பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஹைதராபாத்தில் நடைபெற்ற விங்ஸ் இந்தியா 2026 நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 28 JAN 2026 7:18PM by PIB Chennai

மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான ராம் மோகன் நாயுடு அவர்களே, முரளிதர் மொஹோல் அவர்களே, உலகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள மாண்புமிகு அமைச்சர்களே, உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறையின் பிரதிநிதிகளே, சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளேபெரியோர்களே, தாய்மார்களே!

வணக்கம்!

​விங்ஸ் இந்தியாவின் இந்த மேடையில், அனைத்து துறைத் தலைவர்கள், நிபுணர்கள், முதலீட்டாளர்களை நான் வரவேற்கிறேன். நீங்கள் அனைவரும் அறிந்தபடி, விமானத் துறையின் அடுத்த சகாப்தம் பல எதிர்பார்ப்புகளால் நிறைந்துள்ளது. மேலும் இந்தியா இதில் ஒரு முக்கிய பங்களிப்பாளராக மாறி வருகிறது. விமான உற்பத்தி, ஓட்டுதல் பயிற்சி, மேம்பட்ட விமான இயக்கம் போன்றவற்றில் இந்தியா அதிக சாத்தியக்கூறுகளுடன் உள்ளது. எனவே, விங்ஸ் இந்தியாவின் இந்த உச்சிமாநாடு நம் அனைவருக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

 

நண்பர்களே,

கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியாவின் முழு விமானப் போக்குவரத்துத் துறையிலும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. விமானப் பயணம் வசதி படைத்த ஒரு பிரிவினருக்கு மட்டுமே சாத்தியமாக இருந்தது. ஆனால் இன்று, நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இப்போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானச் சந்தையாக உள்ளது. நமது பயணிகள் போக்குவரத்து மிக வேகமாக அதிகரித்துள்ளது. இந்திய விமான நிறுவனங்களின் எண்ணிக்கையும் வேகமாக விரிவடைந்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவின் விமான நிறுவனங்கள் 1500-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கான ஆர்டர்களை வழங்கியுள்ளன.

நண்பர்களே,

நமது அரசு நீண்டகாலத் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு வருவதால், இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் விமானப் பயணம் இப்போது அனைவரையும் உள்ளடக்கியதாக மாறி வருகிறது. இந்திய மக்கள் விமானத்தில் எளிதாகப் பயணிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். எனவே, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களை விமான நிலையங்களுடன் இணைத்துள்ளோம். 2014-ம் ஆண்டில், இந்தியாவில் 70 விமான நிலையங்கள் இருந்தன. இப்போது, இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 160-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. அதாவது, பத்து ஆண்டுகளில், இந்தியாவில் விமான நிலையங்கள் இரு மடங்காக அதிகரித்துள்ளன. இதனுடன், நமது மக்களுக்கு குறைந்த விமானக் கட்டணங்களுடன் உடான் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். உடான் திட்டத்தின் காரணமாக, 1 கோடியே 50 லட்சம் பயணிகள் அந்த வழித்தடங்களில் பயணம் செய்துள்ளனர். அவற்றில் பல வழித்தடங்கள் இதற்கு முன்பு இல்லை.

நண்பர்களே,

இப்போது, இந்தியா வளர்ச்சியடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கி முன்னேறி வரும் நிலையில், நமது விமானத்துறை செயல்பாடு பல மடங்கு விரிவடையும் என்பது உறுதி. 2047-ம் ஆண்டுக்குள், இந்தியாவில் நானூறுக்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய கட்டமைப்பாக இருக்கும். இது மட்டுமல்லாமல், உடான் திட்டத்தின் அடுத்த கட்டத்திலும் நமது அரசு செயல்பட்டு வருகிறது. இந்தக் கொள்கையின் மூலம், பிராந்திய, குறைந்த கட்டண விமான இணைப்பு மேலும் வலுப்படுத்தப்படும். இவை அனைத்துடனும், கடல் விமான செயல்பாடுகளும் விரிவுபடுத்தப்படுகின்றன. இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் விமான இணைப்பை மேலும் மேம்படுத்தப்படுவதே எங்கள் முயற்சி.

நண்பர்களே,

இப்போது, மத்திய அரசு சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாடு முழுவதும் சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த இடங்களுக்குச் செல்வதற்கு, ஏராளமான மக்களின் முதல் தேர்வாக விமானப் பயணம் உள்ளது. வரும் காலத்தில், விமானப் பயணத்திற்கான தேவையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்வு ஏற்படும். அதாவது, உங்கள் அனைவருக்கும் அதிக முதலீட்டு வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

நண்பர்களே,

இன்று, இந்தியா ஒரு முக்கிய உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக மாறி வரும் வேளையில், விமானப் போக்குவரத்து தொடர்பான தேவைகளுக்கு நாம் மற்றவர்களைச் சார்ந்து இருக்கக்கூடாது என்பதும் அவசியம். நாம் தற்சார்பு பாதையை வலுப்படுத்த வேண்டும். இது இந்தியாவில் முதலீடு செய்ய வரும் நிறுவனங்களுக்கும் உதவியாக இருக்கும். இந்த சிந்தனையுடன், விமான வடிவமைப்பு, விமான பழுதுபார்ப்பு, விமான பராமரிப்பு எனப்படும்  MRO சூழல் அமைப்புக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இப்போதும் கூட, இந்தியா விமான பாகங்களின் முக்கிய உற்பத்தியாளராகவும் விநியோக நாடாகவும் உள்ளது. நாட்டில் ராணுவப் போக்குவரத்து விமானங்களை நாமே தயாரிக்கத் தொடங்கியுள்ளோம். இந்தியா சிவில் விமான உற்பத்தியின் திசையில் நகர்கிறது. மேலும் முதலீட்டாளர்களுக்குப் பல நன்மைகள் உள்ளன. உலகளாவிய விமானச் சந்தையில் இந்தியாவின் புவியியல் நிலை, நமது சிறந்த உள்நாட்டு கட்டமைப்பு, எதிர்கால விரிவாக்கம் ஆகியவை நமது மிகப்பெரிய பலம்.

நண்பர்களே,

இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும், செங்குத்தாகப் புறப்பட்டுத் தரையிறங்கும் விமானங்கள் முழு விமானத் துறைக்கும் ஒரு புதிய பாதையை வழங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்த தொழில்நுட்பம் நமது பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கும். இது தவிர, நிலையான விமான எரிபொருளிலும் நாங்கள் சிறந்த பணிகளைச் செய்து வருகிறோம். அடுத்த சில ஆண்டுகளில், பசுமை விமான எரிபொருளின் முக்கிய உற்பத்தியாளராகவும் ஏற்றுமதியாளராகவும் இந்தியா மாறும்.

நண்பர்களே,

நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையிலும் நாங்கள் பல சீர்திருத்தங்களைச் செய்து வருகிறோம். இதுபோன்ற ஒவ்வொரு முயற்சியின் காரணமாகவும், இந்தியா உலகளாவிய தெற்கு நாடுகளுக்கும் உலகின் பிற நாடுகளுக்கும் இடையே ஒரு முக்கிய விமானப் போக்குவரத்து நுழைவாயிலாக மாறி வருகிறது. விமானப் போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடைய முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்களுக்கு இது மிகப் பெரிய வாய்ப்பாகும்.

நண்பர்களே,

இப்போது, இந்தியா நாட்டின் பல்வேறு பகுதிகளையும் அங்குள்ள சந்தைகளையும் ஒன்றோடொன்று இணைத்து வருகிறது. நமது நகரங்கள் பல்வேறு போக்குவரத்து முறைகள் மூலம் துறைமுகங்களுடன் இணைக்கப்படுகின்றன. இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் தொலைநோக்குப் பார்வை சரக்கு விமான சேவைகளிலும் சமமாக கவனம் செலுத்துகிறது. சரக்கு விமான இயக்கத்தை விரைவாகவும் திறமையாகவும் மாற்ற, அரசு தேவையான அனைத்து ஒழுங்குமுறை சீர்திருத்தங்களையும் மேற்கொண்டு வருகிறது. இதனுடன், எங்கள் டிஜிட்டல் சரக்கு தளங்கள் முழு செயல்முறையையும் எளிமையாகவும் வெளிப்படையாகவும் ஆக்குகின்றன. விமான நிலையத்திற்கு வெளியே செயலாக்க ஏற்பாடு காரணமாக, எங்கள் விமான நிலையங்களின் சுமையும் குறைந்து வருகிறது. சரக்கு கையாளும் பணி இன்னும் வேகமாகவும் சிறப்பாகவும் நடக்கும் வகையில் இதுபோன்ற நவீன கிடங்குகளையும் நாங்கள் கட்டி வருகிறோம். எதிர்காலத்தில், இது சரக்குகளின் விநியோக நேரம், செலவு இரண்டையும் குறைக்கும். எதிர்காலத்தில், இந்தியா ஒரு பெரிய, போட்டித்தன்மை வாய்ந்த சரக்குப் போக்குவரத்து மையமாக உருவாகும்.

நண்பர்களே,

இந்தியாவின் கிடங்குத் துறை, சரக்கு அனுப்புதல், சரக்குப் போக்குவரத்து, மின் வணிகம் போன்ற அனைத்துத் துறைகளிலும் உள்ள வாய்ப்புகளை நீங்கள் ஆராய வேண்டும் என்று அனைத்து முதலீட்டாளர்களுக்கும் நான் அறவுறுத்துகிறேன்.

நண்பர்களே,

இப்போது, உலகில் ஒரு சில நாடுகளில் மட்டுமே இவ்வளவு பெரிய அளவில், இவ்வளவு கொள்கை ஸ்திரத்தன்மையுடன், இவ்வளவு தொழில்நுட்ப உறுதிடன் விமானப் போக்குவரத்துத் துறை உள்ளது. உலகின் ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு தொழில்துறைத் தலைவருக்கும், ஒவ்வொரு புதுமைக் கண்டுபிடிப்பளர்களுக்கும் நான் கூறுகிறேன்.. நீங்கள் இந்த பொன்னான வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமது இந்த வளர்ச்சிப் பயணத்தில் நீண்டகால பங்கேற்பாளபாரக மாறி, உலகின் விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிக்காக பாடுபடுங்கள். இந்தியாவின் விமானப் பயணத்தின் இணை விமானிகளாக எங்களுடன் வருமாறு உலகம் முழுவதிலுமிருந்து முதலீட்டாளர்களை நான் அழைக்கிறேன்.  விங்ஸ் இந்தியாவை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்.

மிக்க நன்றி!

***

(Release ID: 2219748)

AD/VK/KR


(रिलीज़ आईडी: 2258070) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam