குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் துணைத் தலைவர் 'மை பாரத்-என்.எஸ்.எஸ்' குடியரசு தின முகாம் தன்னார்வலர்களுடன் கலந்துரையாடினார்

प्रविष्टि तिथि: 27 JAN 2026 8:35PM by PIB Chennai

குடியரசுத் துணைத் தலைவர் இன்று புதுதில்லியில் உள்ள தனது இல்லத்தில், 2026-ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற 'மை பாரத்-நாட்டு நலப்பணித் திட்ட' (என்எஸ்எஸ்)  தன்னார்வலர்களுடன் கலந்துரையாடினார்.

மாணவர்களிடையே உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், இளம் தன்னார்வலர்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், அவர்களின் உற்சாகமும் ஒழுக்கமும் இந்தியாவின் இளைய சக்தியின் வலிமையை வெளிப்படுத்துவதாகவும் கூறினார். தமது மாணவர் பருவத்தில் தாமும் என்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்ததை நினைவு கூர்ந்த அவர், இளைஞர்களிடையே நற்பண்பு, ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்பை உருவாக்குவதில் இந்த அமைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

கடமைப் பாதையில்  கம்பீரமாக அணிவகுத்துச் சென்ற தன்னார்வலர்களைப் பாராட்டிய அவர், 'மை பாரத்-என்.எஸ்.எஸ்' திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்திற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தியாவின் வலிமை தேசிய ஒருமைப்பாட்டிலும், சமூகத்திற்கான கூட்டுச் சேவையிலும் அடங்கியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், சர்தார் வல்லபாய் படேல் போன்ற தலைவர்கள் போற்றிய ஒற்றுமை மற்றும் சேவை மனப்பான்மை நாட்டின் வளர்ச்சிக்கு இன்றும் அவசியமானது என்றார்.

'வளர்ச்சியடைந்த பாரதம் 2047' என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வை குறித்துப் பேசிய குடியரசுத் துணைத் தலைவர், இந்த இலக்கை அடைய ஒழுக்கமும், தேசபக்தியும் கொண்ட குடிமக்கள் தேவை என்று கூறினார். இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தோடு சமூக நல்லிணக்கம் மற்றும் தார்மீக வலிமையும் அவசியம் என்றும், இவற்றை என்.எஸ்.எஸ் நடவடிக்கைகள் வளர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எழுத்தறிவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளில் மாணவர்களின் பங்களிப்பை அவர் வெகுவாகப் பாராட்டினார்.

இறுதியாக, என்.எஸ்.எஸ் அமைப்பின் தாரக மந்திரமான "எனக்காக அல்ல, உனக்காக" (Not Me, But You) என்பதை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். குறுக்கு வழிகளைத் தவிர்த்து, பொறுமை மற்றும் விடாமுயற்சியுடன் தேச நலனுக்காகப் பணியாற்றுமாறும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219334&reg=3&lang=2

***

TV/VK/SE


(रिलीज़ आईडी: 2219381) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी