சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
பட்ஜெட் 2026-27: இந்திய சுகாதாரத் துறையில் மாபெரும் மாற்றத்திற்கான முன்னெடுப்புகள்
இடுகை இடப்பட்ட நாள்:
01 FEB 2026 3:46PM by PIB Chennai
மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு ரூ. 1,06,530.42 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகும். 2014-15 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 194 சதவீதம் உயர்ந்துள்ளது, இது தரமான மருத்துவச் சேவையை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் அரசின் உறுதியைக் காட்டுகிறது.
பொதுமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத்திட்டத்திற்கு ரூ.9,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மருத்துவமனை வலையமைப்பை விரிவுபடுத்தவும், சேவையின் தரத்தை உயர்த்தவும் உதவும். அதேபோல், ஆரம்ப சுகாதார நிலையங்களை வலுப்படுத்த தேசிய சுகாதார இயக்கத்திற்கு ரூ39,390 கோடி வழங்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை மற்றும் மாவட்ட மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பிரதமரின் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்திற்கு 67 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் இந்தியா உலகத் தரம் வாய்ந்த நாடாக உருவெடுக்கப் பல புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. எய்ம்ஸ் போன்ற உயர்தர மருத்துவ நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு ரூ. 11,307 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சை, ரோபோடிக் அறுவை சிகிச்சை மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த மருத்துவ மையங்களை உருவாக்கப் பெரும் முதலீடுகள் செய்யப்படவுள்ளன. குறிப்பாக, புற்றுநோய் சிகிச்சைக்கான 17 உயிர் காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது நோயாளிகளின் நிதிச் சுமையை வெகுவாகக் குறைக்கும்.
மருந்துத் துறையில் தற்சார்பு அடைய 'பயோ பார்மா சக்தி' என்ற புதிய திட்டம் ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இது உள்நாட்டிலேயே மருந்துகளை உற்பத்தி செய்யவும், இறக்குமதியைக் குறைக்கவும் உதவும். மேலும், முதியோர் பராமரிப்புக்காக 1.5 லட்சம் பயிற்சி பெற்ற பராமரிப்பாளர்களை உருவாக்கவும், வட இந்தியாவில் புதிய "நிம்ஹான்ஸ்" மனநல மருத்துவமனையை அமைக்கவும் பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையிலும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக, உள்கட்டமைப்பு மேம்பாடு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் மலிவான மருந்து விலைகள் ஆகியவற்றின் மூலம் 2047-க்குள் ஒரு வலிமையான சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதே இந்த பட்ஜெட்டின் இலக்காகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221616®=3&lang=1
***
TV/PD/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2222289)
வருகையாளர் எண்ணிக்கை : 12