பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 25 FEB 2026 10:06PM by PIB Chennai

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவர்களே,

 

அவைத் தலைவர் திரு அமீர் ஓஹானா அவர்களே,

 

எதிர்க்கட்சித் தலைவர் திரு யாயர் லாபிட் அவர்களே,

 

நெசெட்டின் உறுப்பினர்களே,

 

என் அன்பு சகோதரிகளே, சகோதரர்களே,

 

வணக்கம்!

 

மரியாதைக்குரிய உறுப்பினர்களே,

 

இந்த மதிப்புமிக்க அவையின் முன் நிற்பது எனக்குக் கிடைத்த ஒரு மரியாதை. இந்தியாவின் பிரதமராகவும், ஒரு பழங்கால நாகரிகத்தின் பிரதிநிதியாகவும் மற்றொரு பழங்கால நாகரிக நாட்டில் உரையாற்றுகிறேன். 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்களையும், நட்பு, மரியாதை, ஒத்துழைப்புப் பற்றிய செய்தியையும் நான் என்னுடன் கொண்டு வந்துள்ளேன்.

 

அவைத் தலைவர் அவர்களே, உங்கள் அன்பான அழைப்பிற்கு நன்றி. மேலும் நெசெட்டை இந்திய தேசியக் கொடி வண்ணங்களில் ஒளிரச் செய்த உங்கள் அற்புதமான செயலுக்கு நன்றி. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் இந்தியாவிற்கு வந்தீர்கள். உங்களுக்கு நன்றி. இந்த கௌரவமான கூட்டத்தில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமர் நான்.

 

இஸ்ரேலுக்கு விஜயம் செய்த முதல் இந்தியப் பிரதமர் என்ற அதிர்ஷ்டம் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு எனக்குக் கிடைத்தது. நான் மீண்டும் இங்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா, இஸ்ரேலை முறையாக அங்கீகரித்த அதே நாளில் - செப்டம்பர் 17, 1950 அன்று நான் பிறந்தேன்!

 

மாண்புமிகு உறுப்பினர்களே,

அக்டோபர் 7 அன்று ஹமாஸின் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் இழந்த ஒவ்வொரு உயிருக்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் இந்திய மக்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். உங்கள் வலியை நாங்கள் உணர்கிறோம். உங்கள் துயரத்தை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். இந்த தருணத்திலும் அதற்கு அப்பாலும், இந்தியா இஸ்ரேலுடன் உறுதியாக, முழு நம்பிக்கையுடன் நிற்கிறது.

 

பொதுமக்கள் கொல்லப்படுவதை எந்தக் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது.

 

பயங்கரவாதத்தின் வலியை இந்தியா நீண்ட காலமாக சந்தித்து வருகிறது. 26/11 மும்பை தாக்குதல்களையும், இஸ்ரேலிய மக்கள் உட்பட இழந்த அப்பாவி உயிர்களையும் நாங்கள் நினைவில் கொள்கிறோம். உங்களைப் போலவே, பயங்கரவாதத்திற்கு சகிப்புத்தன்மை இல்லாத நிலையான, சமரசமற்ற கொள்கையை நாங்கள் கொண்டுள்ளோம். இதில் இரட்டை நிலைப்பாடு இல்லை.

 

பயங்கரவாதம் சமூகங்களை சீர்குலைப்பதையும், வளர்ச்சியைத் தடுப்பதையும், நம்பிக்கையை சிதைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு நிலையான, ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கை தேவை. ஏனெனில் பயங்கரவாதம் அமைதியை அச்சுறுத்துகிறது. அதனால்தான், நீடித்த அமைதி, பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கும் அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கிறது.

 

சில ஆண்டுகளுக்கு முன்பு, நீங்கள் ஆபிரகாம் ஒப்பந்தங்களை முடித்தபோது, உங்கள் தைரியத்தையும் தொலைநோக்குப் பார்வையையும் நாங்கள் பாராட்டினோம். நீண்டகாலமாகப் பிரச்சனையில் இருந்த பிராந்தியத்திற்கு இது புதிய நம்பிக்கையின் தருணம். அப்போதிருந்து, நிலைமை கணிசமாக மாறிவிட்டது. பாதை இன்னும் சவாலானது. இருப்பினும் அந்த நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்வது முக்கியம்.

