பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜி20 நாடுகளின் உச்சிமாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பிரதமருடன் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 23 NOV 2025 9:46PM by PIB Chennai

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி20 தலைவர்களின் உச்சிமாநாட்டின் இடையே,  பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் திரு சானே தக்காய்ச்சியை இன்று சந்தித்துப் பேசினார்.

கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி தொலைபேசியில் உரையாடிய பிறகு, பிரதமர் தக்காய்ச்சியை பிரதமர் திரு மோடி நேரில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இந்தச் சந்திப்பின்போது, நாகரிக ரீதியான தொடர்பு, பொதுவான மதிப்புகள், பரஸ்பர நல்லிணக்கம் மற்றும் சுதந்திரமான, வெளிப்படையான இந்தோ-பசிபிக் மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்தியா-ஜப்பான் சிறப்பு உத்திசார் மற்றும் உலகளாவிய கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். மேலும், பிராந்திய மற்றும் உலக அமைதி, வளம் மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்துவதற்கான  தங்கள் உறுதியையும் தலைவர்கள் வலியுறுத்தினர்.

15-வது இந்தியா - ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டின்போது இருதரப்பு உறவுகளில் ஏற்பட்ட நிலையான முன்னேற்றத்தை இரு தலைவர்களும் பாராட்டினர். மேலும், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு, முக்கிய கனிமங்கள், செமி கண்டக்டர்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள், அத்துடன் மக்கள் தொடர்பு போன்ற பல்வேறு துறைகளில் ஒப்புக் கொள்ளப்பட்ட முடிவுகளை விரைந்து செயல்படுத்துவதற்கு அழைப்பு விடுத்தனர்.

உத்திசார் துறைகளில் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான கூட்டு வாய்ப்புகள் குறித்து இருவரும் விவாதித்ததுடன், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்தியாவில் 2026-ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டிற்கு பிரதமர் தக்காய்ச்சி தனது வலுவான ஆதரவைத் தெரிவித்தார்.

இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் தொடர்ந்து மதிப்புமிக்க ஒத்துழைப்பு நாடுகளாகவும், நம்பகமான நண்பர்களாகவும் திகழ்கின்றன என்பதை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். பிராந்திய மற்றும் உலக அமைதி, வளம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகள் இன்றியமையாதவை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

***

(Release ID: 2193307)

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2241385) வருகையாளர் எண்ணிக்கை : 6