சுற்றுலா அமைச்சகம்
இந்திய சுற்றுலாத் துறையின் அசுர வளர்ச்சி: உள்கட்டமைப்பு மற்றும் புதிய திட்டங்கள் குறித்த முக்கியத் தகவல்கள்
प्रविष्टि तिथि:
08 JAN 2026 6:39PM by PIB Chennai
இந்திய சுற்றுலாத் துறை 2024-ஆம் ஆண்டில் மிகப்பெரிய மைல்கற்களை எட்டியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 2.05 கோடி சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். இதன் மூலம் சுமார் ரூ.2.93 லட்சம் கோடி அந்நியச் செலாவணி ஈட்டப்பட்டுள்ளது. உள்நாட்டுச் சுற்றுலா பயணிகளின் வருகையும் 294.8 கோடியாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. சுற்றுலாத் துறையை மேம்படுத்த மத்திய அரசு 2015-இல் தொடங்கிய 'ஸ்வதேஷ் தர்ஷன்' திட்டத்தின் கீழ், இதுவரை ரூ.5,290 கோடி மதிப்பிலான 75 முக்கியத் திட்டங்கள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
தற்போது இத்திட்டம் 'ஸ்வதேஷ் தர்ஷன் 2.0' என மேம்படுத்தப்பட்டு, நிலையான மற்றும் பொறுப்பான சுற்றுலாத் தலங்களை உருவாக்கும் நோக்கில் 53 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஆன்மீகச் சுற்றுலாவை மேம்படுத்தும் 'பிரசாத்' திட்டத்தின் கீழ் 31 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பழங்குடியின மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த 1,000 'பழங்குடியின கிராமத்தில் தங்கும் வசதிகளை உருவாக்கும் திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், 2024-இல் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 6.44 லட்சமாக அதிகரித்துள்ளது. இது 2020-ஆம் ஆண்டை விட 252% கூடுதலாகும்.
சுற்றுலாப் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த "சுற்றுலாத் தோழன் மற்றும் சுற்றுலாத் தோழி" போன்ற திட்டங்கள் மூலம் 4,300-க்கும் மேற்பட்டோருக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை இந்தியாவின் தூதுவர்களாக மாற்றும் 'சலோ இந்தியா' பிரச்சாரத்தின் கீழ், ஒரு லட்சம் இலவச விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி, சர்வதேச அளவில் மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் நடத்துவதற்கான மையமாக இந்தியாவை மாற்ற 'மீட் இன் இந்தியா' (இந்தியாவில் சந்திப்போம்) என்ற தனி முத்திரையுடன் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212575®=3&lang=1
செய்தி வெளியீட்டு எண் 2212575
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2212640)
आगंतुक पटल : 16