 

ஐநா பாதுகாப்பு கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட காசா அமைதி முயற்சி ஒரு நல்ல வழியை வழங்குகிறது. இந்த முயற்சிக்கு இந்தியா தனது உறுதியான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்ப்பது உட்பட, பிராந்தியத்தின் அனைத்து மக்களுக்கும் ஒரு நியாயமான, நீடித்த அமைதியை உறுதி செய்யும் வாக்குறுதியை அது கொண்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.

 

நமது அனைத்து முயற்சிகளும் ஞானம், தைரியம், மனிதநேயத்தால் வழிநடத்தப்படட்டும். அமைதிக்கான பாதை எப்போதும் எளிதானது அல்ல. ஆனால் இந்த பிராந்தியத்தில் பேச்சுவார்த்தை, அமைதி, ஸ்திரத்தன்மைக்காக இந்தியா உங்களுடனும் உலகத்துடனும் இணைந்து நிற்கிறது.

 

மாண்புமிகு உறுப்பினர்களே,

 

இந்தியாவில், இஸ்ரேலின் உறுதிப்பாடு, தைரியம், சாதனைகளுக்கு மிகுந்த பாராட்டு உள்ளது. நவீன நாடுகளாக நாம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான உறவுகளால் நாம் இணைக்கப்பட்டிருந்தோம்.  பண்டைய காலங்களில் இந்தியாவுடன் இஸ்ரேல் வர்த்தகம் செய்ததாக பதிவு உள்ளது.

 

யூத வணிகர்கள் மத்தியதரைக் கடலை இந்தியப் பெருங்கடலுடன் இணைக்கும் கடல் பாதைகளில் பயணம் செய்தனர். அவர்கள் வாய்ப்பையும் கண்ணியத்தையும் தேடி வந்தனர். மேலும், இந்தியாவில், அவர்கள் நம்மில் ஒருவராக மாறினர்.

 

யூத சமூகங்கள் துன்புறுத்தல் அல்லது பாகுபாடு குறித்த அச்சமின்றி இந்தியாவில் வாழ்ந்து வருகின்றன. அவர்கள் தங்கள் நம்பிக்கையைப் பாதுகாத்து சமூகத்தில் முழுமையாகப் பங்கேற்றுள்ளனர். அது எங்களுக்குப் பெருமை சேர்க்கிறது.

 

மாண்புமிகு உறுப்பினர்களே,

 

மகாராஷ்டிராவின் பெனே இஸ்ரேலியர்கள், கேரளத்தின் கொச்சி யூதர்கள், கொல்கத்தா, மும்பையின் பாக்தாதி யூதர்கள், வடகிழக்கின் பினி மெனாஷே ஆகியோர் இந்தியாவை வளப்படுத்தியுள்ளனர். எனது சொந்த மாநிலமான குஜராத்தில், மிஸ்டர் & மிஸ்ஸஸ் பெஸ்ட் என்ற இஸ்ரேலிய குடும்பத்தினரால் அமைக்கப்பட்ட ஒரு பள்ளி உள்ளது. இது ஒரு சிறந்த பள்ளி. நிச்சயமாக, இது சிறந்த பள்ளி என்று அழைக்கப்படுகிறது!

 

எட்வின் மியர்ஸ் இந்திய திரைப்படப் பிரிவுக்கு வடிவம் கொடுத்தார். இந்திய சினிமா வரலாற்றில் ஒரு உயர்ந்த நபராக இருந்தார். டாக்டர் ரூபன் டேவிட் அகமதாபாத்தில் உள்ள கங்காரியா மிருகக்காட்சி சாலையின் நிறுவனர் ஆவார். நடிகர் டேவிட் ஆபிரகாம் சூல்கர் அல்லது மாமா டேவிட், நாடு முழுவதும் அறியப்பட்டவராக மாறினார். ஆல் இந்தியா ரேடியோவிற்காக, வால்டர் காஃப்மேன் பாடலை இயற்றினார். டேவிட் சசூன் இந்திய சமூகத்திற்கு சேவை செய்யும் பல நிறுவனங்களை உருவாக்கினார்.

 

 1971-ல் பாகிஸ்தானுடனான போரின் போது லெப்டினன்ட் ஜெனரல் ஜே.எஃப்.ஆர் ஜேக்கப்பின் வீர பங்களிப்பு பரவலாக அறியப்படுகிறது. அவர் ஓய்வு பெற்ற பிறகு அவருடன் நெருக்கமாகப் பணியாற்றும் பெருமை எனக்குக் கிடைத்தது. இந்தியா-இஸ்ரேல் உறவுகளைப் பற்றி நாங்கள் விவாதித்திள்ளோம். இந்தியாவின் வளமான வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த எண்ணற்ற மற்றவர்கள் உள்ளனர்.

 

மாண்புமிகு உறுப்பினர்களே,

 

இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பல இந்திய யூதர்கள் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தபோது, இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கும் இடம்பெயர்வு இருந்தது. இன்று, துடிப்பான இந்திய வம்சாவளி யூத சமூகம் இங்கு வாழ்கிறது. அவர்கள் நவீன இஸ்ரேலைக் கட்டியெழுப்புவதிலும் போர்க்களத்திலும் பங்களித்துள்ளனர். இஸ்ரேல் அவர்களின் தந்தைநாடு என்றும், இந்தியா அவர்களின் தாய்நாடு என்றும் அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். நாங்கள் அவர்களை நினைத்துப் பெருமைப்படுகிறோம்.

 

மாண்புமிகு உறுப்பினர்களே,

 

இந்த நிலத்துடனான இந்தியாவின் தொடர்பு ரத்தத்தாலும் தியாகத்தாலும் எழுதப்பட்டுள்ளது. முதல் உலகப் போரின் போது, நான்காயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் இந்தப் பகுதியில் தங்கள் உயிரை தியாகம் செய்தனர். செப்டம்பர் 1918-ல் ஹைஃபாவில் நடந்த குதிரைப்படை தாக்குதல் ராணுவ வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயமாக உள்ளது.

 

ஹைஃபாவின் நாயகனாக நினைவுகூரப்படும் மேஜர் தாக்கூர் தல்பத் சிங், இந்த வரலாற்றைக் குறிக்கிறார். எனது முந்தைய வருகையின் போது, இந்திய வீரர்களுக்கான ஹைஃபா நினைவுச்சின்னத்தில் எனது மரியாதையைச் செலுத்தியதில் நான் மிகவும் நெகிழ்ச்சியடைந்தேன்.

 

மாண்புமிகு உறுப்பினர்களே,

 

கடந்த மாதம், உலகம் சர்வதேச ஹாலோகாஸ்ட் நினைவு தினத்தை அனுசரித்தது. ஹாலோகாஸ்ட் மனிதகுலத்தின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக நிற்கிறது. இருப்பினும், அந்தக் கொந்தளிப்பான காலங்களில் கூட, சில மனிதாபிமான செயல்கள் தனித்து நின்றன. குஜராத்தில் உள்ள நவாநகரின் மகாராஜா, ஜாம் சாஹேப் என்று அழைக்கப்பட்டார். வேறு எங்கும் செல்ல முடியாத யூத குழந்தைகள் உட்பட போலந்து குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்தார். சமீபத்தில் மோஷவ் நெவதிமில் ஜாம் சாஹேப்பின் சிலை திறக்கப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

 

நன்றி. இந்த மரியாதைக்கும் நினைவுச்சின்னத்திற்கும் நன்றி.

