விவசாயத்துறை அமைச்சகம்
சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய வேளாண் அமைச்சர் உயர்மட்ட ஆலோசனை
प्रविष्टि तिथि:
08 JAN 2026 8:04PM by PIB Chennai
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சௌஹான் தலைமையில், புது தில்லியில் உள்ள கிருஷி பவனில் இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி , ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு , உலக உணவுத் திட்டம் (WFP) மற்றும் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் உள்ளிட்ட முக்கிய சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நீண்டகாலக் கொள்கைகளை வகுப்பது மற்றும் நிலையான வளர்ச்சித் திட்டங்களில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், இந்தியா உணவுப் பற்றாக்குறை உள்ள நாடு என்ற நிலையிலிருந்து மாறி, இன்று வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக உருவெடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துள்ள இந்தியா, தற்போது ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் சிறந்த வேளாண் நடைமுறைகளை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவும், உலகளாவிய கண்டுபிடிப்புகளைக் கற்றுக்கொள்ளவும் இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் பங்கேற்ற பிரதிநிதிகள், சிறு விவசாயிகளுக்கான சந்தை வாய்ப்புகள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் பங்களிப்பு, டிஜிட்டல் விவசாயம் மற்றும் பருவநிலை மாற்றத்தைத் தாங்கி வளரும் பயிர்களை ஊக்குவிப்பது போன்ற அம்சங்களில் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். பிரதிநிதிகளின் ஆலோசனைகளுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், இவை வேளாண் துறையின் எதிர்காலத் திட்டமிடலுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212613®=3&lang=1
செய்தி வெளியீட்டு எண் 2212613
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2213170)
आगंतुक पटल : 6