பாதுகாப்பு அமைச்சகம்
விசாகப்பட்டினத்தில் மிலன் 2026 பயிற்சியின் ஒரு பகுதியாக ‘மிலன் கிராமம்’ திறப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
16 FEB 2026 11:48AM by PIB Chennai
இந்திய கடற்படை நடத்தும் சர்வதேச கடற்படைப் பயிற்சி ‘மிலன் 2026’-ன் ஒரு பகுதியாக, ‘மிலன் கிராமம்’ நேற்று விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படை தளத்தில் திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு கடற்படை தளத்தின் தளபதி வைஸ் அட்மிரல் சஞ்சய் பல்லா விழாவிற்கு தலைமை தாங்கி, பங்கேற்கும் நாடுகளின் கடற்படைகளுக்காக கிராமத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த வசதிகளைப் பார்வையிட்டார்.
70-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வரும் பிரதிநிதிகள் மற்றும் கடற்படை வீரர்கள் நட்பு சூழலில் ஒன்றுகூடி கலந்துரையாடும் வகையில் ‘மிலன் கிராமம்’ அமைக்கப்பட்டுள்ளது. தொழில்முறை தொடர்புகளைத் தாண்டி சமூக மற்றும் கலாசாரப் பரிமாற்றங்களுக்கு இது வாய்ப்பளிக்கிறது.
இந்தக் கிராமத்தில் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை அறிமுகப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நேரடி இசை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற நடனங்கள் மற்றும் கலாசார கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், கடற்படை நினைவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி தயாரிப்புகள் விற்பனை செய்யப்படும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு பிராந்திய சுவைகளை அறிமுகப்படுத்தும் உணவுகளும் பார்வையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தமது உரையில் வைஸ் அட்மிரல் சஞ்சய் பல்லா, “மிலன் கிராமம் நட்பு மற்றும் கலாசார இணைப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாகும். விசாகப்பட்டினத்தில் தொடர்ந்து மிலன் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெறுவது இந்தியாவின் கடல் தொடர்பு விரிவாக்கத்தில் முக்கிய கட்டமாகும்,” என்று தெரிவித்தார்.
பிப்.15 முதல் 25 வரை விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ‘மிலன் 2026’ பயிற்சியில், உலகின் பல நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கின்றன. பல கட்டங்களாக நடைபெறும் இந்தப் பயிற்சியில் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு நடவடிக்கைகள், வான்வழி பாதுகாப்பு, தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் இடம்பெறவுள்ளன.
‘நட்பு, ஒத்துழைப்பு, கூட்டாண்மை’ என்ற கருப்பொருளுடன் நடைபெறும் இந்த நிகழ்வு, பங்கேற்கும் நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
***
(Release ID: 2228574)
TV/PKV/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2228739)
வருகையாளர் எண்ணிக்கை : 14