 

மாண்புமிகு உறுப்பினர்களே,

 

இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, பல இந்தியத் தலைவர்கள் இஸ்ரேல் மக்களுடன் உறவை உணர்ந்தனர். 1950-களில் இந்தியாவின் நாடாளுமன்ற விவாதங்கள், பாலைவனத்தில் விவசாயத்தை வளர்ப்பதற்கான இஸ்ரேலின் முயற்சிகளுக்கு அவர்கள் காட்டிய அக்கறைக்கு சாட்சியமளிக்கின்றன. இஸ்ரேலின் கிப்புட்ஸ் இயக்கம் ஆச்சார்யா வினோபா பாவே, லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் போன்ற தலைவர்களுக்கு உத்வேகம் அளித்தது. முதலில் எனது சொந்த மாநிலமான குஜராத்திலும், இப்போது இந்தியா முழுவதும், "ஒரு துளிக்கு, அதிக பயிர்" என்ற அணுகுமுறை விவசாயத்தில் அற்புதங்களைச் செய்வதைக் காண்கிறேன்.

 

குஜராத் முதலமைச்சராக 2006-ல் இஸ்ரேலுக்கு நான் முதன்முதலில் பயணம் செய்தேன். பின்னர், 2017-ல், பிரதமராக இஸ்ரேலுக்கு நான் வந்தபோது, நமது இரு நாடுகளும் தங்கள் உறவை ஒரு உத்திசார் ஒத்துழைப்பாக உயர்த்தின. அப்போதிருந்து, நமது ஈடுபாடு அளவிலும் நோக்கத்திலும் விரிவடைந்துள்ளது. மேலும் பல துறைகளில் இந்த உறவை ஒருங்கிணைக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

 

மாண்புமிகு உறுப்பினர்களே,

 

கடந்த சில ஆண்டுகளாக, இந்தியா உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இருந்து வருகிறது. விரைவில், உலக அளவில் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக நாங்கள் இருப்போம். அதே நேரத்தில், இஸ்ரேல் புதுமைத் தொழில்நுட்பத்தின் சக்தியாக உள்ளது. இது எதிர்காலத்திற்கான ஒத்துழைப்புக்கு இயற்கையான அடித்தளத்தை உருவாக்குகிறது.

 

வர்த்தகத்தை விரிவுபடுத்துதல், முதலீடுகளை வலுப்படுத்துதல், கூட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டை ஊக்குவித்தல் ஆகியவற்றில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். கடந்த ஆண்டு கையெழுத்திடப்பட்ட இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் எங்கள் வணிகங்களுக்கு நம்பிக்கையை வழங்கும்.

 

கடந்த சில ஆண்டுகளில், இந்தியா மற்ற நாடுகளுடன் பல முக்கியமான வர்த்தக ஒப்பந்தங்களை செய்துள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் நமது இருதரப்பு பொருட்கள் வர்த்தகம் பன்மடங்கு வளர்ந்துள்ளது. ஆனால், அது முழு நோக்கத்தையும் பிரதிபலிக்கவில்லை. அதனால்தான் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இது நமது வர்த்தக உறவில் பரந்த திறனை வெளிப்படுத்தும்.

 

இந்தியா–மத்திய கிழக்கு–ஐரோப்பா பொருளாதார வழித்தடம் மற்றும் இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா இடையேயான ஐ2யு2 கட்டமைப்பு போன்ற பல்வேறு வடிவங்களிலும் நாம் நெருக்கமாக பணியாற்றுவோம். பாதுகாப்புத் துறை இருதரப்பு ஒத்துழைப்பில் மற்றொரு முக்கிய தூணாகும். கடந்த ஆண்டு நவம்பரில், பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். இன்றைய நிச்சயமற்ற உலகில், இந்தியா, இஸ்ரேல் போன்ற நம்பகமான நட்பு நாடுகளிடையே வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்பு மிக முக்கியமானது.

