சுரங்கங்கள் அமைச்சகம்
தேசிய முக்கிய கனிம இயக்கம் மற்றும் நீடித்த சுரங்கப் பணி மீதான கவனத்துடன் தேசிய கனிம சிந்தனை முகாம் நிறைவடைந்தது
प्रविष्टि तिथि:
10 JAN 2026 4:42PM by PIB Chennai
குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற தேசிய கனிம சிந்தனை முகாம் தேசிய முக்கிய கனிம இயக்கம் மற்றும் நீடித்த சுரங்கப் பணி மீதான கவனத்துடன் நிறைவடைந்தது.
இந்த முகாமில் உரையாற்றிய மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி ஒருங்கிணைந்த மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான அடித்தளமாக சுரங்கத் துறையை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நலனுக்காக மாவட்டக் கனிம அறக்கட்டளை நிதியைத் திறம்பட பயன்படுத்துதல், சுரங்க மூடலுக்கு வலுவாகத் திட்டமிடல், கனிமத் தொகுதிகளை சரியான நேரத்தில் ஏலம் விடுவதன் முக்கியத்துவம் ஆகியவற்றையும் அவர் வலியுறுத்தினார். சுரங்கத் துறை சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் மாநிலங்கள் முக்கியமானவை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.மேலும் 2047-க்குள் தற்சார்பு இந்தியா மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா நோக்கங்களுக்கு ஏற்ப பொறுப்பான சுரங்கப் பணியை ஊக்குவிப்பதற்கும் உள்நாட்டுக் கனிமப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் மத்திய அரசின் தொடர்ச்சியான ஆதரவை அமைச்சர் உறுதி செய்தார்.
சுரங்க அமைச்சக செயலாளர் திரு பியூஷ் கோயல் பேசுகையில், நாட்டின் வளர்ச்சிக்கு சுரங்கத் துறையின் பங்களிப்பை அதிகரிக்க சுரங்கங்களை சரியான நேரத்தில் செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். விரைவான மற்றும் பொறுப்புணர்வு மிக்க நடைமுறைகளின் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார். நாட்டின் வளர்ச்சித் தேவைகளுக்கு ஏற்ப சுரங்க நடவடிக்கைகளை விரைவுபடுத்த சுரங்க அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
இரண்டு நாள் நடைபெற்ற இந்த சிந்தனை முகாமில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், ஜல்சக்தித் துறை அமைச்சர் திரு சி. ஆர். பாட்டீல், மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியா, பீகார் துணை முதலமைச்சர் திரு விஜய் குமார் சின்ஹா, மாநில அரசுகளின் அமைச்சர்கள் மற்றும் சுரங்க அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். எட்டுக்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுரங்கத் துறை அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் இந்த விவாதங்களில் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213239®=3&lang=2
****
TV/SMB/SH
(रिलीज़ आईडी: 2213296)
आगंतुक पटल : 8