டறியப்பட்டன. சில சாலைப் பகுதிகளில், வழக்கமான துப்புரவுப் பணிகள், மாசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் கட்டிட இடிபாட்டுக் கழிவுகளை அறிவியல் ரீதியில் கையாண்டு அகற்றுவதில் உள்ள குறைபாடுகள் இருப்பதையும் இந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

வழக்கமான இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவுப் பணிகள், குறிப்பிட்ட இடங்களில தேங்கியுள்ள நீர் மற்றும் குவிந்துள்ள கழிவுகளைச் சரியான நேரத்தில் அகற்றுதல் ஆகியவற்றின் மூலம், மாசுவின் அளவைக்  கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத  கழிவுகளைக் கொட்டுவதைத் தடுக்கவும், பரிந்துரைக்கப்பட்ட சுற்றுச்சூழல் விதிமுறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யவும், கண்காணிப்பு மற்றும் அமலாக்க வழிமுறைகளை வலுப்படுத்துமாறு நொய்டா ஆணையத்திற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தூசுவின் அளவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் ஏற்படும் எந்தவொரு குறைபாடுகளும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலட்சியமும், மிகவும் தீவிரமாகப் கண்காணிக்கப்படும் என்றும் ஆணையம் கூறியுள்ளது. இத்தகைய குறைபாடுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளை அடையாளம் கண்டு, அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் துகள் வடிவ மாசு ஏற்படுவதற்குச் சாலைகளில் உள்ள தூசிகளே ஒரு முக்கியக் காரணமாகத் திகழ்கிறது என்றும், அதனைக்   கட்டுப்படுத்தத் தொடர்ச்சியான மற்றும் இலக்கு சார்ந்த முயற்சிகள் தேவை என்றும் அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கள அளவில் தொடர் கண்காணிப்பு, மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு நடைமுறைகள் மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய தூசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்துதல் ஆகியவற்றின் அவசியத்தை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259368&reg=3&lang=1

 

(Release ID: 2259368)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2259395) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी