விவசாயத்துறை அமைச்சகம்
தோட்டக்கலை ஒத்துழைப்பு குறித்த முதல் கூட்டுப் பணிக்குழு கூட்டத்தை இந்தியா-நியூசிலாந்து இணைந்து நடத்தின
இடுகை இடப்பட்ட நாள்:
19 FEB 2026 4:52PM by PIB Chennai
இந்தியாவும் நியூசிலாந்தும் இன்று (19.02.2026) தோட்டக்கலை ஒத்துழைப்பு குறித்த கூட்டுப் பணிக்குழுவின் (JWG) முதல் கூட்டத்தை நடத்தின. 2025 மார்ச் 12 அன்று இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இக்கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தியா, நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளின் கூட்டுப் பணிக்குழு கூட்டத்திற்கு, இந்தியத் தரப்பிலிருந்து தோட்டக்கலைத் துறை இணைச் செயலாளர் திரு பிரிய ரஞ்சன் தலைமை வகித்தார். நியூசிலாந்து தரப்பில் அந்நாட்டு வர்த்தத் துறை உயர் அதிகாரி திரு ஸ்டீவ் ஐன்ஸ்வொர்த் தலைமை வகித்தார். காணொலிக்காட்சி மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கிவி பழம், பிப் பழம், ஆப்பிள் பழம், பேரிக்காய் போன்றவற்றின் வர்த்தக மேம்பாட்டில் வலுவான கவனம் செலுத்தப்பட்டது. தோட்டக்கலைத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இரு தரப்பிலிருந்தும் மூத்த அதிகாரிகள் இணைந்து பணியாற்ற முடிவு செய்தனர்.
கிவி பழம் இந்தியாவிற்கு முன்னுரிமை பயிராக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கிவி பழ செயல் திட்டத்தின் கீழ் முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளான சிறப்பு மையங்களை நிறுவுதல், மேம்படுத்தப்பட்ட பழத்தோட்ட மேலாண்மை, உற்பத்தித்திறன் மேம்பாடு, தரமான வேர் தண்டு, அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை, விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துதல் ஆகியவை குறித்து விவாதித்ததாகவும், தோட்டக்கலைத் துறை இணைச் செயலாளர் திரு பிரிய ரஞ்சன் குறிப்பிட்டார். நியூசிலாந்திலிருந்து கிவி வேர் தண்டுகளை இறக்குமதி செய்வதற்கான நடைமுறைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்தியாவில் கிவி, ஆப்பிள், பேரிக்காய் ஆகியவற்றின் உற்பத்தியில் தற்போதைய நிலை குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. விவசாயிகளின் வருமானத்தையும், உற்பத்தித்திறனையும் அதிகரிக்க, கூட்டு ஆராய்ச்சி, திறன் மேம்பாடு, விவசாயப் பயிற்சி, விநியோகச் சங்கிலி, தரநிலைகள், சந்தை நிலைப்படுத்தல் ஆகியவற்றை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த சந்திப்பு, செயல் திட்டங்களுக்கான காலக்கெடுவை இறுதி செய்தல், செயல்படுத்துதல் ஆகியவை தொடர்பான திட்ட வரைவுடன் நிறைவடைந்தது. இரு நாடுகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் தங்கள் இறுதி உரையில், தோட்டக்கலை உறவுகளை வலுப்படுத்துவதற்கான தங்கள் நிலையை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
***
(Release ID: 2230260)
AD/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2230295)
வருகையாளர் எண்ணிக்கை : 18