மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிராவில் உள்ள அலங்கார மீன் இனப்பெருக்க மையத்தை மத்திய மீன்வளத் துறைச் செயலாளர் பார்வையிட்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 09 MAY 2026 6:33AM by PIB Chennai

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மங்ருல் கிராமத்தில், திருமதி யசோதரா சஞ்சய் கண்டகலேயால், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நிறுவப்பட்ட 'அலங்கார மீன் இனப்பெருக்க மையத்தை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின், மீன்வளத் துறைச் செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிகி பார்வையிட்டார். இதனையடுத்து, கள அளவில், மீன் வளர்ப்பில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்ளும் வகையில், இத்திட்டத்தின் பயனாளிகளுடனும் அவர் கலந்துரையாடினார்.

 இந்தியாவில் முதல்முறையாக இந்த இனப்பெருக்க மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையம் 25-க்கும் மேற்பட்ட வகைகளில் உள்ள அலங்கார மீன்களைப் பாதுகாத்து, இனப்பெருக்கம் செய்கிறது. திருமதி யசோதரா சஞ்சய் கண்டகலே, தனது "சாம் டிஸ்க்ஸ்" என்ற வணிக முத்திரையை, நாட்டின் உயர்தர 'டிஸ்கஸ்' வகை மீன்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக, வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளார். இந்த இனப்பெருக்க மையம், 20-க்கும் மேற்பட்ட  இனங்களைச் சேர்ந்த சுமார் 7.7 லட்சம் அலங்கார மீன்களை உற்பத்தி செய்துள்ளது. இதன் மூலம், ரூ 1.93 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதுடன், 25 முதல் 30 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. 700-க்கும் மேற்பட்ட தொட்டிகளைக் கொண்ட இந்த மையம், திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் சிறந்த நடைமுறைகளை ஊக்குவிப்பதுடன், அலங்கார மீன்வளத் துறையின் ஏற்றுமதித் திறனை மேம்படுத்துவதிலும் பங்களிக்கிறது. இந்த இனப்பெருக்க மையம் ஒழுங்குமுறைத் தரநிலைகளுக்கு ஏற்ப செயல்படுவதுடன், மத்திய அரசின் பல்வேறுத் திட்டங்களின் கீழ் பயனடைகிறது. அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், மொரிஷியஸ், தென் கொரியா, கத்தார், குவைத், மலேசியா, சீனா, உஸ்பெகிஸ்தான், நைஜீரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு அலங்கார மீன்களை இந்த மையம் ஏற்றுமதி செய்கிறது. மீன்வளத் துறையில் புதுமை, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதில், மத்திய அரசு வழங்கும் உதவிகள், திறம்படப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இந்தியாவில் சுமார் 700 வகையான உள்நாட்டு நன்னீர் மீன் இனங்களும், 300-க்கும் மேற்பட்ட கடல் மீன் இனங்களும் உள்நாட்டிலேயே கிடைக்கின்றன. இது நாட்டின் பரந்த மீன்வளச் சூழல் அமைப்பைச்  சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவின் அலங்கார மீன் ஏற்றுமதி மதிப்பு ரூ 41 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259238&reg=3&lang=1

 

 (Release ID: 2259238)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2259359) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी