பாதுகாப்பு அமைச்சகம்
மேற்கு ஆசிய சூழலுக்கிடையே இந்தியாவின் தயார்நிலை குறித்து மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
18 APR 2026 8:10PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையிலான அமைச்சர்கள் குழு , 2026 ஏப்ரல் 18 அன்று, புதுதில்லியில் நடைபெற்ற நான்காவது ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்ததுடன், இந்தியாவின் தயார்நிலை மற்றும் எதிர்கால செயல் திட்டம் குறித்தும் விவாதித்தது. இந்தக் கூட்டத்தில், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், மின்சாரத்துறை அமைச்சர் திரு மனோகர் லால், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மோதலின் கள நிலவரம் நிச்சயமற்றதாகவும் நிலையற்றதாகவும் இருப்பதாகக் குறிப்பிட்ட பாதுகாப்பு அமைச்சர், பதற்றத்தைத் தணிப்பதற்கு மட்டுமின்றி, மீண்டும் பதற்றம் அதிகரித்தால் அதை எதிர்கொள்வதற்கும் இந்தியா தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மோதலால் ஏற்படக்கூடிய அபாயங்கள் அல்லது சிக்கல்களைத் தணிப்பதற்காக விரைவான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பிடத்தக்க உலகளாவிய விநியோகப் பற்றாக்குறை இருந்தபோதிலும், தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதற்கான தீவிர முயற்சிகளுடன், இந்தியா போதுமான எரிபொருள் கையிருப்பைத் தக்கவைத்துள்ளது என்று கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டது. தற்போது, இந்தியாவில், 60 நாட்களுக்கும் மேலான நுகர்வுக்குப் போதுமான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் கையிருப்பு உள்ளது. அதே சமயம், உள்நாட்டு உற்பத்தியின் ஆதரவுடன், சுமார் 50 நாட்களுக்குப் போதுமான எல்என்ஜியும், சுமார் 40 நாட்களுக்குப் போதுமான எல்பிஜியும் பராமரிக்கப்படுகின்றன. ஹார்முஸ் நீரிணையை அதிக அளவில் சார்ந்திருப்பதால் எழும் அபாயங்களைக் குறைப்பதற்காக, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட பிராந்தியங்களிலிருந்து கச்சா எண்ணெய், எல்என்ஜி மற்றும் எல்பிஜி விநியோகத்தைப் பெற்று, அரசு இறக்குமதி ஆதாரங்களைத் தீவிரமாகப் பன்முகப்படுத்தியுள்ளது.
எல்பிஜி பயன்பாட்டைக் குறைப்பதற்காக, சாத்தியமான இடங்களில் எல்லாம் குழாய்வழி இயற்கை எரிவாயு (பிஎன்ஜி) தீவிரமாக ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. மார்ச் 2026 முதல், 4.76 லட்சத்திற்கும் அதிகமான பிஎன்ஜி இணைப்புகள் வழக்கப்பட்டுள்ளன. மேலும், 5.33 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் புதிய இணைப்புகளுக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 17.04.2026 வரை, சுமார் 37,500 பிஎன்ஜி நுகர்வோர் MYPNGD.in இணையதளம் வழியாகத் தங்களது எல்பிஜி இணைப்புகளை ஒப்படைத்துள்ளனர்.
புலம்பெயர்ந்த இந்தியர்களின் நல்வாழ்வையும் நலனையும் அரசின் முதன்மையான முன்னுரிமையாக விவரித்த திரு ராஜ்நாத் சிங், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக அவர்களுடனும், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள சம்பந்தப்பட்ட நாடுகளுடனும் தொடர்ச்சியான தொடர்பைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். நாட்டிற்குள், சூழ்நிலையின் தாக்கத்தைக் குறைப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் முழுவதும் ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சீராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2253373®=3&lang=2
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2253424)
வருகையாளர் எண்ணிக்கை : 14