 

மாண்புமிகு உறுப்பினர்களே,

 

 சமீபத்திய ஆண்டுகளில், எங்கள் இளைஞர்களின் புதுமைப் படைப்பாற்றலைத் வெளிக் கொண்டுவர நாங்கள் பணியாற்றி வருகிறோம். 2018-ம் ஆண்டில், இஸ்ரேல் பிரதமர் திரு நெதன்யாகுவும் நானும் இந்தியாவில் ஐ கிரியேட் தொழில்நுட்ப வணிக தொழில் பாதுகாப்பு மையத்தைத் தொடங்கி வைத்தோம் என்பதை நான் நினைவு கூர்கிறேன். அப்போதிருந்து, இந்த மையம் கிட்டத்தட்ட 900 இதுபோன்ற புத்தொழில் நிறுவனங்களை ஆதரித்துள்ளது.

 

கடந்த வாரம், 100 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளுடன் உலகின் மிகப்பெரிய, மிகவும் ஜனநாயகப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவுத்  தாக்க உச்சி மாநாட்டை நாங்கள் நடத்தினோம். எங்கள் லட்சிய உணர்வு இஸ்ரேலின் கண்டுபிடிப்புச் சூழல் அமைப்புடன் இயல்பாகவே ஒத்துப்போகிறது. குவாண்டம் தொழில்நுட்பங்கள், செமி கண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் அதிக ஒருங்கிணைப்பை நான் காண்கிறேன். எங்கள் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி எல்லை தாண்டிய நிதி இணைப்புகளை உருவாக்குவதில் இஸ்ரேலுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

 

மாண்புமிகு உறுப்பினர்களே,

 

பாலைவனத்தில் இஸ்ரேலின் விவசாய அதிசயத்தை நாங்கள் எவ்வளவு ஊக்கமளிப்பதாகக் கண்டோம் என்பதைக் குறிப்பிட்டேன். துல்லியமான நீர்ப்பாசனத்திலும் நீர் மேலாண்மையிலும் இஸ்ரேலிய நிபுணத்துவம் ஏற்கெனவே இந்தியாவில் விவசாய நடைமுறைகளை மாற்றியுள்ளது.

 

இந்தியா முழுவதும் 43 சிறப்பு மையங்களை நாங்கள் நிறுவியுள்ளோம், அவை அரை மில்லியனுக்கும் அதிகமான விவசாயிகளுக்கு பயிற்சி அளித்துள்ளன. பல லட்சக்கணக்கான விவசாயிகள், மீனவர்களுக்கு பயனளிக்கும் வகையில் 100 மையங்களாக விரிவுபடுத்தும் லட்சிய இலக்கை இப்போது நாம் நிர்ணயிக்க வேண்டும்.

 

மாண்புமிகு உறுப்பினர்களே,

 

இந்தியா-இஸ்ரேல் ஒத்துழைப்பின் மையத்தில் நமது மக்களிடையேயான உறவுகள் உள்ளன. 2006-ல் நான் முதன்முதலில் இஸ்ரேலுக்கு வந்தபோது, இஸ்ரேலில் ஒரு சில யோகா மையங்கள் இருந்தன. இன்று, கிட்டத்தட்ட ஒவ்வொரு பகுதியிலும் இங்கு யோகா பயிற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது!

 

இஸ்ரேலிலும் ஆயுர்வேதத்தில் ஆர்வம் வளர்ந்து வருவதாக எனக்குச் சொல்லப்பட்டது. இந்தியாவிற்கு பயணம் செய்ய அதிகமான இளம் இஸ்ரேலியர்களை நான் அழைக்கிறேன். அவர்கள் நமது சமூகத்தின் சுறுசுறுப்பைக் காண்பார்கள். மேலும் முழுமையான நல்வாழ்வு உடலுக்கும் மனதுக்கும் என்ன செய்யும் என்பதை அனுபவிப்பார்கள்.

 

இந்திய நாடாளுமன்றம் இஸ்ரேலுக்கான ஒரு நாடாளுமன்ற நட்புக் குழுவை அமைத்துள்ளது என்பதை இந்த மகத்தான அவைக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அனைவரையும் இந்தியாவுக்கு வருகை தருமாறு அழைக்கிறேன். மேலும் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே மேலும் பரிமாற்றங்களை எதிர்நோக்குகிறேன்.

 

இஸ்ரேலில் உள்ள இந்திய பராமரிப்பாளர்களும் திறமையான தொழிலாளர்களும், குடும்பங்களுக்கும் சமூகங்களுக்கும் மகத்தான பங்களிப்பை வழங்குகிறார்கள் என்பதை நான் அறிவேன். அக்டோபர் 7 உட்பட நெருக்கடி காலங்களில் அவர்கள் குறிப்பிடத்தக்க தைரியத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்.

 

"ஒரு உயிரைக் காப்பாற்றுபவர் முழு உலகத்தையும் காப்பாற்றுகிறார்" என்று யூத போதனை நமக்கு நினைவூட்டுகிறது. அவர்களின் சேவை நமது ஒத்துழைப்பின் பின்னால் உள்ள மனித பிணைப்புகளின் வலிமையை பிரதிபலிக்கிறது. நமது இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் துறைகளில் தொழிலாளர்கள், நிபுணர்களின் போக்குவரத்தை நாங்கள் தொடர்ந்து எளிதாக்குவோம்.

 

மாண்புமிகு உறுப்பினர்களே,

 

நாம் இரு நாடுகளும் பண்டைய நாகரிகங்கள். மேலும் நமது நாகரிக மரபுகளும் தத்துவ ஒற்றுமைகளை வெளிப்படுத்துவதில் ஆச்சரியமில்லை.  இரண்டும் எல்லைகளுக்கு அப்பால் பொறுப்பை விரிவுபடுத்துகின்றன. அவை சமூகங்களை இரக்கத்துடனும் தார்மீக தைரியத்துடனும் செயல்படுமாறு கேட்டுக்கொள்கின்றன.

 

யூத மதம் ஹலகாவை வலியுறுத்துகிறது. சட்ட நடைமுறை மூலம் அன்றாடம் சிறந்த செயல்பாட்டை வழிநடத்துகிறது. இந்து தத்துவம் தர்மத்தைப் பற்றி பேசுகிறது. சரியான செயலை வடிவமைக்கும் தார்மீக ஒழுங்கு பற்றி பேசுகிறது. இரண்டு மரபுகளிலும், நெறிமுறையான வாழ்க்கை வெளிப்படுத்தப்படுகிறது.

 

எங்கள் பண்டிகைகளிலும் ஒரு அன்பான ஒற்றுமை உள்ளது. நீங்கள் ஹனுக்காவை மெழுகுவர்த்திகளின் சூடான ஒளியுடன் கொண்டாடுகிறீர்கள். அதே நேரத்தில், விளக்குகளின் மென்மையான பிரகாசத்துடன், விளக்குகளின் பண்டிகையான தீபாவளியை நாங்கள் கொண்டாடுகிறோம். விரைவில், இந்தியா மகிழ்ச்சியுடனும் வண்ணங்களுடனும் ஹோலி பண்டிகையைக் கொண்டாடவுள்ளது. அதே நேரத்தில், இஸ்ரேலும் பூரிம் பண்டிகையை உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும்.

 

மாண்புமிகு உறுப்பினர்களே,

 

நமது பகிரப்பட்ட லட்சியங்கள் நமது நவீன ஒத்துழைப்புக்கு வலிமையை அளிக்கும் ஆழமான அடித்தளங்களாகும். நாம் வரலாற்றால் வடிவமைக்கப்பட்ட ஜனநாயக நாடுகள். எதிர்காலத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிறோம். நமது ஒத்துழைப்பு பகிரப்பட்ட அனுபவத்திலும் பகிரப்பட்ட எதிர்பார்ப்புகளிலும் அடித்தளமாக உள்ளது. நமது வலுவான ஒத்துழைப்பு தேசிய நலன்களுக்கு சேவை செய்வது மட்டுமல்லாமல், உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கும் செழிப்புக்கும் பங்களிக்கிறது.

 

நிச்சயமற்ற உலகில் இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நட்பு பலத்தின் ஆதாரமாக இருப்பதை உறுதி செய்வோம்.

 

நன்றி.

***

(Release ID: 2232908)

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2235372) வருகையாளர் எண்ணிக்கை : 47