இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடலின் இரண்டாம் நாள் நிகழ்வுகளை அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 10 JAN 2026 5:32PM by PIB Chennai

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் நடத்தப்படும் வளர்ச்சியடைந்த இளம் தலைவர்கள் உரையாடலின் 2-ம் நாள் நிகழ்வுகள், புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்றன. இந்த அமர்வில் மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல், மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே, இளைஞர் விவகாரத் துறை செயலாளர் டாக்டர் பல்லவி ஜெயின் கோவில், இளைஞர் விவகாரத் துறை கூடுதல் செயலாளர் திரு நிதேஷ் குமார் மிஸ்ரா மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுவாமி விவேகானந்தருக்கு அஞ்சலி செலுத்தி, பாரம்பரியமாக தீபம் ஏற்றி இன்றைய நிகழ்வு தொடங்கியது.

தொடக்க அமர்வில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா, வினாடி வினா சுற்றில் கிட்டத்தட்ட 50 லட்சம் இளைஞர்கள் பங்கேற்றனர் என்றார். அவர்களில் மூன்று லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டு, கட்டுரைகளைச் சமர்ப்பிக்க தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்று அவர் எடுத்துரைத்தார். இந்தக் கட்டுரைகள் புகழ்பெற்ற பேராசிரியர்களால் மதிப்பீடு செய்யப்பட்டன என்றும் அதைத் தொடர்ந்து 30,000 இளைஞர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைக்க மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தக் குழுவிலிருந்து, 3,000 இளம் தலைவர்கள் இறுதியாகத் தங்கள் கருத்துக்களைச் செம்மைப்படுத்தி, பிரதமர் திரு நரேந்திர மோடி முன் நேரடியாக முன்வைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி, இளைஞர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய வழிநடத்துவதாகவும், தேசிய இளைஞர் தினத்தில் பல மணிநேரங்கள் இளம் தலைவர்களுடன் நேரடியாக கலந்துரையாடி கருத்துக்களைக் கேட்பார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இளைஞர்கள்தான் நாட்டின் உந்து சக்தி என்பதை வலியுறுத்திய திரு மன்சுக் மண்டவியா, அரசியல் ஆதரவு இல்லாமல், அடிமட்டத்திலிருந்து தலைமையை உருவாக்குவதற்கும், நாட்டின் எதிர்காலத் தலைவர்களை வளர்ப்பதற்கும் இந்த உரையாடல் ஒரு தளம் என்று குறிப்பிட்டார். இளைஞர்கள் தங்கள் கடமைகளை ஒழுக்கத்துடனும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  நாடு சீராக முன்னேறி வருவதாகவும், வேலையின்மை விகிதம் கணிசமாகக் குறைந்து வருவதாகவும் அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டார்.

 தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல் பேசுகையில், ஒருவரின் வாழ்க்கையின் வேகமும் திசையும் தினசரி அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளின் தரத்தால் தீர்மானிக்கப்படுகிறது என்றார். இளம் தலைவர்கள் முடிவெடுக்கும் திறனை ஆரம்ப கட்டத்திலிருந்தே உணர்வுபூர்வமாக வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

2026 ஜனவரி 12 அன்று இதில் பிரதமர் பங்கேற்று, நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட இளம் தலைவர்களுடன் நேரடியாக உரையாடவுள்ளார். உரையாடலின் 3-ம் நாளான நாளை (ஜனவரி 11), இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ-வின் விண்வெளி வீரர்களுடன் ஊக்கமளிக்கும் உரையாடல்கள், தொடர்ச்சியான கருப்பொருள் விவாதங்கள், கலாச்சார கொண்டாட்டம் ஆகியவை இடம்பெறும்.

(Release ID: 2213265)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2213315) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada , Malayalam