நிதி அமைச்சகம்
ரூ. 40 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் கைது
प्रविष्टि तिथि:
07 JAN 2026 6:36PM by PIB Chennai
துபாய் மற்றும் பங்களாதேஷை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த சர்வதேச தங்க கடத்தல் கும்பலை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கண்டுபிடித்து சிலரை கைது செய்துள்ளது. தில்லி மற்றும் அகர்தலாவில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் 2.9 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரகசியத் தகவலின் அடிப்படையில், ஜனவரி 6 ஆம் தேதி தில்லியில் உள்ள ஒரு சரக்கு போக்குவரத்து கிடங்கில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது திரிபுராவின் அகர்தலாவிலிருந்து வந்த இரண்டு பார்சல்களைப் பெற முயன்ற கடத்தல் கும்பலின் முக்கிய உறுப்பினர் ஒருவரை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். அந்த பார்சல்களைச் சோதனையிட்டபோது, சர்வதேச உருக்காலை முத்திரையுடன் கூடிய 15 கிலோ வெளிநாட்டுத் தங்கம் பிடிபட்டது. இதன் மதிப்பு சுமார் 20.73 கோடி ரூபாயாகும்.
இதனைத் தொடர்ந்து தில்லி மற்றும் அகர்தலாவில் பல இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில், மேலும் 14.2 கிலோ வெளிநாட்டுத் தங்கம் மற்றும் இந்திய, பங்களாதேஷ் ரூபாய் நோட்டுகள் அடங்கிய 2.90 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. ஒட்டுமொத்தமாக 29.2 கிலோ தங்கம் மற்றும் 2.9 கோடி ரூபாய் பணம் சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சர்வதேசக் கும்பல், இந்தோ - வங்கதேச எல்லை வழியாகத் திரிபுராவிற்குள் தங்கத்தைக் கடத்தி வந்து, பின்னர் அங்கிருந்து உள்நாட்டுச் சரக்கு சேவைகள் மூலம் தில்லிக்கு அனுப்பி வந்ததும், இதற்கு துபாய் மற்றும் பங்களாதேஷை சேர்ந்தவர்கள் உதவியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அகர்தலாவில் நகைக்கடை நடத்தும் சில உள்ளூர் நபர்களுக்கும் இதில் தொடர்பிருப்பது உறுதியாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212165®=3&lang=1
செய்தி வெளியீட்டு எண்: 2212165
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2212257)
आगंतुक पटल : 24