நித்தி ஆயோக்
‘இந்தியாவின் பள்ளிக் கல்வி முறை: தரம் உயர்த்தலுக்கான பகுப்பாய்வு மற்றும் கொள்கை வழிகாட்டி’ ஆய்வறிக்கை - நித்தி ஆயோக் வெளியீடு
இடுகை இடப்பட்ட நாள்:
07 MAY 2026 1:13PM by PIB Chennai
‘இந்தியாவின் பள்ளிக் கல்வி முறை: தரம் உயர்த்தலுக்கான பகுப்பாய்வு மற்றும் கொள்கை வழிகாட்டி’ என்ற தலைப்பிலான அறிக்கையை நித்தி ஆயோக் துணைத்தலைவர் திரு சுமன் பெரி, தலைமைச் செயல் அதிகாரி திருமதி நிதி சிப்பெர் ஆகியோர் நேற்று (மே 06, 2026) வெளியிட்டனர்.
இந்தியாவின் பள்ளிக் கல்வி முறையானது தற்போது 14.71 லட்சம் பள்ளிகள், 24.69 கோடிக்கும் அதிகமான மாணவர்களுடன், உலகின் மிகப்பெரிய கல்வி அமைப்பாக உருவெடுத்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கை, கடந்த பத்தாண்டுகளில் கல்வித்துறையில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த விரிவான தகவல்களை வழங்குகிறது. நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கல்விக்கான அணுகல், உள்கட்டமைப்பு வசதிகள், சமத்துவம், உள்ளடக்கிய கல்வி, டிஜிட்டல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் மாணவர்களின் கற்றல் திறன் ஆகிய முக்கிய காரணிகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள பகுப்பாய்வும் வரைபட விளக்கங்களும், பள்ளிகளின் உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சியைப் பறைசாற்றுகின்றன. குறிப்பாக, பள்ளிகளில் மின்சார வசதி, கழிப்பறை வசதிகள், அனைவரையும் உள்ளடக்கிய உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதையும், கணினி வசதி, இணையத் தொடர்பு, ஸ்மார்ட் வகுப்பறைகள் வாயிலாக டிஜிட்டல் கற்றல் சூழல் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டுகின்றன.
கல்வி கற்றலில் பெண் குழந்தைகளின் பங்களிப்பு அதிகரித்திருப்பதும், அனைத்து நிலைகளிலும் பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியின மாணவர்களின் சேர்க்கை விகிதம் உயர்ந்து வருவதும் ஊக்கமளிக்கும் மாற்றங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில், மாணவர்களின் கற்றல் திறனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், குறிப்பாக அடிப்படை எழுத்தறிவிலும், கணித செயல்பாடுகளிலும் ஏற்பட்டுள்ள நேர்மறையான மாற்றங்கள் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேசிய கல்விக் கொள்கை 2020, நிபுண் பாரத் இயக்கம், சமக்ர சிக்ஷா அபியான் போன்ற அரசின் தொடர்ச்சியான கொள்கை ரீதியான முன்னெடுப்புகள் இத்தகைய முன்னேற்றங்களுக்கு வலு சேர்த்துள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2258645®=3&lang=1
***
SS/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2258802)
வருகையாளர் எண்ணிக்கை : 9