பிரதமர் அலுவலகம்
காமன்வெல்த் நாடுகளின் மக்களவைத் தலைவர்கள் மற்றும் தலைமை அலுவலர்களின் 28-வது மாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
15 JAN 2026 1:22PM by PIB Chennai
மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா அவர்களே, மாநிலங்களவையின் துணைத் தலைவர் திரு. ஹரிவன்ஷ் அவர்களே, நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் தலைவர் திருமதி. துலியா அக்சன் அவர்களே, காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் தலைவர் திரு. கிறிஸ்டோபர் கலிலா அவர்களே, காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்களே மற்றும் தலைமை அலுவலர்களே, ஏனைய பிரதிநிதிகளே, பெரியோர்களே மற்றும் தாய்மார்களே!
நண்பர்களே,
ஒரு நாடாளுமன்ற ஜனநாயகத்தில், சபாநாயகர் என்ற உங்கள் பணி மிகவும் முக்கியமானது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சபாநாயகருக்கு பேசுவதற்கு அதிக வாய்ப்பு கிடைப்பதில்லை. மற்றவர்கள் பேசுவதைக் கேட்பதும், அனைவருக்கும் பேசுவதற்கு வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வதுமே அவர்களின் பணியாகும். சபாநாயகர்களிடம் இருக்கும் ஒரு பொதுவான பண்பு அவர்களின் பொறுமை. சத்தம் போடும் மற்றும் அதிக உற்சாகம் கொண்ட உறுப்பினர்களைக் கூட அவர்கள் புன்னகையுடன் கையாளுகிறார்கள்.
நண்பர்களே,
இந்தச் சிறப்புமிக்க தருணத்தில், உங்களை நான் அன்போடு வரவேற்கிறேன். இன்று நீங்கள் எங்களுடன் இருப்பதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம்.
நண்பர்களே,
நீங்கள் அமர்ந்திருக்கும் இந்த இடம், இந்தியாவின் ஜனநாயகப் பயணத்தில் அளப்பரிய முக்கியத்துவம் வாய்ந்தது. காலனித்துவ ஆட்சியின் இறுதியாண்டுகளில், இந்தியாவின் சுதந்திரம் உறுதியானபோது, இந்திய அரசியலமைப்பை வரைவதற்காக அரசியல் நிர்ணய சபை இந்த மத்திய மண்டபத்தில்தான் கூடியது. சுதந்திரத்திற்குப் பிந்தைய 75 ஆண்டுகளில், இந்தக் கட்டிடம் இந்திய நாடாளுமன்றமாகச் செயல்பட்டது; இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் எண்ணற்ற விவாதங்களும் முடிவுகளும் இந்த மண்டபத்தில்தான் நிகழ்ந்தன.
தற்போது, ஜனநாயகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த இடத்திற்கு 'அரசியலமைப்பு இல்லம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில்தான், இந்தியா தனது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததன் 75 ஆண்டுகளைக் கொண்டாடியது. இந்த அரசியலமைப்பு இல்லத்தில் உங்கள் வருகை என்பது இந்திய ஜனநாயகத்திற்கு மிகவும் சிறப்பானது.
நண்பர்களே,
காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் தலைமை அலுவலர்களின் மாநாடு இந்தியாவில் நடைபெறுவது இது நான்காவது முறையாகும். இந்த மாநாட்டின் கருப்பொருள் "நாடாளுமன்ற ஜனநாயகத்தை பயனுள்ள முறையில் வழங்குதல்" என்பதாகும். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, இவ்வளவு பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் ஜனநாயகம் நிலைத்திருக்குமா என்ற ஐயங்கள் எழுப்பப்பட்டதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். ஆனால் இந்தியா இந்த பன்முகத்தன்மையையே தனது ஜனநாயகத்தின் பலமாக மாற்றியது. மற்றொரு முக்கியமான சந்தேகம் என்னவென்றால், ஒருவேளை ஜனநாயகம் எப்படியோ தப்பிப் பிழைத்தாலும், இந்தியாவால் ஒருபோதும் வளர்ச்சி அடைய முடியாது என்பதாகும். ஆனால் ஜனநாயக நிறுவனங்களும், ஜனநாயக நடைமுறைகளும் நிலைத்தன்மை, வேகம் மற்றும் வளர்ச்சியை வழங்குகின்றன என்பதை இந்தியா நிரூபித்துள்ளது.
இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாகும். இன்று இந்தியாவின் யுபிஐ என்பது உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் பணப்பரிமாற்ற அமைப்பாகும். இந்தியா உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக உள்ளது. இந்தியா இரண்டாவது மிகப்பெரிய எஃகு உற்பத்தியாளர். இந்தியா மூன்றாவது மிகப்பெரிய புத்தொழில் சூழலமைப்பைக் கொண்டுள்ளது. இந்தியா மூன்றாவது மிகப்பெரிய விமான போக்குவரத்துச் சந்தையாக உள்ளது. இந்தியா நான்காவது மிகப்பெரிய ரயில்வே வலையமைப்பைக் கொண்டுள்ளது. இந்தியா மூன்றாவது மிகப்பெரிய மெட்ரோ ரயில் வலையமைப்பைக் கொண்டுள்ளது. இந்தியா மிகப்பெரிய பால் உற்பத்தியாளர். இந்தியா இரண்டாவது மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளர்.
நண்பர்களே,
இந்தியாவில் ஜனநாயகம் என்பது கடைகோடியில் உள்ள மக்களுக்கும் சேவைகளை கொண்டு சேர்ப்பதாகும். பொது நல உணர்வுடன், எந்தவித பாகுபாடும் இன்றி ஒவ்வொரு தனிநபருக்காகவும் நாங்கள் பணியாற்றுகிறோம். இந்த பொது நல உணர்வின் காரணமாகவே, சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில், ஜனநாயகம் பலன்களை வழங்குகிறது
நண்பர்களே,
இந்தியாவில் ஜனநாயகம் வெற்றிகரமாக இருப்பதற்குக் காரணம், எங்களைப் பொறுத்தவரை நாட்டு மக்களே உயர்ந்தவர்கள். எங்களது குடிமக்களின் விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம். அவர்களின் பாதையில் எந்தத் தடையும் வராமல் இருப்பதை உறுதி செய்ய, நடைமுறைகள் முதல் தொழில்நுட்பம் வரை அனைத்தையும் நாங்கள் ஜனநாயகப்படுத்தியுள்ளோம். இந்த ஜனநாயக உணர்வு எங்களது நரம்புகளிலும், மனதிலும், கலாச்சாரத்திலும் கலந்திருக்கிறது.
உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன்: சில ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்றால் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, இந்தியாவும் பெரும் சவால்களை எதிர்கொண்டது. இருப்பினும், அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இந்தியா 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளையும் தடுப்பூசிகளையும் வழங்கியது. மக்களின் நலம், அவர்களின் நல்வாழ்வு மற்றும் அவர்களின் நன்மை — இதுவே எங்களது பாரம்பரியம்.
நண்பர்களே,
உங்களில் பலருக்கு இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று தெரியும். உண்மையாகவே, நமது ஜனநாயகத்தின் அளவு மிகவும் பிரம்மாண்டமானது. 2024-ல் இந்தியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களைக் கருத்தில் கொள்ளுங்கள். அவை மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய ஜனநாயகப் பயிற்சியாகும். சுமார் 980 மில்லியன் (98 கோடி) குடிமக்கள் வாக்களிக்கப் பதிவு செய்திருந்தனர். இந்த எண்ணிக்கை சில கண்டங்களின் மக்கள் தொகையை விட அதிகம். 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களும், 700-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் பங்கேற்றன. இந்தத் தேர்தல்களில் பெண் வாக்காளர்களின் சாதனையும் பதிவானது.
