பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய பயிற்சி கப்பல் ஐஎன்எஸ் சுதர்ஷினி மால்டாவின் வலேட்டா துறைமுகத்தை அடைந்தது
இடுகை இடப்பட்ட நாள்:
14 MAR 2026 10:35AM by PIB Chennai
இந்திய கடற்படையின் பயிற்சி கப்பலான ஐஎன்எஸ் சுதர்ஷினி மார்ச் 12, 2026 அன்று மால்டாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுகமான வலேட்டவைச் சென்றடைந்தது. இது லோக்யான் -26 என்ற அதன் பெரிய கடல் பயணத்தின் ஒரு முக்கிய கட்டமாகும். இந்த வருகை இந்தியா, மால்டா ஆகிய நாடுகளுக்கிடையிலான பழமையான கடல்சார் உறவுகளை மேலும் வலுப்படுத்துகிறது. மொத்தம் 22,000 கடல் மைல்கள் கொண்ட உலகப் பயணத்தை மேற்கொண்டு வரும் இந்தக் கப்பல், வாலெட்டாவை அடைவதற்கு முன் சூயஸ் கால்வாய் வழியாக வெற்றிகரமாக கடந்து, சமீபத்தில் அலெக்சாண்ட்ரியா துறைமுகத்திலும் தங்கியிருந்தது.
கப்பல் வந்தடைந்த பிறகு, அதன் கட்டளை அதிகாரி மால்டாவில் உள்ள இந்திய தூதர் ரச்சிதா பண்டாரியை மரியாதை நிமித்தம் சந்தித்தார். அந்தச் சந்திப்பில், இந்திய கடற்படை இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்துவதில் செய்யும் பங்கு குறித்து பேசப்பட்டது. மேலும், மால்டாவில் ஐஎன்எஸ் சுதர்ஷினியின் வருகை மகாசாகர் கடல்சார் தொலைநோக்கு என்ற இந்தியாவின் கடல்சார் பார்வையை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய அடையாளமாக இருப்பதாகவும், இது கடல்சார் ஒத்துழைப்பையும் மக்களுக்கிடையிலான நட்பையும் வளர்க்கும் என்று தூதர் தெரிவித்தார்.
இந்த விஜயத்தின் போது கப்பலில் உள்ள கடற்படை வீரர்கள் மால்டா ஆயுதப்படையினருடன் தொழில்முறை கலந்துரையாடல்களிலும் மரியாதைச் சந்திப்புகளிலும் கலந்து கொள்வார்கள். இதன் மூலம் இரு தரப்பினருக்கிடையே நம்பிக்கையும் ஒத்துழைப்பும் மேலும் அதிகரிக்கும். அதே நேரத்தில், மால்டாவில் வாழும் இந்திய வம்சாவளியினரும் பள்ளி மாணவர்களும் கப்பலை நேரில் பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஐஎன்எஸ் சுதர்ஷினியின் இந்த உலகப் பயணம் ஜனவரி 20, 2026 அன்று கொச்சியில் தொடங்கியது. தற்போது அது தனது பயணத்தின் இரண்டாவது மாதத்தில் உள்ளது. மால்டா விஜயத்திற்குப் பிறகு, கப்பல் பிரான்ஸ் கடற்கரையை நோக்கி சென்று, அங்கு நடைபெறும் புகழ்பெற்ற கடல்சார் திருவிழாவில் உலகின் பல உயரமான கப்பல்களுடன் சேர்ந்து இந்தியாவை பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்தும்.
***
(Release ID: 2240072)
TV/PKV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2240136)
வருகையாளர் எண்ணிக்கை : 9