சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
சிறுபான்மையினர் சமூக மேம்பாட்டிற்கான 'பிரதமரின் பாரம்பரிய மேம்பாட்டுத் திட்டம்"' : 1.51 லட்சம் பேருக்குப் பயிற்சி அளிக்க இலக்கு
இடுகை இடப்பட்ட நாள்:
03 FEB 2026 7:56PM by PIB Chennai
மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம், அங்கீகரிக்கப்பட்ட ஆறு சிறுபான்மையின சமூகங்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக '"பிரதமரின் பாரம்பரிய மேம்பாட்டுத் திட்டம்"' (PM VIKAS) என்ற மத்திய அரசுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார்.
திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:
இத்திட்டம் முக்கியமாக நான்கு துறைகளில் கவனம் செலுத்துகிறது:
பாரம்பரிய மற்றும் நவீன காலத்திற்கு ஏற்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்.
பெண்களுக்கான தலைமைப் பண்பு மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி.
தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் (NIOS) வழியாகக் கல்வி வழங்குதல்.
அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்.
நிதி ஒதுக்கீடு மற்றும் செயல்பாடுகள்:
இத்திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் 2025 ஜனவரியில் அங்கீகரிக்கப்பட்டு, அதன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 2025-26 நிதியாண்டில் இதற்காக 267.29 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஒரு மத்திய அரசுத் திட்டம் என்பதால், நிதி நேரடியாக மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படாமல், தகுதியுள்ள முகமைகள் மூலம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.
இதுவரை இந்தியா முழுவதும் சுமார் 1.51 லட்சம் பயனாளிகளுக்குப் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பல்வேறு மாநிலங்களில் உள்ள திட்டச் செயலாக்க முகமைகளுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாநில வாரியான ஒதுக்கீட்டில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திற்கு 18,080 இடங்களும், பஞ்சாப்பிற்கு 16,800 இடங்களும், ஜம்மு காஷ்மீருக்கு 14,960 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை 2,000 பயனாளிகளுக்குப் பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தற்போதுதான் செயல்பாட்டுக்கு வந்துள்ளதால், வரும் காலங்களில் இத்திட்டத்தில் உள்ள சவால்கள் கண்டறியப்பட்டுத் தீர்க்கப்படும் என்றும் அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222788®=3&lang=1
வெளியிட்டு எண்:2222788
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2222898)
வருகையாளர் எண்ணிக்கை : 19