இன்று இந்தியப் பெண்கள் பங்கேற்பது மட்டுமல்லாமல், தலைமை தாங்கி வழிநடத்துகிறார்கள். இந்தியாவின் முதல் குடிமகனான இந்தியக் குடியரசுத் தலைவர் ஒரு பெண்மணி. நாம் இப்போது இருக்கும் டெல்லி மாநகரின் முதலமைச்சர் ஒரு பெண்மணி. கிராமப்புற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இந்தியாவில் சுமார் 1.5 மில்லியன் (15 லட்சம்) தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் உள்ளனர். அடிமட்ட அளவிலான தலைவர்களில் அவர்கள் சுமார் 50 அடித்தட்டு சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், இது உலக அளவில் வேறு எங்கும் இல்லாத ஒன்றாகும்.
இந்திய ஜனநாயகம் பன்முகத்தன்மையிலும் செழுமையானது. நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. வெவ்வேறு மொழிகளில் 900-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் உள்ளன. ஆயிரக்கணக்கான செய்தித்தாள்களும் இதழ்களும் வெளியிடப்படுகின்றன. மிகச் சில சமூகங்களே இந்த அளவிலான பன்முகத்தன்மையை நிர்வகிக்கின்றன. இந்தியா இத்தகைய பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறது, ஏனெனில் நமது ஜனநாயகம் வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ளது. நமது ஜனநாயகம் ஆழமான வேர்களால் தாங்கப்பட்ட ஒரு பெரிய மரம் போன்றது. விவாதம், உரையாடல் மற்றும் கூட்டு முடிவெடுத்தல் ஆகியவற்றில் நமக்கு நீண்ட கால பாரம்பரியம் உள்ளது. இந்தியா 'ஜனநாயகத்தின் தாய்' என்று அழைக்கப்படுகிறது.
நமது புனித நூல்களான வேதங்கள் 5,000 ஆண்டுகளுக்கு மேலானவை. மக்கள் கூடிப் பிரச்சினைகளை விவாதித்த சபைகளைப் பற்றி அவை குறிப்பிடுகின்றன. விவாதம் மற்றும் ஒருமித்த கருத்திற்குப் பிறகே முடிவுகள் எடுக்கப்பட்டன. நாம் பகவான் புத்தர் பிறந்த தேசம். புத்த சங்கத்தில் வெளிப்படையான மற்றும் கட்டமைக்கப்பட்ட விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். ஒருமித்த கருத்து அல்லது வாக்கெடுப்பு மூலம் முடிவுகள் எடுக்கப்பட்டன.
மேலும், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு (உத்திரமேரூர் கல்வெட்டு) உள்ளது. ஜனநாயக விழுமியங்களுடன் செயல்பட்ட ஒரு கிராம சபையை அது விவரிக்கிறது. பொறுப்புக்கூறல் மற்றும் முடிவெடுப்பதற்கான தெளிவான விதிகள் அங்கு இருந்தன. நமது ஜனநாயக விழுமியங்கள் காலத்தால் சோதிக்கப்பட்டு, பன்முகத்தன்மையால் ஆதரிக்கப்பட்டு, தலைமுறை தலைமுறையாக வலுப்படுத்தப்பட்டுள்ளன.
நண்பர்களே,
காமன்வெல்த் நாடுகளின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 50 சதவீதம் பேர் இந்தியாவில் வசிக்கின்றனர். அனைத்து நாடுகளின் வளர்ச்சிக்கும் இந்தியா முடிந்தவரை பங்களிக்க வேண்டும் என்பதே எங்களது முயற்சியாக இருந்து வருகிறது. காமன்வெல்த் நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளில்— சுகாதாரம், காலநிலை மாற்றம், பொருளாதார வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றில் — நாங்கள் முழுப் பொறுப்புடன் எங்களது கடமைகளை நிறைவேற்றி வருகிறோம். இந்தியா உங்கள் அனைவரிடமிருந்தும் தொடர்ந்து கற்றுக்கொள்ள முயல்கிறது, அதேபோல் இந்தியாவின் அனுபவங்கள் மற்ற காமன்வெல்த் கூட்டாளிகளுக்குப் பயனளிப்பதும் எங்களது முயற்சியாகும்.
நண்பர்களே,
இன்று, உலகம் முன்னெப்போதும் இல்லாத மாற்றங்களின் காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கும் வேளையில், உலகளாவிய வளர்ந்துவரும் நாடுகளுக்கு புதிய பாதைகளை உருவாக்க வேண்டிய நேரமும் இதுவாகும். ஒவ்வொரு உலகளாவிய தளத்திலும் உலகளாவிய வளர்ந்துவரும் நாடுகளின் கவலைகளை இந்தியா வலுவாக முன்வைத்து வருகிறது. ஜி20 அமைப்புக்கு தலைமை தாங்கியபோது, உலகளாவிய வளர்ந்துவரும் நாடுகளின் பிரச்சினைகளை உலகளாவிய நிகழ்ச்சி நிரலின் மையப்புள்ளியாக இந்தியா மாற்றியது. நாம் மேற்கொள்ளும் எந்தவொரு புதிய கண்டுபிடிப்புகளும் ஒட்டுமொத்த உலகில் வளர்ந்துவரும் மற்றும் காமன்வெல்த் நாடுகளுக்குப் பயனளிக்க வேண்டும் என்பதே இந்தியாவின் தொடர்ச்சியான முயற்சியாகும். வளர்ந்துவரும் நாடுகளில் உள்ள எங்களது நட்பு நாடுகள், இந்தியாவில் உள்ளதைப் போன்ற அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளும் வகையில், நாங்கள் திறந்த மூல தொழில்நுட்பத் தளங்களை உருவாக்கி வருகிறோம்.
நண்பர்களே,
நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்த அறிவையும் புரிதலையும் வெவ்வேறு வழிகளில் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை ஆராய்வதே இந்த மாநாட்டின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும். இதில், சபாநாயகர்கள் மற்றும் தலைமை அலுவலர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. இந்தப் பணி, மக்களை நாட்டின் ஜனநாயக நடைமுறையோடு மிகவும் நெருக்கமாக இணைக்கிறது. இந்திய நாடாளுமன்றம் ஏற்கனவே இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. கல்விச் சுற்றுலாக்கள், தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சித் திட்டங்கள் மற்றும் பயிற்சிகள் மூலம், குடிமக்கள் நாடாளுமன்றத்தை மிக நெருக்கமாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். எங்களது நாடாளுமன்றத்தில், விவாதங்கள் மற்றும் அவை நடவடிக்கைகளை நிகழ்நேரத்தில் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தத் தொடங்கியுள்ளோம். நாடாளுமன்றம் சார்ந்த ஆதாரங்களும் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் மிகவும் எளிதாகப் பயன்படுத்தக்கூடியதாக மாற்றப்பட்டு வருகின்றன. இது எங்களது இளைய தலைமுறைக்கு நாடாளுமன்றத்தைப் புரிந்துகொள்ள சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது.
நண்பர்களே,
இதுவரை, உங்கள் நிறுவனத்துடன் தொடர்புடைய 20-க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. பல நாடாளுமன்றங்களில் உரையாற்றும் பாக்கியத்தையும் நான் பெற்றுள்ளேன். நான் சென்ற இடமெல்லாம், நிறையக் கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு சிறந்த நடைமுறையையும் உடனடியாக எங்களது மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவைத் தலைவர் மற்றும் மாநிலங்களவைத் துணைத்லைவர் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டேன். இந்த மாநாடு கற்றல் மற்றும் பகிர்ந்து கொள்ளும் இந்தச் செயல்பாட்டை மேலும் செழுமைப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கையுடன், உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி!
----
AD/VK/PD
(रिलीज़ आईडी: 2257802)
आगंतुक पटल : 39
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam